புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் கட்டுரை

புகை பிடித்தல் கட்டுரை

இந்த பதிவில் “புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

புகைப்பிடித்தலானது புகைப்பிடிப்பவர்கள் மட்டுமன்றி அவரைச் சார்ந்தவர்களையும் பாதிப்படையச் செய்கின்றது என்பதை உணர வேண்டும்.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. புகைப் பிடித்தலால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள்
  3. உலக புகையிலை எதிர்ப்பு நாள்
  4. புகைப்பிடிப்பதால் ஏற்படும் மனரீதியான மற்றும் சமூகரீதியான பாதிப்புக்கள்
  5. புகை பிடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
  6. முடிவுரை

முன்னுரை

புகைப்பிடித்தலானது விசவாயுக் கூண்டுக்குள் உடலைத் தள்ளும் தற்கொலைக்கு நிகரானது. புகையிலையானது சிகரெட், பீடி, குட்கா போன்ற பல வகைகளில் உட்கொள்ளப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் புகையிலைப் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளமை வருத்தத்திற்குரியது.

புகை பிடிக்காதீர்கள் என்று சிகரெட் அட்டைகள் முதல் சினிமா தியேட்டர்கள் வரை அரசு விளம்பரம் செய்தாலும் இன்றும் பெரும்பாலானோர் இதனை கவனத்தில் கொள்ளாது புகைபிடித்த வண்ணமே உள்ளனர்.

புகைப்பிடித்தலுக்கு அடிமையானவர்கள் தங்களைப் பற்றியோ, தங்களைச் சார்ந்த உறவுகள் பற்றியோ கவலை கொள்வதில்லை. புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

புகைப் பிடித்தலால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள்

மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட இருமல் போன்ற பல ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

புகையிலைப் பொருட்களை உட்கொள்வதால் மனிதனது ஆயுட்காலம் 10 ஆண்டுகள் குறைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் புகையிலை பாதிப்புகளால் பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவருடைய ஆயுட்காலத்தில் 5 நிமிடங்கள் குறைவடைகின்றது. அதிகளவில் புகைப் பிடிப்பவர்களின் உதடுகளும் மோசமான நிலையில் காணப்படும்.

உலக புகையிலை எதிர்ப்பு நாள்

முதன் முதலாக புகையிலை எதிர்ப்பு தினம் ஏப்ரல் 7ஆம் திகதி 1987 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் நாற்பதாவது ஆண்டு விழாவின்போது கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் மே 31ஆம் திகதி புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புகையிலை எதிர்ப்பு நாளானது கடைப்பிடிப்பதன் நோக்கம் புகையிலை சாப்பிடுவதால் அல்லது புகைப்பிடிப்பதால் உடல் நலம் பாதிப்படைவதைத் தெரிந்துகொள்ளவும், அதிலிருந்து விடுபட்ட மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை அளிக்கவும் ஆகும்.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் மனரீதியான மற்றும் சமூகரீதியான பாதிப்புக்கள்

புகைப்பிடிப்பதால் உடலை மட்டுமின்றி மனதையும் பாதிப்படையச் செய்கின்றது. புகைப்பிடிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும், புகை பிடித்தால் தான் சாதாரணமாக உணர முடியும் என நினைக்கும் அளவிற்கு தள்ளப்படுகின்றனர்.

புகைபிடிப்பவர்கள் வாய் நாற்றம் அடிப்பதால் அருகில் இருப்பவர்கள் முகம் சுழிக்க வைக்கும்.

வேலைக்கு இடையில் புகை பிடிக்க வேண்டும் என்று எண்ணுவதால் அது வேலையை பாதிக்கும், சமூகத்தின் மத்தியில் மதிப்பை இழப்பர், புகைபிடிப்பதால் அதிக பணம் செலவழிக்கப்படுகிறது.

புகை பிடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

சிகரெட்டை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே நாடித்துடிப்பு சீராகின்றது. 24 மணி நேரத்தில் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது.

இருதய பாதிப்பு அபாயம் குறையத் தொடங்குகின்றது, 48 மணி நேரத்தில் சுவை, வாசனை இவற்றினை நன்கு உணர முடியும். 5-10 நாட்களில் புகை பிடிக்க வேண்டும் என்ற வெறி வெகுவாய் குறைகிறது.

முடிவுரை

புகைப்பிடித்தலானது புகைப்பிடிப்பவர்கள் மட்டுமன்றி அவரைச் சார்ந்தவர்களையும் பாதிப்படையச் செய்கின்றது என்பதை உணர வேண்டும். சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை செய்கிறோம் என்று அர்த்தம்.

மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் புகைப்பிடித்தலை தடுப்போம்இ வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!

You May Also Like :
போதைப்பொருள் பாவனை கட்டுரை
மது பற்றிய கட்டுரை