இந்த பதிவில் “தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கட்டுரை” பதிவை காணலாம்.
எம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பேணிக்காப்பதும் அதன்வழி நடந்து கொள்வதும் தமிழர்களாகிய நம் அனைவரதும் கடமையாகும்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழர் பாரம்பரியத்தின் சிறப்புகள்
- தமிழர்களின் கலாச்சாரச் சிறப்புக்கள்
- தமிழர் பாரம்பரியத்தில் விருந்தோம்பல்
- தமிழர் கலாச்சாரத்தில் படையல்
- முடிவுரை
முன்னுரை
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” எனும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்து தமிழர்களின் தொன்மையின் சிறப்பை உணரலாம்.
தமிழினம் பழமை வாய்ந்த இனம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை மிகவும் பழமை வாய்ந்ததும், சிறப்பிற்குரியதுமாகும்.
தமிழர்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயிரை விடவும் மேலாக நேசிக்கின்றனர். இத்தகைய தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழர் பாரம்பரியத்தின் சிறப்புகள்
பாரம்பரியத்தின் சிறப்பு நம்மை பிரமிக்க வைப்பவையாக உள்ளன. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறையுள். இவற்றை தட்ப வெப்ப நிலைக்கேற்ப அழகாகக் கையாண்டு பாரம்பரிய முறைகளின் வாயிலாக அடுத்தடுத்த சந்ததிகளுக்குப் பயணப்படுத்திய சிறப்பு வாய்ந்த பாரம்பரியம் தமிழர்களுக்கு உரியது.
எந்த வகை நோயானாலும் அதற்குள்ளே மருந்து இருக்கும். “உணவும் மருந்தும் ஒன்றே” என்ற நிலைப்பாட்டிற்கேற்ப தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களும் அதன் பயன்களும் வியப்படையச் செய்பவையாக உள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் அறம் செய்வதை பண்பாட்டின் கூறாகக் கருதிச் செயல்பட்டனர்.
தமிழர்களின் கலாச்சாரச் சிறப்புக்கள்
தமிழர் கலாச்சாரத்தில் இயற்கை மற்றும் முன்னோர்களை கடவுளாக வழிபடும் முறை காணப்படுகின்றது.
திருமணமான பெண்கள் குங்குமப் பொட்டு மற்றும் தாலிக்கு முக்கியத்துவம் வழங்குவதுடன் அதனை தம்முடனே அணிந்திருப்பர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டுடன் இல்லற வாழ்க்கைமுறை கடைப்பிடிக்கப்படுவது சிறப்புக்குரியதாகும்.
தமிழர் பாரம்பரியத்தில் விருந்தோம்பல்
தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்றாகவிருந்தோம்பல் காணப்படுகின்றது. முகம் தெரிந்தவர்கள் மட்டுமன்றி முகம் தெரியாதவர்களையும் அன்போடு உபசரித்து அவர்களுக்கு உணவளிக்கும் பண்பைத் தமிழர்கள் கொண்டுள்ளனர்.
விருந்தோம்பலை இல்லத்தரசியின் கடமையாக வேறு எந்த இனமும் நாடும் சுட்டிக்காட்டவில்லை. வந்தவர்களை கைகூப்பி வரவேற்று இருப்பதை தந்து இன்முகத்துடன் பசியாற்றுவது அன்றைய வழக்கம்.
விருந்தோம்பல் பண்புக்கு சான்றாக விளங்குவது அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளில் காணப்படும் திண்ணைகள் ஆகும். விருந்தோம்பலின் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
தமிழர் கலாச்சாரத்தில் படையல்
தமிழர்கள் கோவில்களில் தெய்வங்களுக்கு படையல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குலதெய்வ கோவில்களிலும் படையலிட்டு அனைவரும் கூடி உண்டு மகிழ்வர்.
இறந்தவர்களுக்காக இறந்த நாளிலோ அல்லது வேறு ஒரு நாளிலோ ஆண்டுக்கு ஒருமுறை படையல் இடுவர்.
பிள்ளைகளுக்கு திருமணம் எனில் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு முன்னோர்களுக்கு படையல் இடுவது வழக்கம்.
முடிவுரை
மொழி கடந்து அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவர்கள் பண்டைய தமிழர்கள். இவர்கள் நமக்கு அளித்துள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பெரும் பொக்கிஷங்கள் ஆகும்.
இவற்றைப் பேணிக்காப்பதும் அதன்வழி நடந்து கொள்வதும் தமிழர்களாகிய நம் அனைவரதும் கடமையாகும். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தனித்தன்மை மங்காது செயற்படுவோம் தமிழர் பெருமை காப்போம்.
You May Also Like: |
---|
விருந்தோம்பல் பற்றிய கட்டுரை |
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் |