இந்த பதிவில் “பொறுமை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
பொறுமை நம்மை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது.
பொறுமை பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பொறுமை
- அறிவியல் பார்வை
- பொறுமையின் சிறப்பு
- பொறுமையின்மையின் விளைவுகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய முக்கிய குண நலன்களில் பொறுமையும் ஒன்றாகும். ஏனெனில் பொறுமை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை விளைவிக்க கூடியது ஆகும்.
இதனையே எமது முன்னோர் “பொறுத்தார் பூமி ஆழ்வார். பொங்கினார் காடாழ்வார்” என்பதை போன்ற பல பொன்மொழிகள் மூலமாக எமக்கு கூற விளைந்துள்ளனர். இக்கட்டுரையில் பொறுமை பற்றி நோக்கலாம்.
பொறுமை
பொறுமை என்பது நமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும் கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும்.
மற்றவர் நம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சினைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும், சில அசாதாரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும்.
இந்தக் குணம் நம்மை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது.
அறிவியல் பார்வை
பரிணாம உளவியலிலும் அறிவாற்றல் நரம்பு அறிவியலிலும் பொறுமையைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மனிதனும் விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையைப் பற்றி ஆராய்ந்த போது சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும் நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என்றும் இரண்டு விருப்பத் தேர்வை கொடுக்கும் போது சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மையை பெறுவதையே பெரும்பாலும் தெரிவு செய்கின்றனர்.
இதை ஆன்மீகத்தில் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் விளக்குகிறார்கள். தாமதமாகும் இணையதளங்களை காட்டிலும் விரைவில் ஏற்றப்படும் இணைய தளங்களையே பயனர்கள் விரும்புவதை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
பொறுமையின் சிறப்பு
எளிதாக பெற முடியாத நற்பண்பு ஒன்று இருக்கின்றது என்றால் அது பொறுமை என்னும் நற்பண்பு ஆகும். “பொறுத்தார் பூமி ஆழ்வார்” “பொறுமை கடலினும் பெரிது” போன்ற பழமொழிகள் பொறுமையின் பெருமைகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.
மனிதன் தனது அனுபவ அறிவினால் பல நல்ல இயல்புகளை பெறுகின்றான். அந்த நல்ல இயல்புகளை நாம் திரட்டி பார்த்தோமேயானால் அவை அனைத்தும் பொறுமை என்ற ஒன்றில் தான் அடங்கும்.
மலை போல் உறுதியாய் பூமியைப் போல் எதையும் தாங்கும் சக்தியுடன் கடல் போல் பரந்த உள்ளத்துடன் வாழ்வதற்கு பொறுமை உதவும்.
பொறுமையின்மையின் விளைவுகள்
இந்த நவீன உலகத்தில் சிறிய விசயத்திற்கு கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகின்றோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகின்றது. இந்த பகைமை நம் உறவுகளையும் நட்புகளையும் இழக்கச் செய்கின்றது. ஒருவனை எதற்குமே பயனற்றவன் ஆக்கி விடுகின்றது.
பொறுமை இன்மையானது ஒரு மனிதனிடத்தில் கோபம், குழப்பம், ஆணவம், கர்வம் பொறாமை போன்றவற்றை உருவாக்கிவிடுகின்றது.
முடிவுரை
பொறுமை இருந்தால் மாத்திரம் ஒரு மனிதர்கள் நல்லவராகி விட முடியாது. அந்தப் பண்புடன் சேர்ந்து அவர்களுடைய பேச்சில் ஒரு பணிவு, கண்களில் கனிவு, செய்யும் தொழிலில் நேர்மை உண்மை, நாணயம், அன்பு கலந்து இருக்கும் போது மட்டுமே அவர்கள் நிச்சயமாக பொறுமையுள்ள மனிதருள் மாணிக்கமாய் திகழ்வார்கள்.
You May Also Like : |
---|
மனிதம் காப்போம் கட்டுரை |
பெண்களின் சிறப்பு கட்டுரை |