இந்த பதிவில் “தமிழுக்கு அமுதென்று பெயர் கட்டுரை” பதிவை காணலாம்.
“மெல்ல தமிழ் இனி வாழும்” என்ற படி தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும் உடையவர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தமிழுக்கு அமுதென்று பெயர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழின் இனிமை
- பெருமைகள்
- இலக்கிய செழுமை
- இன்றைய தமிழ்
- முடிவுரை
முன்னுரை
“தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடுகிறார் பாவேந்தர் பாரதிதாசன். இந்த வரிகளின் ஊடாக தமிழின் பெருமையினையும் அதனை நாம் எங்கனம் பாதுகாக்க வேண்டும் என்பதனையும் அழகாக சொல்லி சென்றிருக்கிறார்.
பல பெருமைகளை உடைய தொன்மையான நமது மொழியினை பேசுவதனால் நாம் பெருமையடைகின்றோம். இக்கட்டுரையில் தமிழின் தனித்துவங்கள் பற்றி காண்போம்.
தமிழின் இனிமை
தமிழ் மொழியினை பக்தி மொழி என்பார்கள். தமிழ் என்பதற்கு இனிமை என்று பொருள் உண்டு இத்தனை இனிமையும் அழகும் உடைய தமிழ்மொழி தீந்தமிழ், தேந்தமிழ் என்ற அடைமொழிகள் கொண்டு அழைக்கப்படுகின்றது.
தமிழில் உள்ள இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வடிவங்கள் தமிழின் தனிப்பெரும் சிறப்பையும் நயத்தையும் அதனை உணர்வோருக்கு தருகின்றது.
பெரும்புகழ் கொண்ட இலக்கிய படைப்புக்கள் நமது மொழியில் எழுந்துள்ளன. ஆதலால் தான் பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று சிறப்பிக்கின்றார்.
பெருமைகள்
தமிழின் பெருமைகளை எண்ணிலும் சொல்லிலும் அடக்கி விட முடியாதவை. உலகின் செம்மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியானது உலகின் மூத்த மொழியாக உள்ளது.
இந்தியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்னாபிரிக்கா, பிஜி தீவு, மொரிஸியஸ் தீவு போன்ற நாடுகளிலும் இன்று உலகத்தின் எல்லா மூலைகளிலும் தமிழ் பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.
தனக்கெனவே தனித்துவமான இலக்கணம் மற்றும் இலக்கியங்களை கொண்ட பெருமைக்குரிய மொழியாகும். மொழிக்கே உரித்தான பண்பாடு மற்றும் கலாச்சாரங்களையும் இது கொண்டு காணப்படுகின்றது.
இலக்கிய செழுமை
தமிழில் எழுந்த இலக்கியங்கள் பல உலக புகழ் பெற்றவை பிற நாட்டவர்களும் பாரத்து வியக்கும் தலைசிறந்த இலக்கியங்கள் காலத்துக்கு காலம் தமிழில் எழுந்து தமிழ் அன்னைக்கு பெருமை சேர்த்தன.
வரலாற்று காலங்களில் தமிழ் மன்னர்கள் தமிழுக்கு தமது உயிரையும் கொடுத்து தமிழ் பற்றுடையவர்களாக இருந்தார்கள்.
சங்ககாலம் துவக்கம் இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழில் பல இலக்கியங்கள் எழுந்தன. திருக்குறள், சங்கப்பாடல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என பல இலக்கிய செழுமை நிறைந்த நூல்கள் பல தமிழிக்கு பெருமை சேர்க்கின்றன.
திருக்குறள் எனும் இலக்கிய உலகபொதுமறை நூல் அனைவராலும் போற்றப்படுதல் தமிழின் பெருமையே ஆகும்.
இன்றைய தமிழ்
இன்றைக்கு தமிழ் மொழி இணையத்திலும் வலம் வருகின்றது. கணணி மொழியாகவும், கைக்கூ கவிதைகளாகவும் சமூக வலைத்தளங்களில் தமிழ் மிடுக்காக நடை போடுகின்றது.
இன்றைய படைப்பாளர்கள் ஒரு புதுமையான வகையில் தமிழை கடத்தி கொண்டிருக்கின்றார்கள். மற்றும் சினிமா என்ற ஊடகம் தமிழை உலகமெங்கும் கொண்டு போய் சேர்க்கின்றது. தமிழில் எழும் தரமான படைப்புகள் எமது மொழியை பெருமையடைய செய்கின்றது எனலாம்.
முடிவுரை
“மெல்ல தமிழ் இனி வாழும்” என்ற படி தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும் உடையவர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
எமது தொன்மையையும் பெருமையையும் நாமே படித்துணர்ந்து நமது அடுத்த தலைமுறைக்கும் அவற்றை கடத்தி சென்று எமது மொழியை காலங்கள் தாண்டியும் வாழ வைக்கவேண்டியது நமது தலையாய கடமையாக உள்ளது.
“வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்”.
You May Also Like: |
---|
தமிழ் இலக்கிய வரலாறு |
தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை |