தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை

Thanneer Semippu Katturai In Tamil

இந்த பதிவில் பூமியின் இயக்கத்திற்கு அவசியமான “தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

தண்ணீரானது அனைத்து உயிர்களும் தாவரங்களும் உயிர் வாழ இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே.

தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தண்ணீரின் பிறப்பிடம்
  3. தண்ணீரின் முக்கியத்துவம்
  4. தண்ணீரை பாதுகாக்கும் வழிமுறைகள்
  5. முடிவுரை

முன்னுரை

நீரின்றி அமையாது இவ்வுலகம்” என்ற திருக்குறளின் ஒரேயொரு வரியிலியே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. மற்ற எந்த கிரகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு நம் பூமிக்கு மட்டும் உண்டெனில் அது மிகையாகாது.

பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமான தண்ணீரை சேமிப்பது தொடர்பாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.

தண்ணீரின் பிறப்பிடம்

தண்ணீரானது ஐதரசன் மற்றும் ஒட்சிசன் மூலக்கூறுகளின் சேர்க்கையால் உருவானது. நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு தண்ணீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

தண்ணீரின் பங்கு தான் அதிகமாக உள்ளது. இருப்பினும் இந்த மூன்று பங்கு தண்ணீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே வெளிப்படை உண்மையாகும்.

சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், குளங்கள், வளிமண்டலம் போன்றவைகளில் தான் பெரும்பாலும் தண்ணீர் தேக்கம் செய்யப்படுகிறது.

தண்ணீரின் முக்கியத்துவம்

தண்ணீரானது அனைத்து உயிர்களும் தாவரங்களும் உயிர் வாழ இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே.

மனிதனின் உடலிலும் 75% நீர் தான் உள்ளது. நம் உணவில் உள்ள சத்துக்களை தேவையான உறுப்புக்களுக்கு அனுப்புவதற்கு நீர் அவசியமாகிறது.

ஒரு மனிதனின் உடலில் 42 லீட்டர் தண்ணீர் உள்ளது. அதில் 2.7 லீட்டர் என்னும் மிகச்சிறிய அளவு குறைந்தாலும் உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.

அது போல நம் சுற்றுப்புறம் தூய்மையாக அமையவும் நீர் அவசியமாகின்றது. நீர் எனும் அமுதம் பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கியமான மூலப்பொருளாகும்.

தண்ணீரை பாதுகாக்கும் வழிமுறைகள்

பெருகி வரும் மக்கள் தொகை என்பது ஒருபுறம் இருக்க தொழில் புரட்சியினால் மழைநீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு என்பது இன்று அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது.

மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதாக இருந்தால் அது இந்த தண்ணீருக்காகவாக தான் இருக்கும். தண்ணீரை சிக்கனமாக பேணுவது மட்டும் நம் கடமையல்ல. தண்ணீர் ஆதாரத்தை பெருக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

அதற்கு நம்மால் இயன்ற அளவு வீட்டிற்கு ஒரு மரத்தை நட்டு ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவோம்.

இயன்ற அளவு இயற்கை நீர் நிலைகளை பாதுகாப்போம். தண்ணீரின் உபயோகத்தை குறைத்து மீள்சுழற்சி முறையில் தேவையற்ற நீரை கைத்தொழில் தயாரிப்புக்கும், சுத்தம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவோம்.

குழந்தைகளிடம் நீரின் அத்தியாவசியத்தையும் அதை பயன்படுத்தும் முறை மற்றும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இன்றே உணர்த்த ஆரம்பிப்போம்.

இன்று குளங்கள், ஏரிகள், ஆறுகள் மூடப்பட்டு மனித குடியிருப்புகளாய் மாறிவரும் இவ்வேளையில் நம் வருங்கால சந்ததியினர் இவற்றையெல்லாம் வெறும் புகைப்படங்களாக மட்டுமே பார்க்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

நீர் சேமிப்பு முறை என்பது ஊர்த் திருவிழா போல வருடத்திற்கு ஒரு சில நாட்கள் என வழக்கமாக இல்லாமல் தினம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

உலகில் அதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. 85 நிலத்தடி நீரைதான் பயன்படுத்துகிறது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நிலத்தடி நீரை நாம் பராமரிப்பதில்லை.

2003 இல் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால் இன்றும் தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தைத் தடுக்க முடியவில்லை. “இன்று சேகரிக்கப்படும் தண்ணீர் நாளை துடைக்கப்படும் கண்ணீர்” என்பது போல தண்ணீரை சேமிப்போம்.

முடிவுரை

“நீரின்றி பசுமை இல்லை. பசுமை இன்றி நீர் இல்லை” என்பது போல எல்லாவற்றிற்கும் தண்ணீர் முக்கியத்துவமாக இருப்பதால் தண்ணீரை வீணடிக்காமல் பாதுகாப்பது எமது கடமையாகும்.

ஒவ்வொருவரும் தண்ணீர் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்று நினைத்து தினமும் ஒரு சில துளிகளாவது தண்ணீரை சேமிப்போம்.

சிறுதுளியே பெரும் வெள்ளமாகும் மழை நீரை சேமிப்போம். நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம்.

You May Also Like:
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
நீர் மேலாண்மை கட்டுரை