காலம் பொன் போன்றது கட்டுரை

kaalam pon pondrathu katturai in tamil

இந்த பதிவில் “காலம் பொன் போன்றது கட்டுரை” பதிவை காணலாம்.

காலம் மிக வேகமாக விரைந்து கொண்டிருக்கின்றது. காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்கப் போவதில்லை.

காலம் பொன் போன்றது கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காலத்தின் முக்கியத்துவம்
  • காலமும் கடமையும்
  • காலம் பொன் போன்றது
  • காலத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
  • முடிவுரை

முன்னுரை

“காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்றார் பேரறிஞர் அண்ணா. மக்களின் வாழ்வுக்காலம் குறைவானது. இளமைப்பருவம், உறக்கம், ஓய்வு, முதுமை என படிப்படியாக பெரும் பகுதி வாழ்வுக்காலம் குறைந்து விடுகிறது.

எனவே எஞ்சியிருக்கும் காலத்தை பொன் போன்று மதித்து போற்றி வாழ வேண்டியது இன்றியமையாதது ஆகும். இந்த கட்டுரையில் காலம் ஏன் பொன் போன்றது பற்றி நோக்கலாம்.

காலத்தின் முக்கியத்துவம்

காலம் பொன் போன்றது என அனைவரும் சொல்ல கேள்விபட்டிருப்போம். ஆனால் காலம் பொன்னையும் விட எமது உயிருக்கு நிகரான அளவிற்கு பெறுமதி கொண்டது.

ஏனெனில் எமது உயிரானது உடலை விட்டு பிரிந்தால் மீண்டும் வராது அதே போல தான் கடந்து போன காலமும் ஒரு நொடி கூட மீண்டும் வராது. எனவே திருத்த முடியாத தவறுகளில் ஒன்றாக காலத்தினை வீணடித்தல் காணப்படுகின்றது.

காலமும் கடமையும்

காலம் மிக வேகமாக விரைந்து கொண்டிருக்கின்றது. காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்கப் போவதில்லை. இதனை இளமையில் கல், பருவத்தே பயிர் செய் என பொருள் நிறைந்த அறிவுரைகள் தெளிவாக்கும்.

உழுகிற நேரத்தில் ஊரைச் சுற்றிவிட்டு அறுவடை நேரத்தில் அறிவாளைத் தூக்கிக் கொண்டு போனால் நெல்லுக்கு பதிலாக புல்லைத்தான் அறுக்க முடியும்.

அதுபோல ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை போல இளமைக் காலத்திலே கல்விதனை கற்க வேண்டும்.

படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு மாணவனும் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை, படித்த பள்ளிக்கு செய்ய வேண்டிய கடமை, சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை எனப் பல உண்டு. அவற்றை காலம் அறிந்து செய்ய வேண்டும்.

காலம் பொன் போன்றது

காலத்தை வீணாக்குதல் கூடாது. பொழுது போகவில்லை என்பதற்காக சூதாடுவது, குடிப்பது என காலத்தை வீணாக்க கூடாது வீண் களியாட்டங்களில் ஈடுபட்டும், பயனற்ற பேச்சுகளைப் பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

எக்காலத்திலும் முயற்சியோடு உழைப்பவர்கள் வறுமையில் வாடுவதில்லை. காலம் அறிந்து செயலாற்றின் வெற்றிப் பாதையில் வீறு நடை போட முடியும்.

காலத்தின் அருமைகளை உணர்ந்தவர்களே சாதனையாளர்கள். இவர்கள் கிடைக்கின்ற காலத்தை வீணாக்காமல் நல்ல முறையில் செலவழித்து வாழ்வில் வெற்றி பெறுகின்றார்கள்.

காலத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்

காலம் கடவுளால் தரப்பட்ட அரிய கொடை அதன் அருமை பெருமைகளை அறியாமல் உலகில் பெரும்பாலானோர் உள்ளனர். காலத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

நாம் என்ன வேலை செய்பவராக இருந்தாலும் எமது கடமைகளை உரிய காலத்தில் செய்ய வேண்டும். இதனை நன்றே செய் அதை இன்றே செய் என்ற நன்மொழி விளக்குகின்றது.

நேரசூசி அமைத்து எமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதை பின்பற்ற வேண்டும்.

ஓய்வு நேரங்களை கூட பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் வீட்த்தோட்டம் செய்தல், புத்தகம் படித்தல், பெரியவர்களுடன் அனுபவம் பகிர்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை

காலத்தின் அருமையை உணர்ந்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்து முடித்து வாழ்வில் வெற்றி பெறுவோம்.

காலமறிந்து கடமைதனை உணர்ந்து பயனுள்ள செயல்களை அறிந்து செய்யும் செயல்கள் சிறப்புற அமைந்து என்றும் புகழோடு வாழ்வோம்.

You May Also Like:
மின்சாரத்தின் பயன்கள் கட்டுரை
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுரை