சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

suthanthira porattathil pengalin pangu katturai in tamil

இந்திய சுதந்திரம் மென்மையான அகிழ்மை வழிப் போராட்டங்களால் மட்டும் பெறப்பட்டதல்ல. லட்சக்கணக்கான ஆண், பெண் உயிர்த் தியாகங்களாலும் பெறப்பட்டதாகும்.

அதிலும், இந்திய திருநாட்டில் விடுதலைக்கு வித்திட்ட தியாகங்கள் வரிசையில் எப்போதும் பெண்களுக்குச் சிறப்பிடமுண்டு. அதிலும் தமிழகப் பெண்களின் பங்கு போற்றுதற்குரியதாகும்.

சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெண் விடுதலை வீரர்கள்
  • வேலு நாச்சியார்
  • ஜான்சிராணி லட்சுமிபாய்
  • ஜல்காரிபாய்
  • முடிவுரை

முன்னுரை

அந்நியர்களிடமிருந்து அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய திருநாட்டின் விடுதலைக்கு உழைத்த வீரர்கள் எண்ணற்றோர். அவர்களின் பெண் விடுதலை வீரர்களின் பங்கு மகத்தானது.

பிரித்தானியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றோம் என்றால் அது இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் வீரத்தாலும், தியாகத்தாலும்தான் ஆகும்.

பெண் விடுதலை வீரர்கள்

வடக்கே ஜான்சி ராணி, லட்சுமிபாய்க்குத் துணையாய் இருந்த ஐல்காரிபாய், ராணி அவந்திபாய், லட்சுமி கௌல், அன்னிபெசன்ட் அம்மையார், சரோஜினிநாயுடு, விஜயலட்சுமி பண்டிட்,

“ஒத்துழையாமை” இயக்கத்திற்கு தோள் கொடுத்த கடலூர் அஞ்சலையம்மாள், “உப்பு சத்தியாக்கிரகம்” நடத்திய ருக்மணி லட்சுமிபதி, “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் சிறை சென்ற கிருஷ்ணம்மாள்,

“ஜெகநாதன் அஹிம்சை போரில்” சிறை சென்ற எஸ்.என்.சுந்தராம்பாள், “கள்ளுக்கடை மறியல்” நடத்திய அம்புஜம்மாள், முதலில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான ஜானகி அம்பாள், கதராடை பதமாசனி அம்மாள் என பல பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

வேலு நாச்சியார்

வேலுநாச்சியார் செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தால் தம்பதியினருக்கு 1730 ஆம் ஆண்டு பிறந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியாருக்கே உரியது.

சிவகங்கை தலைநகரான காளையர் கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்ட போது வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லை என்பதனை நிரூபித்தார்.

இவர் “வீரமங்கை” “தென்னிந்தியாவின் ஜான்சி ராணி” எனவும் அழைக்கப்பட்டார்.

ஜான்சிராணி இலட்சுமிபாய்

இந்தியப் பெண்களின் வீரம் உலகில் வேறு யாருக்கும் சளைத்தது இல்லை என்று ஆங்கிலேய அரசுக்கு நிரூபித்துக் காட்டியவர் ஜான்சிராணி இலட்சுமிபாய் ஆவர்.

1857 இந்திய கிளர்ச்சியின் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாவார்.

பிரித்தானியருக்கு எதிராக படைகளை திரட்டினார், நாட்டின் உரிமைக்காய் போர் நடத்தினார், இன்னுயிரையும் போர்க்களத்தில் இழந்ததார். இன்றும் நமது மகளிரின் லட்சிய நாயகியாக இவர் போற்றப்படுகின்றார்.

ஜல்காரிபாய்

ஜல்காரிபாய் உத்தரப் பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியில் போல்ஜா என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1830 ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி பிறந்தார். இவர் ஜான்சியின் ராணி லட்சுமிபாயினுடைய பெண்கள் படையைச் சேர்ந்தவர்.

1857 இந்திய கிளர்ச்சியின் போது ஜான்சி போரில் முக்கிய பங்கு வகித்த ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் ஆவார். ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில் ஜல்ஹாரிபாய் ராணி லட்சுமிபாயை போல் உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கினார்.

முடிவுரை

இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் போரில் பெண்கள் பங்கேற்றனர் என்பது பெருமைக்குரியதாகும். இப்படி பலரால் உதிரம் சிந்தி, உயிர் தந்து பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது நமது கடமையாகும். இதற்கு வந்தனம் செய்து வீரவணக்கம் சொல்வது பெருமைக்குரியதாகும்.

You May Also Like:

சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டுரை

சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் கட்டுரை