ஒரு நாடு ஆரோக்கியமான முன்னேற்ற பாதையில் செல்ல அவசியமான “தேசிய ஒருமைப்பாடு கட்டுரை” பதிவை காணலாம்.
நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் மேலோங்கி நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டுமானால் நாட்டு மக்களிடம் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நாட்டுப் பற்றும் நிறைந்திருக்க வேண்டும்.
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள்
- தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம்
- தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழிமுறைகள்
- மாணவர்களின் ஒற்றுமை
- முடிவுரை
முன்னுரை
மனித குலத்திற்கு தேசிய ஒருமைப்பாடானது இன்றியமையாததாகும். இந்திய பாரத தேசமானது பல இன⸴ மத⸴ மொழி⸴ கலாச்சாரங்கள்⸴ பல சாதியங்கள் என வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அனைவரையும் ஒன்றிணைக்கும் மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கின்றது. இதனையே பாரதியார் “முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்ˮ எனப் பாடியுள்ளார்.
எனவே மக்கள் அனைவரிடமும் அமைதி⸴ சகிப்புத்தன்மை⸴ மனிதநேயம்⸴ மத⸴ இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். எனவே தேசிய ஒருமைப்பாடு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தேசிய ஒருமைப்பாட்டு சிந்தனைகள்
பண்டைய காலத்தில் நம் நாட்டில் பல மன்னர்களும்⸴ மக்களும் வாழ்ந்தனர். இருப்பினும் அனைவரிடத்திலும் மனித சாதி என்ற மனநிலையே காணப்பட்டது.
பிற நாட்டவர்கள் நம் நாட்டுக்குள் படையெடுக்கும் போது குறிப்பாக பிரித்தானியர்கள் படையெடுப்பின் பின்னர் நம் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து சாதி⸴ மத⸴ இனம் என்ற பாகுபாட்டினை ஏற்படுத்தினர்.
எங்கும் பிரிவினைகள் உண்டானது ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் நோக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பேதமுற்ற மக்களது மனதில் ஒற்றுமை முளைத்தது. காந்தி⸴ நேரு போன்ற தலைவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வளர்த்தனர்.
பாரதியார் ஒருமைப்பாட்டின் உச்ச கனவை கண்டார். “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்ˮ என்றும் “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறிக் கொள்வோம்ˮ என்றும் தேசிய ஒருமை பற்றிக் கனவு கண்டார்.
தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம்
ஒரு நாட்டின் சிறப்பையும்⸴ அமைதியையும் நிலைநாட்ட ஒருமைப்பாடு அவசியமாகின்றது. மக்கள் தேசிய ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்கும் போது சண்டைகள்⸴ மதக்கலவரங்கள்⸴ வேற்றுமைகளின்றி அமைதியான நாட்டை நிலைநாட்ட முடியும்.
தேசிய ஒருமைப்பாடானது நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானதாகும். பிற நாடுகளின் படையெடுப்புகள்⸴ தாக்குதல்களிலிருந்து நம் நாட்டை பாதுகாத்துக்கொள்ள தேசிய ஒருமைப்பாடு முக்கியமாகும்.
அடிமை தனத்தை போக்கிக் கொள்ளவும்⸴ சுதந்திர வாழ்வை வாழவும் தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். தீவிரவாதம் தோன்ற தேசிய ஒருமைப்பாடு இன்மையே காரணமாகும். எனவே இதனை தடுக்க தேசிய ஒருமைப்பாடு முக்கியமானதாகும்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழிமுறைகள்
பல்வேறு வழிமுறைகளின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தலாம். அனைத்து இன⸴ மத⸴ மொழி மக்களையும் மதிக்க வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கும்⸴ கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
அனைவருமே நம் பாரத நாட்டின் பிள்ளைகள் என்பதை நினைவில் கொள்வோம். விட்டுக்கொடுப்பு⸴ சகிப்புத்தன்மை⸴ மன்னிப்பு போன்ற மனப்பாங்கினை வளர்த்துக்கொண்டு பிறருடன் பழக வேண்டும்.
நம் தாய் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து இந்திய வாழ் மக்களையும் நம் இந்திய தேசத்து மக்களாகவே நினைத்து இன⸴ மத பேதமின்றி நேசிக்கவேண்டும்.
மாணவர்களின் ஒற்றுமை
பரந்து விரிந்த நம் நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவர்களிடத்திலும் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்த்தல் அவசியமாகும்.
கல்வித் திட்டங்களிலும்⸴ வேலை வாய்ப்புகளிலும் சமநோக்கு தேவை. மாணவர்களுக்கான இயக்கங்கள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
வட இந்தியா⸴ தென்னிந்தியா என்ற பேதம் மறைய வேண்டும். நாம் அனைவரும் இந்தியத் தாய் பெற்ற குழந்தைகள் என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் வளர்க்க வேண்டும்.
முடிவுரை
இந்திய நாட்டின் நன்மையும்⸴ பாதுகாப்பும்⸴ அமைதியும் தேசிய ஒருமைப்பாட்டிலேயே தங்கியுள்ளது. கல்வி⸴ வேலை வாய்ப்பு⸴ தொழிற்துறை போன்றவற்றிலும் நாம் ஒருமைப்பாட்டுச் சிந்தனையை வளர்க்க வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டால் பாரதத்தை உலக அரங்கில் முன்னிலை வகிக்கச் செய்யலாம். ஒன்றுபட்டு உலக வல்லரசாக இந்தியாவை மாற்றுவோம்.