இந்த பதிவில் உறவுகளில் மகத்தான உறவான “நட்பின் சிறப்பு கட்டுரை” பதிவை காணலாம்.
உண்மை நட்பு என்றென்றும் நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். நன்மை, தீமைகளை உண்மை நட்பு எடுத்துரைக்கும்.
நட்பின் சிறப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நட்பின் முக்கியத்துவம்
- உண்மை நட்பு
- நட்பின் பெருமை
- தீய நட்பு
- முடிவுரை
முன்னுரை
நட்பில்லாத வாழ்க்கை நரம்பில்லாத வீணை போன்றது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் நண்பர்கள் இருப்பது முக்கியம். நட்பு என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வரம்.
வாழ்வில் இறைவன் நமக்களித்த உறவுகளே அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் ஆகும். ஆனால் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பினை இறைவன் எம் கைகளிலேயே கொடுத்துள்ளான்.
நட்பென்பது ஒத்த வயதினருக்கிடையில்தான் மலர வேண்டும் என்பதில் எந்தவிதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை. நட்பென்பது மிகவும் புனிதமானதும் அழகானதுமாகும். நட்பின் சிறப்பு பற்றிய கட்டுரையில் காண்போம்.
நட்பின் முக்கியத்துவம்
நட்பு என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் நம்பிக்கை, பாதுகாப்பிற்கு நட்பு அவசியமாகின்றது.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார் அதற்கும் நட்பு முக்கியமாகும்.
ஒருவனை நல்வழிப்படுத்துவதற்கும் தவறிழைக்கும் போது அதனைத் திருத்துவதற்கும் நட்பு அவசியமாகின்றது.
உண்மை நட்பு
அக்கறையும் அன்பும் எப்போதும் என்றென்றும் மாறாமல் இருக்கும் நண்பர்களிடம் சுயநலமில்லாமல் நடந்து கொள்ளக் கூடியதே உண்மை நட்பாகும்.
நண்பனுக்கு துன்பம் ஏற்படும் போது விரைந்து சென்று அந்தத் துன்பத்திலிருந்து நட்பை காத்து நிற்கும். நண்பனுக்கு உதவ பொருள் இல்லை என்றாலும், ஆறுதலான வார்த்தைகளையாவது கொடுக்கும் மனப்பான்மை உண்மை நட்புக்கு உண்டு.
எதிர்பார்ப்பின்றி உதவிகளைச் செய்யக் கூடியது. நம்பிக்கை துரோகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அக்கறையும், அன்பும் எப்போதும் என்றென்றும் மாறாமல் இருக்கும்.
உண்மை நட்பு என்றென்றும் நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். நன்மை, தீமைகளை உண்மை நட்பு எடுத்துரைக்கும். இவன் என் நண்பன் அல்லது நண்பி என்று கூறி பெருமை கொள்ளக் கூடியதாக உண்மை நட்பு இருக்கும்.
நட்பின் பெருமை
இருவருக்கு இடையே ஏற்படும் தொடர்புகளில் மிகவும் பெருமை உடையதாகக் கருதப்படுவது நட்பு ஆகும். நட்பின் பெருமையைச் சங்க காலத்திலிருந்தே நாம் காணமுடிகிறது.
பாரிக்கும் – கபிலருக்கும் இடையே இருந்த நட்பும், அதியமானுக்கும் – ஒளவையாருக்கும் இடையே இருந்த நட்பும், கோப்பெருஞ்சோழனுக்கும் – பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பும் அனைவரும் அறிந்த நட்பு ஆகும்.
தீய நட்பு
தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுப்போமானால் அந்நட்பு எம் வாழ்க்கையையே சீரழித்து விடும். அவ்வாறு கெட்ட சகவாசங்களினால் தம் வாழ்க்கையை தொலைத்தவர்களும் உண்டு.
தீய நட்பானது துரோகத்தை செய்யக்கூடியது. பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன.
புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் ரீதியான குற்றங்கள், கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நட்பின் மூலம் நிகழ்கின்றது.
முடிவுரை
நட்பை சரியாக அமைத்துக் கொண்டால் அவரை விட பாக்கியசாலி இவ்வுலகில் எவரும் இல்லை. உண்மை நட்பு நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
எனவே சிறந்த நட்பை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்தால் வாழ்வு வளம் பெறும். அன்பின் இலக்கணமான நட்புக்கொண்டு வாழ்வில் வளம்பெறுவோம்.
You May Also Like: |
---|
அறம் பற்றிய கட்டுரை |
நேர்மை பற்றிய கட்டுரை |