பண்டைய வரலாற்று காலத்தில் நாயக்கர் காலம் முக்கியத்துவம் வாய்ந்த காலமாக கருதப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் சார்பில் நிர்வாகிகளாக காணப்பட்டு பின்னர் சுய ஆட்சி செய்தவர்களாக நாயக்க வம்சத்தினர் காணப்படுகின்றனர்.
அந்த வம்சாவழியில் 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மாமன்னர் திருமலைநாயக்கர் ஆவார். இவரது ஆட்சிக் காலத்தில் மதுரை இராஜ்ஜியம் மறுமலர்ச்சி அடைந்து உச்சத்தை எட்டியது.
நாயக்கர் ஆட்சியின் ஆரம்ப நிலை
13ஆம் நூற்றாண்டில் சோழ இராஜ்ஜியம் சரிந்த பின், பாண்டியர்கள் தமது பலத்தின் உச்சத்தை தொட்டனர். அடுத்த 200 ஆண்டுகளில் , தமிழகம் நான்கு பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி கடைசியில், நாயக்கர்களின் கீழ் வந்தது.
14ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜியின் தளபதி மாலிக் காஃபூர் மதுரையை சூறையாடி சென்றனர். தில்லி சுல்தான் துக்ளக் பாண்டிய நாட்டை வென்று மாஃபார் பிரதேசம் என்று பெயர் சூட்டி தில்லி சுல்தானகத்தோடு இணைத்தார்.
மாஃபார் பிரதேசம் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து, மதுரை சுல்தானகமானது. அத்துடன் பாண்டிய மன்னர்களும் தெற்கே தென்காசி பகுதிக்கு விரட்டப்பட்டனர்.
மதுரை சுல்தான்கள் விஜயநகரப் பேரரசரால் தோற்கடிக்கப்பட்டு விஜயநகரப் பேரரசர்கள் தன் சார்பில் தனது படைத்தளபதிகளை மதுரையை நிர்வகித்து தனக்கு கப்பம் கட்டும் படி செய்தனர்.
இறுதியில் 16ஆம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசு சரிவடைய திருமலைநாயக்கர் மதுரை இராஜ்ஜியத்தில் சுய ஆட்சி செய்த முதல் நாயக்க மன்னராக உருவாகினார்.
இயற்பெயர் | திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு |
தந்தை | முத்துகிருஸ்ண நாயக்கர் |
ஆட்சி செய்த தலைநகர் | மதுரை |
திருமலை நாயக்கரின் ஆட்சி முறை
திருமலைநாயக்கரின் அண்ணனான முத்துவீரப்ப நாயக்கருக்கு பின்னர், ஆட்சிப் பீடமேறினார். ஆட்சிப்பீடமேறிய பின்னர் தனது தேசத்து தலைநகரை திருச்சியில் இருந்து மதுரைக்கு மாற்றினார்.
திருமலைநாயக்கரின் இராஜ்ஜியம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரரால் நிர்வகிக்கப்பட்டது. பாளையக்காரர்கள் மன்னருக்கு கப்பமாக தங்கமும், தானியங்களும் அளித்தனர்.
இராஜ்ஜியத்தில் இருந்த ஒவ்வொரு கிராமமும் ஒரு நாட்டாண்மையால் நிர்வகிக்கப்பட்டது.
இராமநாதபுரம் சமஸ்தானமும், திருவிதாங்கூர் இராஜ்ஜியமும் திருமலைநாயக்கரின் கீழே இருந்தன. இராமநாதபுரம் சமஸ்தானத்தினை சேர்ந்த ரகுநாத சேதுபதி திருமலைநாயக்கரின் தீவிர விசுவாசியாக விளங்கினார்.
பாதுகாப்பு அரண் அமைத்தமை
திருமலைநாயக்கர் ஆட்சிப்பீடமேறிய உடன் தனது பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக இரண்டு பெரிய கோட்டைகளை கட்டியும் பெரும் படைகளை திரட்டியும் எதிரிகளுடனான போர்களுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்.
கட்டிடக்கலைப் பணி
கட்டிடக் கலை மீது பேரார்வம் கொண்டிருந்த திருமலைநாயக்கரின் அரண்மனை இன்று திருமலைநாயக்கர் மஹால் என்ற பெயரில் மதுரையை அலங்கரிக்கிறது.
இந்த பிரமாண்டமான மாளிகை திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டிடக் கலைப் பாணிகளில் கட்டப்பட்டது. திருமலை நாயக்கரின் பரந்து விரிந்த அரண்மனையில் இன்று நாலில் ஒரு பங்கே எஞ்சியுள்ளது.
சமயப் பணி
மதுரைக்கு பெருமை சேர்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை திருமலைநாயக்கர் திருத்தி அமைத்து விரிவுப்படுத்தினார்.
அவர் கட்டிய வசந்த மண்டபமே இன்று புதுமண்டபம் என்று அழைக்கப்படுகிறது. கலைநயமிக்க சிற்பங்கள் கொண்ட வசந்த மண்டபமாக காணப்படுகிறது.
திருமலைநாயக்கரின் காலத்துக்கு முன்னர் மீனாட்சித் திருக்கல்யாணமும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் வெவ்வேறு தருணங்களில் தனித்தனியாக கொண்டாடப்பட்டன.
இவை இரண்டையும் ஒன்றாய் இணைத்து சித்திரைத் திருவிழா என கொண்டாடச் செய்த பெருமை திருமலைநாயக்கரையே சாரும்.
மூக்கறுப்புப் போர்
திருமலைநாயக்கரின் இறுதிக்காலத்தில் கொடூரமான மூக்கறுப்புப் போர் நடந்தது. மதுரை இராஜ்ஜியத்தின் மீது போர்த் தொடுக்க மைசூர் மகாராஜா அனுப்பிய படை காட்டுமிராண்டித்தனமான போர்முறைகளை கையாண்டு மக்களின் மூக்கை அறுத்தனர்.
அந்நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த திருமலைநாயக்கர் மைசூர் படையை எதிர்க்க இரகுநாத சேதுபதியின் உதவியை நாடினார். 60,000 வீரர்கள் திரட்டப்பட்டு ரகுநாத சேதுபதியின் தலைமையில் பெரும்போர் நடந்தது. மதுரை காக்கப்பட்டு மைசூர் படை வீழ்த்தப்பட்டது.
வெற்றிக்கு பின் திருமலைநாயக்கரின் படை வீரர்கள் மைசூர் படையை பின் தொடர்ந்து சென்று அவர்கள் செய்த அதே கொடூரத்தை அவர்கள் மீதும் செய்தனர்.
மற்றவர்களோடு சேர்ந்து மைசூர் மகாராஜாவும் தனது மூக்கை இழந்தார். வெற்றிவாகை நாயக்கர் படை மதுரைக்கு வருவதற்குள் மன்னர் திருமலைநாயக்கர் உயிர் துறந்தார்.
You May Also Like: |
---|
மருதநாயகம் வாழ்க்கை வரலாறு |
பொல்லான் வரலாறு |