இந்த பதிவில் “தமிழ் மொழி வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.
எமது மொழியை பாதுகாக்க வேண்டிய ஒரு பாரிய கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு என்பதனை நாம் அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ் மொழி வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழின் தனித்துவம்
- இன்றைய இளைஞர்களின் நிலை
- நவீனத்துவமும் தமிழ்மொழியும்
- கல்வி நிலையங்களில் தமிழ்
- முடிவுரை
முன்னுரை
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் நம் முன்னோர்கள் எம்மை பொறுத்த வரையில் தமிழ் என்பது நமது மொழி மாத்திரம் அல்ல அது உணர்வுகளை தாண்டிய தாய்க்கு நிகரானது.
இத்தகைய எம் மூத்த மொழியினை சிறப்பிக்கும் வகையில் ஒப்பற்ற பேரிலக்கியங்கள் அதனோடிணைந்த சிறந்த பண்பாடு, கலாச்சாரம் என்பன தமிழ் மொழியின் பெருமையினை உலகமெங்கும் எடுத்து சென்று வருகின்றது.
இன்றைய உலகமயமாதலின் விளைவு தமிழ் மொழி வளர்ச்சியில் இளைஞர்களுடைய பங்கு மிகவும் அவசியமானதாக உள்ளது அவை பற்றி இக்கட்டுரையில் நாம் நோக்குவோம்.
தமிழின் தனித்துவம்
இந்த உலகத்தில் உள்ள செம்மொழி அந்தஸ்து உடைய மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானது.
இதன் சிறப்புக்கு பங்காற்றும் வகையில் நமது முன்னோர்கள் இயல், இசை, நாடகம் எனும் வகையில் தமிழை இலக்கியங்களாகவும் கலை வடிவங்களாகவும் படைத்து தாமும் மகிழ்ந்து தமது சுற்றத்தையும் உலகத்தாரையும் உவகை கொள்ள செய்தனர்.
இதனால்தான் தமிழ் ஏழ்கடல் தாண்டியும் தன் மணம் மாறாது ஒலித்து கொண்டிருக்கின்றது. உலகத்தில் தமிழர்கள் மாத்திரமே தமது மொழியை தமது பெரும் அடையாளமாக கருதி வாழ்ந்து வருபவர்களாக திகழ்கின்றனர்.
இன்றைய இளைஞர்களின் நிலை
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனுடைய நாகரீகம், கலை, பண்பாடு, விழுமியங்கள் மற்றும் வாழ்வியலை வெகுவாக மாற்றியிருப்பது வெளிப்படையான உண்மையாகும். அதற்கு தமிழ் மொழியும் விதிவிலக்கல்ல. இன்றைய இளைஞர்கள் தொலைபேசியும் கணினியுமாக இணையவலையில் சிக்கி தவிக்கின்றனர்.
அவர்கள் தமது மொழியை பற்றியோ கலைகளை பற்றியோ அதிகம் அக்கறை கொள்வதில்லை.
இத்தகைய போக்கு தமிழ் வளர்ச்சியின் ஒரு பாரிய பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. மற்றும் பிறமொழிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது கூடுதல் அச்சம் தருவதாக இருக்கின்றது.
நவீனத்துவமும் தமிழ்மொழியும்
ஆங்கில மொழியின் ஆதிக்கம் உலகமெங்கும் பரந்து விட்ட நிலையில் தமது தாய்மொழியை ஒதுக்கும் மனநிலைக்கு இன்றைய காலத்து குழந்தைகள் மாறியிருப்பது வேதனைக்குரியதாகும்.
இன்றைய கல்வி முறை, வேலைவாய்ப்பு என்பன ஆங்கிலம் மூலமாக தீர்மானிக்கப்படுவது ஒரு தவறான அணுகுமுறையாகும்.
இருப்பினும் தமிழ் எதற்கும் பின் நிற்கவில்லை இணையங்களிலும் கணினிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தமிழ் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்று வலம் வருகின்றது.
கவிதைகளும், கட்டுரைகளும் இன்று இணையத்தில் வலம் வருகின்றன. சினிமா தமிழை அடுத்த படிக்கு எடுத்து செல்கின்றது.
கல்வி நிலையங்களில் தமிழ்
இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் தமிழை அடுத்த கட்டத்துக்கு வளர்த்து செல்ல வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் மாணவர்களுடைய கையில் தான் உள்ளது.
மாணவர்களிடைய தமிழ்மொழி சார்ந்த இலக்கிய வாசிப்பு மற்றும் படைப்பாக்கம், கலை, ஆற்றல் ஆகிய திறன்களை வெளிப்படுத்தும் நடைமுறைகள் தமிழை வளர்க்க மாணவர்களால் ஆற்ற கூடிய பெரும் பங்களிப்பாக இருக்கும்.
இது அதனை பார்த்து வளர கூடிய அடுத்த தலைமுறை தமிழ் சமுதாயத்திற்கு ஒரு மிகப்பெரிய உந்துதல் ஆக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முடிவுரை
“எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே” என்ற பாரதியின் தமிழ் மொழி வாழ்த்தை போல எமது மொழி நிலைத்து பெருமை கொள்ள வேண்டுமானால் அது நம்மை போன்ற இளைஞர்கள் கைகளினால் தான் முடியும்.
எமது மொழியை பாதுகாக்க வேண்டிய ஒரு பாரிய கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு என்பதனை நாம் அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.
You May Also Like : |
---|
மாணவர் ஒழுக்கம் கட்டுரை |
மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் கட்டுரை |