நான் ஒரு பாடநூல் கட்டுரை

நான் ஒரு பாடநூல்

இந்த பதிவில் “நான் ஒரு பாடநூல் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை உள்ளடக்கியுள்ளது.

நான் ஒரு பாடநூல் கட்டுரை – 1

நான் ஒரு பாடநூல். எனக்கு தமிழ்மொழி என பெயரிடப்பட்டது. நான் கன செவ்வக வடிவத்தில் இருப்பேன். நான் கண்கவர் முகப்பை கொண்டு சிறந்த ஆசிரியர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டேன்.

என்னுடைய உடலில் மொத்தம் இருநூற்று இரண்டு பக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தன. நான் பிரபலமான அச்சகம் ஒன்றில் வடிவம் பெற்றேன். அச்சிடப்பட்ட பின் என்னையும் என் நண்பர்களையும் பெட்டிகளில் அடுக்கினார்கள்.

பின்னர் எங்களை ஒரு பார ஊர்தியில் ஏற்றினார்கள். நான் பல நண்பர்களுடன் பயணம் செய்தேன். நாங்கள் பார ஊர்தி மூலமாக நாட்டிலுள்ள பல தமிழ் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டோம்.

கல்வி அமைச்சு எங்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்குகிறது என்பதை அப்போது தான் உணர்ந்தோம். இவ்வாறு நான் இறக்கி விடப்பட்ட பாடசாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு பெட்டியாக எங்களை கீழே இறக்கினர்.

அப்பாடசாலையின் பாடநூல் பொறுப்பாசிரியர் எங்களின் பெயரை பதிவேட்டில் பதிந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு பாடநூல் பொறுப்பாசிரியர் எங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

மாணவர்கள் வரிசையாக நின்று என்னையும் என் நண்பர்களையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். தமிழரசி என்ற மாணவி என்னை கரம் பற்றினாள். அன்று முதல் அவளே என் எஜமானியானாள்.

என் மேனி அழுக்கு படாமல் இருக்க எனக்கு உறை அணிவித்தாள். அன்றிலிந்து இன்று வரை கண்ணினை காக்கும் இமை போல என்னை பாதுகாத்து வருகின்றாள்.

நான் ஒரு பாடநூல் கட்டுரை – 2

என் முகப்பு பக்கத்தில் தமிழ்மொழி என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆம் நான் ஒரு பாடநூல். என் உடல் பல வண்ணக் காகிதங்களை கொண்டு கன செவ்வகமாக காட்சியளிக்கும்.

மாணவர்கள் பாடங்களை படிக்க என்னை பயன்படுத்துவார்கள். உமா பதிப்பகத்தில் உருவம் பெற்ற நான் சக நணபர்களோடு கனவூந்து பயணம் மூலம் இவ்விடம் வந்து சேர்ந்தேன்.

அதன் பின்னர் மகிழினி என்ற பெயர் கொண்ட மாணவியிடம் கையளிக்கப்பட்டேன். அவளின் கரங்களில் இருப்பதை பாதுகாப்பாக உணர்ந்தேன். என் எஜமானி எனக்கு நெகிழி அட்டை அணிவித்தார்.

ஒவ்வொரு நாளும் தமிழ்மொழி பாடவேளையில் என் எஜமான் என்னை புரட்டுவது வழக்கம். அவர் என் மீது சிறிதளவும் கிறுக்க மாட்டார். இதனால் நான் என்றும் புதிதாக காட்சியளிப்பேன்.

ஒரு நாள் அவள் படித்துக் கொண்டிருந்த போது கை தவறி பக்கத்தில் இருந்த நீர்ப்புட்டி என் மீது விழுந்தது. என் உடல் நீரால் நனையவே அவள் அதை கண்டு துடித்து போய் விரைந்து வந்து என்னை வெயிலில் உலர்த்தினாள்.

இது அவள் என் மீது கொண்டிருந்த அன்பை உணர முடிந்தது. அந்த வருடம் ஆண்டிருதி பரீட்சையின் போது என் எஜமானி அதிகமாகவே என்னை பயன்படுத்தினாள். ஆண்டிருதி பரீட்சையின் பின் என் எஜமானி என்னை பாடநூல் பொறுப்பாசிரியரிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பிரிவால் என்மனம் அனலில் இட்ட மெழுகு போல் துன்பப்பட்டது. இருப்பினும் கடமையுணர்வுடன் அடுத்த முதலாளியின் வருகையினை எதிர்பார்த்தவனாக இமை மூடாமல் காத்திருக்கின்றேன்.

You May Also Like :
நூலகத்தின் பயன்கள் கட்டுரை
மரம் வளர்ப்போம் சிறுவர் கட்டுரை