ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த “தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு” பற்றி இதில் காணலாம்.
நாட்டிற்காக தன்னுயிரை தியாகம் செய்த மாவீரன் தீரன் சின்னமலை அவர்கள் இன்றளவும் பேசப்படுகின்றார் என்றால் அவர் பெற்ற வெற்றியும்⸴ நாட்டின் மீது கொண்ட அக்கறையுமேயாகும்.
தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு
இயற் பெயர்: | தீர்த்தகிரி கவுண்டர் |
பிறப்பு: | ஏப்ரல் 17, 1756 |
தந்தை: | ரத்னசாமி கவுண்டர் |
தாய்: | பெரியாத்தா |
பிறப்பிடம்: | மேலப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு |
இறப்பு: | ஜூலை 31, 1805 |
அறிமுகம்
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த மாவீரன் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய காலப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்துப் பலர் போரிட்டனர். குறிப்பாக தமிழ்நாட்டில் வேலுநாச்சியார்⸴ கட்டபொம்மன்⸴ மருது சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் வரிசையில் தீரன் சின்னமலையும் ஒருவராவார்.
வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து நாட்டின் விடுதலைக்காய் தமது உயிரையும் தியாகம் செய்தவர்களில் ஒருவரே தீரன் சின்னமலை ஆவார்.
தொடக்க வாழ்க்கை
தீரன் சின்னமலை அவர்கள் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் அருகே மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்தினசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதியினருக்கு மகனாக 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பிறந்தார்.
தீரன் சின்னமலைக்கு பெற்றோர் இட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் இளம் வயதிலேயே போர்க் கலையான வாள் பயிற்சி⸴ சிலம்பு வித்தை⸴ குதிரையேற்றம் முதலானவற்றை கற்றது மட்டுமல்லாமல்லாது நவீன போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.
தற்காப்புக்கலை அனைத்திற்கும் மொத்த உருவமாக விளங்கிய இவர் தான் கற்ற கலைகள் அனைத்தையும் தன் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுத்து இளம் வயதிலேயே போர் படையைத் திரட்டினார்.
பழைய கோட்டை பட்டக்காரர்கள் புலவர்களை ஆதரித்து அவர்களின் கவித் திறனுக்கு வியக்கத்தகு பல பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய மரபு வழியில் தீர்த்தகிரி கவுண்டர் வந்ததால் அவர் இளம் பருவத்திலேயே “தீர்த்தகிரிச் சர்க்கரை” என்று அழைக்கப்பட்டார்.
தீரன் சின்னமலை என்ற பெயர் அமைந்த காரணம்
தீர்த்தகிரி கவுண்டரின் சொந்த நாடான கொங்குநாடு மைசூர் மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இந்நிலையில் திப்புவின் திவான் முகமது அலி என்பவரால் வரி வசூலிக்கப்பட்டு அந்நாட்டின் வரிப்பணம் அவரது அண்டை நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வாறு எடுத்துச்செல்லப்பட்ட வரிப்பணத்தை பிடுங்கி ஏழை எளிய மக்களுக்கு தீரன் சின்னமலை கொடுத்தார்.
இதனை தடுக்க முயன்ற முகமது அலியிடம் “சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே உள்ள ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சொல்” எனக் கூறி அனுப்பினார். அன்றிலிருந்து தீர்த்தகிரி கவுண்டர் “தீரன் சின்னமலை” என்று அழைக்கப்பட்டார்.
சின்னமலையின் வெற்றி பயணங்கள்
தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினைக் கடுமையாக எதிர்த்தார். அந்த சமயத்தில் டிசம்பர் 7ஆம் திகதி 1782இல் மைசூர் மன்னர் மரணமடைந்ததால் அவரின் மகனான திப்புசுல்தான் ஆட்சிப்பீடம் ஏறினார்.
திப்புசுல்தானும் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்தார். இதனால் தீரன் சின்னமலை ஆங்கிலேயருக்கெதிராக தனது நண்பர்களோடு பெரும் படையை திரட்டி திப்புசுல்தானோடு இணைந்து போரிட முற்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மூன்று மைசூர் போர்களிலும் சின்னமலை⁃திப்புசுல்தான் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர் பல விதமான புதிய போர் முறைகளைக் கையாளத் திட்டம் வகுத்தனர்.
இந்நிலையில் திப்புசுல்தான் மாவீரன் நெப்போலியனிடம் உதவி புரியக் கோரினார். தீரன் சின்னமலை பிரஞ்சுக்காரர்களால் பயிற்சியளிக்கப்பட்டு துணிச்சலுடனும்⸴ வீரத்துடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர்.
ஆனால் துரதிஸ்டவசமாக “கன்னட நாட்டின் போர்வாள்ˮ என அழைக்கப்படும் மைசூர் மன்னன் திப்புசுல்தான் போரின் போது வீரமரணம் அடைந்தார். இவரின் இறப்பின் பின் கொங்கு நாட்டில் ஒரு கோட்டையை எழுப்பிய தீரன் சின்னமலை அங்கிருந்து ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாகப் போரிட்டார்.
தீரன் சின்னமலை தனக்குச் சொந்தமான சிவன்மலை பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களையும் தயாரித்தனர்.
1799இல் தனது படைகளுடன் திப்பு சுல்தானிடம் பணியாற்றிய சிறந்த போர் வீரர்களையும் இணைத்துக் கொண்டார். ஜூன் மாதம் 3ஆம் திகதி 1800ஆம் ஆண்டில் லெஃப்டினன்ட் கர்னல் கே.க்ஸிஸ்டரின் கம்பெனியில் ஐந்தாம் படைப் பிரிவைத் தாக்கத் திட்டமிட்ட போதும் சரியான தகவல் பரிமாற்றமில்லாத காரணத்தினால் அது தோல்வியில் முடிந்தது.
எனினும் துவண்டு போகாத தீரன் சின்னமலை அவர்கள் 1801ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானியில் உள்ள காவிரிக் கரையில் எதிர்த்தார். அதில் வெற்றியும் பெற்றார்.
1802ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போரில் தீரன் சின்னமலை வெற்றி பெற்றார். இவர் ஆங்கிலேயரிடம் சிக்காமலிருக்க கொரில்லா போர் முறைகளைக் கையாண்டார்.
1803 ஆம் ஆண்டிலும் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலேயப் படையைக் கைக்குண்டு வீசித் தரைமட்டமாக்கினர்.
இவ்வாறு ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்களை நேரடியாக எதிர்த்தால் வெல்ல முடியாது என எண்ணிய ஆங்கிலேயர் சூழ்ச்சியால் கொல்லத் திட்டமிட்டனர்.
அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தீரன் சின்னமலையும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். சங்ககிரி கோட்டையில் சிறை வைத்தனர். ஆங்கிலேய ஆட்சியை ஏற்க வற்புறுத்தினர்.
எனினும் அதனை ஏற்க மறுத்தனர். 1805 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி கோட்டையின் உச்சியில் தீரன் சின்னமலையும்⸴ அவரது சகோதரர்களும் தூக்கிலிடப்பட்டனர்.
நாட்டிற்காக தன்னுயிரை தியாகம் செய்த மாவீரன் தீரன் சின்னமலை அவர்கள் இன்றளவும் பேசப்படுகின்றார் என்றால் அவர் பெற்ற வெற்றியும்⸴ நாட்டின் மீது கொண்ட அக்கறையுமேயாகும்.
நினைவுச் சின்னங்கள்
தீரன் சின்னமலை அவர்களின் வீரதீர செயல்களை போற்றும் விதமாக தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் நினைவு மணி மண்டபமுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு “தீரன் சின்னமலை மாளிகைˮ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசின் தபால் தந்தி தகவல் தொடர்புத்துறை⸴ ஜூலை மாதம் 31ஆம் தேதி 2005ஆம் ஆண்டில் “தீரன் சின்னமலை அவர்களின் நினைவு அஞ்சல் தலையை” வெளியிட்டது.
2013ஆம் ஆண்டு டிசெம்பர் 23ஆம் திகதி தமிழக அரசால் இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
You May Also Like: