புத்தகம் பற்றிய கட்டுரை

Puthagam Katturai In Tamil

இந்த பதிவில் “புத்தகம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதனுக்குப் பரந்துபட்ட அறிவினை வழங்குவதில் புத்தகங்களே முதன்மை வகிக்கின்றன.

புத்தகம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உலக புத்தக நாள்
  3. புத்தக வாசிப்பின் அவசியம்
  4. புத்தகத்தின் பயன்கள்
  5. மனிதனை பூரணமாக்கும் புத்தகங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

புத்தகம் என்பது கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி ஆகும். ஒவ்வொரு புத்தகமும் ஒரு புது விடயத்தை எமக்கு கற்றுக் கொடுக்கிறது. புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்கின்றார் லெனின்.

ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது உலகினை நோக்கிய ஒரு வாசலை திறக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

புத்தகங்கள் மனித வாழ்க்கையை அழகாக்கும். காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகங்கள் ஆகும். புத்தகங்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உலக புத்தக நாள்

உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் கொண்டாடப்படும் நிகழ்வாகும்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் திகதி இந்நிகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. இந்நாளில் உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் புத்தகத்தையும் அதனை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர்.

புத்தக வாசிப்பின் அவசியம்

இன்றைய நாளில் புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைந்து உள்ளது. புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. வாசிப்பு பழக்கத்தை உண்டாக்கி கொள்வதன் மூலமே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாய் பரிணமிக்க முடியும்.

உலக அறிவைப் பெறுவதற்கு நாம் பல்வேறுபட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள இளைஞர்கள் அனைவரும் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிந்து அதன் மூலம் சமூக கலாசார முன்னேற்றம் மற்றும் மனிதநேய உணர்வை வென்றெடுத்து மரியாதை செய்ய வேண்டும்.

புத்தகத்தின் பயன்கள்

நமது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி அறிவை மேம்படுத்த செய்வதில் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மனிதனை அறிவுள்ளவனாய், பூரணத்துவம் பெற்றவனாய் மாற்றுவதில் புத்தகங்கள் பங்களிப்புச் செய்கின்றன.

உலகின் பல கலாசார மற்றும் அறிவியல் தகவல்களை அறியவும், இலக்கிய சிந்தனையை விரிவுபடுத்தி கொள்ளவும் உதவுகின்றன.

புத்தகங்கள் வாசிப்பதன் வாயிலாக ஒருவரின் சிந்தனை திறன் மேலோங்குவதுடன் சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும்.

மனிதனை பூரணமாக்கும் புத்தகங்கள்

புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்றால் அது மிகையாகாது. உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள்.

சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர், போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. மனிதனுக்குப் பரந்துபட்ட அறிவினை வழங்குவதில் புத்தகங்களே முதன்மை வகிக்கின்றன.

முடிவுரை

புத்தகங்களால் மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். வாசிப்புப் பழக்கம் இன்றைய தலைமுறைக்கும், எதிகாலத் தலைமுறைக்கும் ஒரு பாலமாக இருந்து அறிவைக் கடத்துகின்ற செயலைச் செய்கின்றது.

வாசகனுக்குப் புத்தகங்கள்தான் உலகம். அவன் புத்தகங்களின் வழியேதான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிறான். எனவே நாமும் புத்தகங்களை வாசித்து வாழ்வில் முன்னேறுவோம்.

You May Also Like:
கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை
பெண்கள் பாதுகாப்பு கட்டுரை