இந்த பதிவில் “மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் கட்டுரை” என்ற தலைப்பில் மிகச்சிறந்த நூலான திருக்குறள் பற்றி பார்க்கலாம்.
மாணவர்களை பொறுத்தவரை அவர்கள் தமது அறிவை விருத்தி செய்வதற்கு அதிகளவான நூல்களை வாசிக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.
மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- புத்தகங்களின் பயன்கள்
- திருக்குறளின் சிறப்பு
- திருக்குறள் கூறும் நற்கருத்துக்கள்
- மாணவர்கள் பெறும் பயன்கள்
- முடிவுரை
முன்னுரை
வாசிப்பு ஒரு மனிதனிற்கு பல்வேறு அறிவுசார்ந்த பயன்களை அள்ளி வழங்குகின்றது. வாசிப்பினால் மட்டுமே மனிதன் ஒரு விடயத்தை பற்றிய முற்று முழுதான அறிவைப் பெற்றுக் கொள்கின்றான்.
இதனையே “வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்” எனக் குறிப்பிடுவர். மாணவர்களை பொறுத்தவரை அவர்கள் தமது அறிவை விருத்தி செய்வதற்கு அதிகளவான நூல்களை வாசிக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.
வாசிப்பதனால் வெறுமனே அறிவும் மட்டும் விருத்தியாவதில்லை. அவர்களின் மொழியறிவு மற்றும் நினைவாற்றல் போன்றனவும் அதிகரிக்கின்றன.
புத்தகத்தின் பயன்கள்
“மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்” எனக் குறிப்பிடுகின்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். புத்தகம் மனிதர்களின் சிறந்த நண்பனாகும். யாருமற்ற நேரத்திலும் அவை எங்களோடிருந்து எமது நேரத்தை சரியாக பயன்படுத்த உதவி புரிகின்றன.
எழுத்தாளரின் எண்ணப்பதிவுகளை சரியாக காட்டும் புத்தகங்கள் எமக்கு தேவைப்படும் விடயங்களை விரிவாகத் தருகின்றன.
சிறுவயதில் கதைப்புத்தகங்களுடன் தொடங்கும் வாழ்க்கை பாடப்புத்தகங்கள் நாவல்கள் என விரிந்து செல்கின்றது.
அனைத்து புத்தகங்களும் மாணவர்களிற்கு உரியவையன்று. நல்ல புத்தகங்களை தெரிந்தெடுத்து வாசித்தல் அவசியமாகும். நல்ல புத்தகங்கள் எனப்படுபவை நம்மை தூங்கவிடாமல் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் புத்தகங்களாகும்.
திருக்குறளின் சிறப்பு
மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகத்தில் முதன்மையானதாக விளங்குவது திருக்குறளாகும். பல நூற்றாண்டுகளிற்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூலானது இன்றுவரை அதிகமான மக்களால் படித்து பின்பற்றபட்டுவரும் ஒரு நூலாகும்.
திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. திருக்குறளானது மதச்சார்பற்ற பொதுவான அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் நூற்றுக்கணக்கான அறநெறிகளை எடுத்தியம்புகின்றது.
திருக்குறளில் மொத்தமாக 1330 ஈரடிச்செய்யுள்கள் காணப்படுகின்றன. மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திருக்குறளை வாசித்து மனனம் செய்ய பழக்கப்படுத்தப்படுகின்றனர்.
இந்நூலானது ஆங்கிலம், உருது, அரபு என 82 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் கூறும் நற்கருத்துக்கள்
திருக்குறள் மாணவர்களிற்கு பல்வேறு நற்கருத்துக்களை வழங்குகின்றது. திருக்குறள் வாய்மை, கருணை, நன்றி மறவாமை, பொறுமை, மது மற்றும் புலால் உட்கொள்ளாமை, சூதாடாமை, கூடா நட்பு போன்ற அன்றாட வாழ்க்கையின் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்களை கற்பிக்கின்றது.
திருக்குறளாது கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களிற்கு போதிக்கின்றது. திருவள்ளுவர் கல்விக்கென்று தனியான அதிகாரத்தை உருவாக்கியுள்ளார்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு மாடல்ல மற்றயவை” என அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி எனக் குறிப்பிடுகின்றார்.
செய்ந்நன்றி மறவாமையை தனியோரு அதிகாரமாக எழுதியுள்ள திருவள்ளுவர், “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என ஒருவர் செய்த நன்றியை மறப்பவர்களிற்கு எந்நாளுமே உய்வே கிடையாது எனக் குறிப்பிடுகின்றார்.
மாணவர்கள் பெறும் பயன்கள்
திருக்குறளை கற்பதனால் மாணவர்களிற்கு கிடைக்கும் பயன்களில் முதன்மையானது சுயஒழுக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு போன்ற பழக்கவழக்கங்கள் தன்னிச்சையாக தோற்றம் பெறுதலாகும்.
அதுமட்டுமின்றி குருவை மதித்தல், பெரியோரை மதித்தல், உயிர்கள் இடத்தில் கருணை காட்டவும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
முடிவுரை
ஒவ்வொரு வீடுகளிலும் பெற்றோர் பிள்ளைகளிற்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி அவற்றை வாசிக்க மாணவர்களை ஊக்குவித்தல் அவசியமாகும்.
அதனால் நல்லொழுக்கங்கள் மிகுந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடிவதோடு அனைவரும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
You May Also Like : |
---|
நான் விரும்பும் நூல் திருக்குறள் கட்டுரை |
திருவள்ளுவர் தினம் கட்டுரை |