குயிலி வரலாறு

kuyili history in tamil

வீரம் விளைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிரான பல போராட்டங்களில் பல பெண்கள் ஆண்களுக்கு நிகராக வீரத்துடன் தாய் நாட்டிற்காக போராடி வீரமரணம் அடைந்துள்ளனர். அந்த வரிசையில் வீரத்தாய் குயிலியும் ஒருவராக காணப்படுகின்றாள்.

உலகில் முதலாவது தற்கொலைப்படை போராளிகள் இரண்டாம் உலகப்போரின் போதே தோற்றம் பெற்றதாக பலர் கூறுகின்றனர். ஆனால் இரண்டாம் உலகப்போரிற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக வேலுநாச்சியார் ஆட்சிக் காலத்திலேயே, உலகின் முதல் தற்கொலைப் படைப்போராளியாக தமிழ் சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்த வீரப்பெண்ணாக குயிலி காணப்படுகிறாள்.

தந்தைபெரிய முத்துக்கருப்பன்
தாய்ராக்கு
குயிலி வரலாறு

ஆரம்ப வாழ்க்கை

குயிலியின் தாயாரான ராக்கு வீரமிக்க துணிச்சலான பெண்ணாக காணப்பட்டார். அவர்களது விவசாயப் பயிர்களை ஒரு காளை தினமும் தொடர்ந்து நாசமாக்கி வந்தது. அந்த காளையின் அருகில் ஆண்களே செல்வதற்கு அச்சம் கொள்வர்.

ஆனால் ராக்கு அந்த காளையை துணிச்சலுடன் அடக்கமுட்பட்டு வீரமரணம் அடைந்தார். அதன் பின்னர் குயிலியும், தந்தையும் அவர்களது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு சிவகங்கை அருகில் உள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்திற்கு குடிப்பெயர்ந்தனர்.

குயிலி இயல்பாகவே அவளது தாயாரைப் போல துணிச்சலான வீரம் பொருந்தியவளாக காணப்பட்டாள்.

அத்துடன் அவளது தந்தையார் குயிலியின் சிறுவயது முதலே அவளுக்கு வேலுநாச்சியாரின் வீரசாகசங்களை கூறியும் தனக்கு தெரிந்த போர் முறைகளையும் கற்பிக்கிறார். அவை அனைத்திலும் குயிலி சிறப்பு பெற்று காணப்படுகிறாள்.

வேலுநாச்சியாரின் மெய்க்காவலாளி

வேலுநாச்சியாரை தனது முன்னோடியாக நினைத்து வளர்ந்த குயிலியை, அவளது தந்தையார் வேலுநாச்சியார் அம்மையை காண அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். வாயிற்காவலர்கள் அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்காமல் வெளியில் துரத்தி விடுகின்றனர்.

இந்த செய்தியை அறிந்த வேலுநாச்சியார் குயிலியையும் அவளது தந்தையையும் அழைத்து பார்த்துவிட்டு அரண்மனைக்குள் அவர்கள் எங்கும் சென்று வரலாம் என உத்தரவு வழங்கினார். குயிலையும் வேலுநாச்சியாருக்கான அனைத்து பணிவிடைகளையும் புரிந்து அவரது மனதில் இடம் பிடித்தவளாக மாறுகிறார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த சிவகங்கையின் மன்னரும் வேலுநாச்சியாரின் கணவனுமான மன்னர் முத்துவடிவநாதரை பிரிட்டிஷ் காரர்கள் சூழ்ச்சி செய்து சுட்டுக் கொல்கின்றனர்.

அதன்பின்னர், சுமார் எட்டு ஆண்டுகள் வேலுநாச்சியார் தலைமறைவாக இருந்து பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக படைகளை திரட்டி சிறப்புற பயிற்சி வழங்கி கொண்டிருந்தார்.

இவ்விடயம் பிரிட்டிஷ்காரர்களுக்கு தெரியவர, அவர்கள் வேலுநாச்சியாரை கொலை செய்ய தீர்மானிக்கின்றனர்.

இதற்கிடையில் வேலுநாச்சியாரின் சிலம்பாட்ட ஆசிரியரான வெற்றிவேல் என்பவர் குயிலியை அழைத்து அவளிடம் முக்கியமான ஓர் ஓலையை கொடுத்து “இதனை சிவகங்கை அரண்மனை அருகே இருக்கும் மல்லாரி இராஜன், என்பவரிடம் கொடுத்து விடு. இப்பணிக்காக இப்பணத்தை வைத்துக் கொள்.” என்று கூறி ஓலையையும், பணத்தையும் கொடுக்கிறார்.

அவற்றை பெற்று கொண்டு சென்ற குயிலியின் மனதில் சந்தேகம் ஏற்பட்ட அவ்வோலையை விரித்து படிக்கிறாள். அதில் வேலுநாச்சியாரின் போர் தந்திரங்கள் குறித்த பல தகவல்கள் இருப்பதை கண்ட குயிலி சற்றும் யோசிக்காமல் கையில் வாள் ஏந்தி சென்று வெற்றிவேலனது தலையை வெட்டி வீழ்த்துகிறார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த வேலுநாச்சியார் குயிலியின் ஒரு கையில் அரிவாளும் மறுகையில் ஓலையும் இருப்பதைக் கண்டு, ஓலையை வாசித்து பார்த்து உண்மைகளை அறிகிறாள். அதன்பிறகு குயிலியை அவரது மெய்க்காவலாளியாக நியமிக்கிறார்.

பெண்கள் படைத்தளபதியாக பதவி உயர்வு

வெள்ளச்சி நாச்சியாரை சிறைப்பிடித்தால் வேலுநாச்சியார் வீழ்வார் என எண்ணிய பிரிட்டிஷ்காரர், வெள்ளச்சிநாச்சியாரை சிறைப்பிடித்து அவரை காட்டுவழியாக கொண்டு செல்கின்றனர்.

அப்போது அவரை மீட்கச் சென்ற வேலுநாச்சியாரின் முன் பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவன் தூப்பாக்கியை நீட்டும் போது, அதனை கண்ட அடுத்த நொடியே குயிலி சிப்பாயின் கையை துண்டிக்கிறாள்.

பின் அடுத்த நொடியே அவளது தலையை கொய்கிறார். அத்துடன் வெள்ளச்சிநாச்சியாரையும் மீட்டும் வருகின்றனர்.

வேலுநாச்சியாரை கொலை செய்ய பிரிட்டிஷ்காரர்கள் மீண்டும் ஆள் அனுப்புகின்றனர். அவர்கள் வேலுநாச்சியாரை அணுக முன்பே அவர்களை கொலை செய்து பிரிட்டிஷ்காரர்களது சதியை முறியடிக்கின்றனர்.

குயிலியின் வீரதீரச் செயல்கள் வேலுநாச்சியாரை மேலும் கவர்கிறது. இதனால் பெண்கள் படைக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறார்.

பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான இறுதிப் போர்

பிரிட்டிஷ்காரர்களது தொடர் அச்சுறுத்தல்களை பொறுப்பது தவறு என எண்ணிய வேலுநாச்சியார், ஆங்கிலேயரை எதிர்க்க சிவகங்கை மக்களுக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

திப்பு சுல்தான் படை, பெரிய மருது படை, சின்னமருது படை, கோபால் நாயக்கர் படை, மக்கள் படை, குயிலி தலைமையில் வாள் படை, அலரி படை, விச்சரிவாள் படை, கவண்கற்படை என பெரும்படை திரண்டது.

இந்த படைகள் அனைத்தும் விருப்பாச்சிக்கு விரைந்தது. இவர்களது படை பெரியதாக இருந்தாலும் பிரிட்டிஷ்காரர்களிடம் காணப்பட்ட நவீன ஆயுதங்கள் பல இவர்களை அச்சுறுத்த செய்தன.

எனவே குயிலி யாருக்கும் தெரியாமல் உளவாளியாக மாறி சிவகங்கையில் பிரிட்டிஷ்காரரின் ஆயுதக் கிடங்கு எங்கு உள்ளது என்பதை அவளது தந்தையின் உதவியுடன் அறிகிறாள்.

அந்த ஆயுதக் கிடங்கை எப்படியாவது அழித்தால் தான் நாம் இந்த போரில் வெற்றியீட்டலாம் என்பதையும் அறிந்த குயிலி விஜயதசமி நாளில் சிவகங்கை அரண்மனை உள்ளே இருக்கும் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்குள் வழிபாடு மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதை அறிந்து அதனை வேலுநாச்சியாரிடம் அறிவித்து போர் செய்வதற்கு இதுவே சிறப்பான நாள் என்பதை கூறி, போர் புரிய உத்தரவையும் பெறுகிறாள்.

விஜயதசமி நாளில் சிவகங்கை அரண்மனை உள்ளே இருக்கும் இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் சாதாரண பெண்கள் போல வேலுநாச்சியாரும் அவரது பெண் போராளிகளும் பூக்கூடைகளுக்குள் ஆயுதம் தாங்கி செல்கின்றனர்.

பூஜை முடிந்து பொதுமக்கள் வெளியேறுகின்ற போது அதாவது பிரிட்டிஷ்காரர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் போர் புரிய ஆயத்தமாகின்றனர்.

அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஆயுத கிடங்கை நோக்கி செல்லும் தருவாயில், ஆயுதக் கிடங்கை நிர்மூலமாக்கினால் மட்டுமே நாம் வெற்றி பெறமுடியும் என்பதை நன்கு அறிந்த குயிலி தனது உடம்பில் விளக்கு எண்ணையை ஊற்றி கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்தி தனது உடலில் தீ மூட்டிய வண்ணம் “வீரவேல் வெற்றிவேல் ” என்று கூவிய வண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் குதித்து ஆயுதக் கிடங்கை நிர்மூலமாக்குகிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத பிரிட்டிஷ்காரர்கள் அதிர்ச்சி ஆகினர். வேலுநாச்சியாரின் படையணி அனைவரையும் அழித்து வெற்றிக் கொடி நாட்டியது.

குயிலியின் இச்செயல் அனைவரது உள்ளங்களிலும் ஆழமாக வேரூன்றி பதிந்தது. தனது நாட்டிற்காக தனது உயிரை துச்சமென கருதி உலகின் முதல் தற்கொலைப் போராளியாக வீரத்தாய் குயிலி காணப்படுகிறாள்.

You May Also Like:
மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு
தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு