இந்த பதிவில் “மனிதம் காப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.
மனிதர்களாகிய நாம் ஐந்தறிவு மிருகங்களிடையே உள்ள அன்பை பார்த்து எனினும் அடுத்தவர் துன்பத்தில் பங்கெடுக்க பழக வேண்டும்.
மனிதம் காப்போம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தற்காலத்தில் மனிதம்
- தானத்தில் வாழும் மனிதம்
- குடும்பங்களில் மனிதம்
- குழந்தைகளிடையே மனிதம்
- முடிவுரை
முன்னுரை
மனிதம் என்பது மனிதர்களிடையே காணப்படும் நேசத்தினை வெளிப்படுத்துவது ஆகும்.
அதாவது மனிதரினுள் பிற உயிர்கள் தொடர்பாக இருக்கும் நேசத்தினால் உருவாகும் அன்புச் செயல்களின் வெளிப்பாடே மனிதம் அல்லது மனித நேயம் எனப்படுகின்றது.
அந்த வகையில் இக்கட்டுரையானது தற்காலத்தில் மனித நேயத்தின் நிலை மற்றும் அதனை எதிர்காலத்தில் நிலை நாட்ட வருங்கால சந்ததிகளுக்கு கடத்தப்பட வேண்டியதன் அவசியம் வரை விளக்குவதாக அமைகின்றது.
தற்காலத்தில் மனிதம்
எமது முன்னோர் ஒற்றுமையாக கூட்டாக வாழ்ந்து மனிதநேயம் பேணினர். அவர்களிடையே பகிர்வு, விட்டுக்கொடுப்பு, சுயநலமற்றவை என்பன காணப்பட்டது. பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஒருவர் மற்றவருக்கு உதவி வாழ்ந்தனர்.
ஆனால் இன்று அந்த நிலை தலைகீழாகிவிட்டது. சுயநலம் என்ற நோய் அனைவரிடமும் பரவி விட்டது.
ஒருவர் விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அவரை காப்பாற்றும் எண்ணம் அற்று அதை தொலைபேசியில் படம் எடுத்து வலைத்தளங்களில் பதிவிடும் எண்ணம் காணப்படுகின்றதே தவிர பாதிக்கப்பட்டவருக்கு உதவிடும் எண்ணம் மறந்து போய்விட்டது.
நாகரீக வளர்ச்சியின் தாக்கத்தால் மனிதநேயம் அழிந்து கொண்டே வருகின்றது. ஆனாலும் ஆங்காங்கே ஒரு சில மனிதநேய செயல்கள் நடைபெறுவது மனிதம் முழுமையாக அழிந்து போகவில்லை என்பதை உணர்த்துகின்றது.
தானத்தில் வாழும் மனிதம்
தேவையில் இருப்போருக்கு தேவையான நேரத்தில் சரியான உதவியை செய்வது தான் மனிதம். பணமோ பொருளோ உள்ளவர்கள் இந்த உதவியை செய்யலாம். பணம், பொருள் இல்லாதவர்களும் கூட பல்வேறு வகையில் உதவிகளை செய்யலாம்.
உதாரணமாக இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்யலாம். அது போல கண் தானம் போன்ற உடல் உறுப்பு தானங்களை செய்தும் சரீர உதவிகளை செய்து மனித நேயத்தை வெளிப்படுத்தலாம்.
குடும்பங்களில் மனிதம்
சமூகத்தின் மிகச்சிறிய அலகு குடும்பமாகும். எனவே சமூகத்திற்கு தேவையான ஒரு விடயத்தை நாம் செய்ய நாம் பழக்கப்பட வேண்டிய இடமும் குடும்பமே ஆகும். முற்காலத்தில் கூட்டுக்குடும்ப வாழ்வியலில் அதனை காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் தற்காலத்தில் தனிக் குடும்பம் என்ற பிரிவு உண்டானதன் பின்னர் பிறருக்கு உதவி செய்தல், பிறர் துன்பத்தில் பங்கெடுத்தல் ஆகின மிகவும் குறைந்து போய்விட்டன.
குழந்தைகளிடையே மனிதம்
குழந்தைகளிடையே மனிதநேயம் தொடர்பான சிந்தனைகளை விதைக்காததன் காரணமாக மனிதநேய செயல்கள் மறக்கடிக்கப்பட்டு மனிதம் சிதைக்கப்படுகின்றது.
உதாரணமாக நமது வீட்டில் பிச்சை கேட்டு வரும் நபர்களிடையே பெற்றோர் குழந்தைகளின் முன்னிலையிலேயே “உனக்கு கை, கால்கள் நன்றாகத்தானே இருக்கின்றது. உழைத்து பிழத்துக்கொள்” என விரட்டுகின்றனர்.
பிஞ்சு குழந்கைள் அதனை உள்வாங்குவதனால் பிறருக்கு உதவி செய்யக் கூடாது என்ற எண்ணத்தினை தமக்குள் வளர்த்துக் கொள்கின்றனர். இது போன்ற செயல்களிலிருந்து தான் மனிதத்தை சிதைக்கும் செயல்கள் ஆரம்பமாகின்றன.
முடிவுரை
மனிதர்களாகிய நாம் ஐந்தறிவு மிருகங்களிடையே உள்ள அன்பை பார்த்து எனினும் அடுத்தவர் துன்பத்தில் பங்கெடுக்க பழக வேண்டும்.
எம் மூதாததையர் மூட்டி வைத்த மனிதம் என்கின்ற அன்புத் தீயினை எம்மிடையே எரியச் செய்ய வேண்டும். பல்வேறு கலாச்சாரம் கொண்ட எமது நாட்டில் மனித நேயம் மலர எம்மை அர்பணிக்க முன்வர வேண்டும்.
You May Also Like : |
---|
செவிலியர் பணி கட்டுரை |
தாய் பற்றிய கட்டுரை |