இந்த பதிவில் “சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டுரை” பதிவை காணலாம்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளால்தான் இன்று நாம் சுதந்திர இந்திய நாட்டில் மகிழ்ச்சியாக வாழ முடிகின்றது.
சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுதந்திரப் போருக்கு முன்னர்
- மகாத்மா காந்தி
- கொடிகாத்த குமரன்
- புரட்சியாளர்களின் புரட்சி முழக்கம்
- முடிவுரை
முன்னுரை
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றானது பல இந்தியர்களின் வேர்வையாலும், இரத்தத்தாலும் கிடைக்கப்பெற்றது என்றால் அதுமிகையல்ல.
அன்னியர்களின் பிடியிலிருந்து பாரதத்தை விடுவித்து எம்மை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைப்பதற்கு சுதந்திரத் தியாகிகள் பல இன்னல்களையும், கொடுமைகளையும் அனுபவித்தனர்.
விடுதலைப் போரில் வீர தீரத்துடன் பங்கேற்ற வீரமறவர்களின் தியாகத்தின் காரணமாக பேரின்ப சுதந்திரத்தை இந்திய தேசம் அடைந்தது.
இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகள் பாராட்டத்தக்கவர்கள் மட்டுமன்றி என்றென்றும் போற்றுதற்குரியவர்களாவர்.
சுதந்திர போருக்கு முன்னர்
இந்திய விடுதலை வரலாற்றில் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் முதல் விடுதலைப் போர் என்று கூறப்படுகின்றது. விடுதலைப் போருக்கு முன்பே விடுதலைக்குக் குரல் கொடுத்த பெருமை தமிழகத்தையே சாரும்.
“வானம் பொழிகின்றது பூமி விளைகின்றது உனக்கேன் வரிகொடுக்க வேண்டும்?” என்று வீர முழக்கமிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவரது தம்பி ஊமைதுரையும், சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதுபாண்டியர்களும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக குரல் கொடுத்தனர்.
மகாத்மா காந்தி
இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர்களில் மகாத்மா காந்தியும் ஒருவராவார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “இந்தியாவின் தேசப்பிதா” என்று அழைக்கப்படுகிறார்.
இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தது மட்டுமன்றி ஏனைய பல நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக விளங்கியது.
“உப்பு சத்தியாகிரகம்”, “வெள்ளையனே வெளியேறு”, “ஒத்துழையாமை இயக்கம்”, ஆங்கிலேய அரசுக்கு வரி கொடுப்பதை நிறுத்தி “வரிகொடா இயக்கம்”, கள்ளுக்கடை மறியல், வெளிநாட்டுப் பொருள் புறக்கணித்து சுதேசி பொருட்களையே பயன்படுத்துதல், தனிநபர் அறப்போர், உண்ணா விரதம் போன்ற அறவழி போராட்டங்களை ஆங்கிலேய அரசுக்கு எதிராக காந்தியடிகள் நடத்தினார்.
கொடிகாத்த குமரன்
இவரது இயற்பெயர் குமாரசாமி ஆகும். காந்தியடிகளின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமாரசாமி நாட்டு விடுதலைக்காக காந்திய அறவழியில் போராட மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார்.
1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடந்த போராட்ட அணிவகுப்பின் போது ஆங்கிலேய காவலர்களால் தலையில் தடியால் தாக்கப்பட்டார்.
உயிர் பிரியும் நிலையிலும் விடுதலை இயக்கக் கொடியினை அந்நியர்களுக்கு தலை வணங்காமல் கையில் தூக்கிப் பிடித்து நாட்டின் மானம் காத்தமையால் “கொடிகாத்த குமரன்” என்று பின்னாளில் மக்களால் போற்றப்பட்டார்.
புரட்சியாளர்களின் புரட்சி முழக்கம்
1942 இல் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடக்கினார். அப்போது ‘செய் அல்லது செத்துமடி’ என்று முழக்கமிட்டார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ‘இரத்தத்தைக் கொடுங்கள் சுதந்திரம் தருகின்றேன்’ என்று முழக்கமிட்டார்.
பகத்சிங் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றும் ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என்று திலகரும் வீர முழக்கமிட்டனர்.
முடிவுரை
150 ஆண்டுகள் நம் நாட்டை ஆங்கிலேயர் அடிமைப்படுத்தி ஆண்டனர். அடிமைத்தனத்தின் வலியை உணர்ந்த பின்னரே மக்கள் கிளர்ந்தெழுந்து தங்கள் வலிமையை வெளிப்படுத்தினர்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளால்தான் இன்று நாம் சுதந்திர இந்திய நாட்டில் மகிழ்ச்சியாக வாழ முடிகின்றது. எனவே சுத்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை என்றும் மனதில் நிறுத்துவோம்.
You May Also Like : |
---|
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை |
என் கனவு இந்தியா கட்டுரை |