சர்வதேச மது ஒழிப்பு தினம் | அக்டோபர் 2 |
World No Alcohol Day | October 2 |
மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு விளைவிக்கும். மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மட்டுமன்றி அவர்களைச் சார்ந்தவர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது.
மதுவால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றது. மூளை பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு உட்பட பல பாதிப்புகள் உடல் சார்ந்து ஏற்படுவதுடன் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்நோக்க நேரிடுகின்றது.
இன்றைய நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளனர். மது குடிப்பதை நாகரீகமாகக் கருதுகின்றனர். உலகில் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
சர்வதேச மது ஒழிப்பு தினம் வரலாறு
2008 இல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் (WHO) முடிவெடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையின் (WHA) கூட்டத்தில் உலகளாவிய மதுவிலக்கு நாள் நடைபெறுவதற்கான ஒரு முன்மொழிவு இந்தியாவால் முன்வைக்கப்பட்டது.
இந்த முன்மொழிவை இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் “டாக்டர் அன்புமணி ராமதாஸ்” அவர்கள் முன்வைத்தார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 2 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த முன்மொழிவுக்கு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 11 நாடுகளில் இருந்து ஆதரவு கிடைத்தது. முன்மொழிவின் அதே நாளில், 193 உலக சுகாதார அமைப்பு (WHO) உறுப்பினர்கள் மது தொடர்பான தீங்கைக் குறைக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும், சர்வதேச செவிலியர் கவுன்சில் உட்பட பல அமைப்புகள் இந்த தினத்தை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றன.
சர்வதேச மது ஒழிப்பு தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்
மது அருந்துவதால் ஏற்படும் உளவியல் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்த உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் மதுவால் ஏற்படும் இறப்புக்களைக் குறைத்து மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மது ஒழிப்பின் முக்கியத்துவம்
மது ஒழிப்பின் அவசியத்தை எல்லா மட்டத்திலும் கொண்டு சேர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உகந்த நாளாக இந்நாள் உள்ளது. மது உடல் மட்டுமல்லாது புலன் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.
இளைய சமுதாயத்தினர் வழிதவறிச் செல்வதற்கும் இதுவே முக்கிய காரணமாகும். இத்தகைய மது ஒழிப்பு என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியமான ஒன்றாகும்.
மதுப்பழக்கம் ஒரு நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகத்தில் ஏற்படுகின்ற வன்முறை, சட்டவிரோத செயற்பாடுகள் போன்றவற்றிற்கும் மது ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.
இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கையை சீரழிக்கும் முக்கிய பழக்கவழக்கங்களில் மதுவும் ஒன்றாகும். மதுவுக்கு அடிமையான மனிதன் சமுதாய நன்மதிப்பை இழப்பதோடு பொருளாதார சிக்கல்களையும் சந்திக்க நேரிடுகின்றது.
எனவே எல்லாத் தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மதுவை என்ன விலை கொடுத்தாவது ஒழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.
குடும்பங்களின் மகிழ்விற்கும் தனிமனிதனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் மது ஒழிப்பு இன்றியமையாததாகும்.
மனக்கட்டுப்பாட்டுடன் செயல்படும்போது எந்த சூழ்நிலைகளிலும் மதுவை விரும்பும் மனம் ஏற்படாது. எனவே மனக் கட்டுப்பாட்டுடன் மதுவை வெறுப்போம். மது ஒழிப்பிற்குத் துணைநிற்போம்.
You May Also Like : |
---|
மது பற்றிய கட்டுரை |
மனிதனை குடிக்கும் மது கட்டுரை |