காப்பியத்தின் தோற்றம் வளர்ச்சி கட்டுரை

Kappiyam Thotramum Valarchiyum In Tamil

இந்த பதிவில் தமிழ் இலக்கியங்களில் முக்கியமான “காப்பியத்தின் தோற்றம் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

காப்பியம் என்ற சொல்லில் காப்பு+இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன.

காப்பியத்தின் தோற்றம் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. காப்பியம் விளக்கம்
  3. காப்பிய மரபு
  4. தமிழ்க் காப்பியங்கள்
  5. இந்தியக் காப்பியங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது.

இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம்.

உலகக் காப்பியங்கள் தோன்றிப் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளமையைக் காணலாம். காப்பியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காப்பியம் விளக்கம்

காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை ஆகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம்.

காப்பியம் ஆங்கிலத்தில் EPIC எனப்படுகின்றது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர். காப்பியம் என்ற சொல்லில் காப்பு+இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன.

பழமரபுகளைக் காப்பது ‘காப்பியம்’ எனக் கருத இடம் உண்டு. காப்பிய இலக்கணம் வடமொழியில் ‘காவ்யா’ என்றால் பாட்டு என்பது பொருள்.

கவியால் படைக்கப்படுவன அனைத்தும் ‘காவியமே’. எனவே காவ்யா – காவியம் – காப்பியம் என ஆகியது என்பர்.

தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது.

காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

காப்பிய மரபு

காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் உட்பொதிவாக வைப்பது அல்லது வெளிப்படையாகச் கூறுவது மரபாகும்.

காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும் இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம்பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன.

காப்பியத்தைத் தொடங்கும் போது வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறுவதும் மரபாக உறுதிப்பட்டது.

தமிழ்க் காப்பியங்கள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் வரையுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது.

அதாவது, தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம்.

இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற பெருமைக்குரியது சிலப்பதிகாரம்தான்.

இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும்.

இந்தியக் காப்பியங்கள்

காப்பியங்கள் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அவ்வகையில் இந்திய சமுதாயத்தை ஒழுங்கிணைப்பதிலும் இந்தியக் காப்பியங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைப்பதில் இவை நன்மை, தீமைகளை அடையாளப்படுத்தி அறத்தை இனம் காட்டுகின்றன.

முடிவுரை

காப்பியங்கள் அறத்தின் அடிப்படையிலான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை எடுத்துக் கூறி சமுதாயத்தை நல்வழிப்படுத்த உதவுகின்றன.

பண்டைய கால வாழ்க்கை முறை, சமயம், அரசியல் பண்பாடு, நெறிமுறைகள் முதலானவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகின்றது. இத்தகைய காப்பியங்களைப் படித்துப் பயன்பெறுவோம்.

You May Also Like:
கல்வி கண் திறந்தவர் கட்டுரை
அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை