மூன்றாவது கண் கல்வி கட்டுரை

moondravathu kan kalvi katturai in tamil

இந்த பதிவில் “மூன்றாவது கண் கல்வி கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதர்களிற்கு கல்வியால் கிடைக்கும் நன்மைகளை வார்த்தைகளால் அளவிட முடியாது.

மூன்றாவது கண் கல்வி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கல்வியின் சிறப்பு
  • கல்வியின் தேவை
  • கல்வி தரும் செல்வம்
  • கல்வியால் உயர்ந்தவர்கள்
  • முடிவுரை

முன்னுரை

“இந்த உலகத்தை மாற்றக்கூடிய ஒரு ஆயுதம் உள்ளது, அதன் பெயர் கல்வி” என்று குறிப்பிடுகின்றார் நெல்சன் மண்டேலோ. கல்வி என்பது மனிதர்களிற்கு அளப்பரிய மாற்றங்களையும் வெற்றிகளையும் ஈட்டித் தரும் விலை மதிக்க முடியாத செல்வமாகும்.

கல்வியின் சிறப்புக்களையும் சமூகத்திற்கான கல்வியின் தேவைப்பாட்டையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

மனிதர்களிற்கு கல்வியால் கிடைக்கும் நன்மைகளை வார்த்தைகளால் அளவிட முடியாது. இக்கட்டுரையில் மூன்றாவது கண் கல்வி பற்றி நோக்கலாம்.

கல்வியின் சிறப்பு

கல்வி கற்காத மனிதன் சமூகத்தில் சிறப்புற்று வாழ்வதென்பது மிகவும் கடினமாகும். கல்வி கற்றவர்கள் தம்முடைய சமூகத்தினால் மட்டுமன்றி பிற சமூகத்தினராலும் மதிக்கப்படுகின்றார்கள்.

வள்ளுவர் தனது நூலாகிய திருக்குறளில் “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு மாடல்ல மற்றயவை” என்று குறிப்பிடுகின்றார். பிற செல்வங்களை போலல்லாது அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியாகும்.

கல்வியின் தேவை

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரிற்கும் கல்வி அவசியமான ஒன்றாகும். சிறந்த கல்வியானது எம்மைச் சுற்றியுள்ள விடயங்களை விளங்கிக் கொள்ளவும் சரியான முடிவுகளை எடுப்பதற்கான பகுத்தறிவையும் வழங்குகின்றது.

ஏனைய செல்வங்களை மேலாண்மை செய்யக் கூடிய அறிவை கல்வியானது வழங்குகின்றது.

ஒரு நாட்டினது நிலைத்து நிற்கும் அபிவிருத்தியானது அந்நாட்டின் கல்வியறிவு வீதத்திலேயே தங்கியுள்ளது. எனவே கல்வி கற்ற அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க கல்வியின் தேவை அதிகளவாகக் காணப்படுகின்றது.

கல்வி தரும் செல்வம்

கல்வி கற்ற ஒருவர் சமூகத்தில் உயந்த இடத்தில் மதிக்கப்படுகின்றார். ஒளவையார் தனது நூலாகிய கொன்றை வேந்தனில் “மன்னனிற்கு தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோனிற்கு சென்றவிட மெல்லாம் சிறப்பு” என்று ஒரு நாட்டின் அரசனையும் நன்றாக கற்றறிந்த பண்டிதரையும் ஒப்பீடு செய்கின்றார்.

இந்த உலகின் எப்பாகத்திலும் கற்றவர்களிற்கு மதிப்புண்டு. காலங்கள் உருண்டோடினாலும் கற்றவர்களின் புகழ் மறைவதில்லை.

திருவள்ளுவர், ஒளவையார் போன்றவர்களின் புகழ் இன்றியளவும் நிலைத்திருக்கக் காரணம் அவர்கள் மெத்தப் படித்து அறிவுசார்ந்த நூல்களை எழுதியதாலாகும். கல்வி செல்வம் நிறைந்திருக்கும் போது பணம், புகழ் போன்ற ஏனைய செல்வங்கள் தேடி வரும்.

கல்வியால் உயர்ந்தவர்கள்

கல்வியால் இந்த உலகை வென்றவர்களிற்கு உதாரணமாக பலரைக் குறிப்பிடலாம். இந்தியாவின் பதினொராவது குடியரசு தலைவராக விளங்கிய டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வறுமையை கல்வியால் வென்ற ஒருவர்.

இளமைக்காலத்தில் மிகுந்த கடினமான நாட்களை கடந்த அவர் தனது கல்வித்திறமையாலும் விடாமுயற்சியாலும் அனைவரின் மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்தார்.

விண்வெளிக்கு சென்ற இந்தியாவின் முதல் பெண்மணியான “கல்பனா சௌலா” தான் கற்ற கல்வியால் இந்த உலகை தன்னை வியர்ந்து பார்க்க வைத்தார்.

முடிவுரை

ஒரு மனிதனிற்கு உணவு எந்தளவு முக்கியமோ கல்வியும் அந்தளவு முக்கியமாகும். தற்போது பெண் கல்விக்காக முன்னுரிமை அதிகரித்து வருகின்றது. கல்வி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த அத்திவாரமாகும்.

ஆணோ பெண்ணோ உரிய காலத்தில் முறையான கல்வியை பெற்றுக் கொள்வதன் மூலம் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். அதுவே நம்நாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

You May Also Like:
இளமையில் கல்வி கட்டுரை
பெண் கல்வி கட்டுரை