வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

Vasippin Mukkiyathuvam Katturai

அறிவையும் எண்ணத்தையும் அதிகப்படுத்த உதவும் வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை பதிவை இதில் காணலாம்.

வாழ்வில் வெற்றியடைந்த பல மனிதர்களும் கூறும் ஒரே விடயம் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான் ஏனென்றால் அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளார்கள்.

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. வாசிப்பின் முக்கியத்துவம்
  3. வாசிப்பின் பயன்கள்
  4. வாசிப்புத் திறனை விருத்தி செய்யும் வழிகள்
  5. வாசிப்பும் இளைய சமுதாயமும்
  6. முடிவுரை

முன்னுரை

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும். மனிதன் முழுமை பெறவேண்டுமெனில் வாசிப்பு அவசியம். “நூலளவு ஆகுமாம் நுண்ணறிவுˮ போன்ற பழமொழிகள் எல்லாம் வாசிப்பின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துகின்றன.

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திலும் மனிதன் ஆறறிவுடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். இதுவே மனிதனை வளர்ச்சி அடையச் செய்துள்ளது. மனித அறிவில் வாசிப்பு முக்கிய இடம் வகிக்கின்றது.

உலகில் உயர்ந்த இடத்திலுள்ள பலர் வாசிப்பினால் உயர்ந்துள்ளனர். அன்றாடம் நாம் வாசிப்பதன் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய நவீன உலகில் தொழில்நுட்ப பயன்பாட்டால் வாசிப்பு பழக்கம் அருகி வருகின்றது. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வாசிப்பின் முக்கியத்துவம்

“கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்ˮ என்னும் பழமொழியின் மூலம் வாசிப்பின் முக்கியத்துவம் எளிதாக விளக்கப்படுகின்றது. உடலிற்கு எவ்வாறு உடற்பயிற்சி முக்கியமோ அதுபோல வாசிப்பு மனதிற்கு முக்கியமானதாகும்.

ஓர் சிறந்த மனநிலையை உருவாக்குவதற்கு வாசிப்பு அவசியம். நன்மை தீமைகளைக் கண்டறிய வாசிப்பு உதவுகின்றது. அறிவினை விருத்தி செய்து கொள்வதற்கும் வாசிப்பு முக்கியமானதாகும்.

கல்வி மட்டுமல்லாது நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் போக்கையும் உலகம் பற்றிய விடயங்களையும் தெரிந்துகொள்ள வாசிப்பு முக்கியமாகின்றது.

வாசிப்பின் பயன்கள்

  • நூல் வாசிப்பு மனிதனுக்கு அறத்தினை புகட்டும், ஆக்கத்தை அளித்திடும்.
  • வாசிப்பதன் மூலம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.
  • பார்ப்பதன் மூலமே மற்றும் கேட்பதன் மூலமே ஒரு விடயத்தினை அறிவதைவிட வாசிப்பதன் மூலம் அறியும் விடயமானது நீண்டகாலத்திற்கு நினைவிருக்கும்.
  • திறன் அதிகரிக்கும்.
  • உலக விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது.

வாசிப்பே ஒருவனை அறிவார்ந்தவனாகக் கட்டமைக்கிறது. ஏனெனில் வாசிப்பு அறிவை வழங்கும் அமுதசுரபியாகும். ஒரு கல்லை உளி செதுக்கி செதுக்கி அழகிய சிற்பமாய் மாற்றுவது போல புத்தகங்கள் வாசிக்க வாசிக்க அவை நம்மை பண்புள்ள மனிதர்களாக்குகின்றன.

வாசிப்புத் திறனை விருத்தி செய்யும் வழிகள்

இன்று நம்மிடையே குறைந்து வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக வாசிப்பு காணப்படுகின்றது. வாசிப்புப் பழக்கத்தை வாழ்வோடு தொடர்புடைய அம்சமாக பார்க்கவேண்டும்.

வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வதில் ஒருவரின் மனநிலை பிரதான பங்கு வகிக்கின்றது. வாழ்வோடு ஒன்றிணைந்த செயற்பாடாக வாசிப்பினை மாற்றிக்கொள்ள வேண்டும்.

புத்தகங்களை வாசிப்பதன் மூலம் எமது வாழ்க்கையானது வெற்றிப் பக்கங்களை நோக்கி பயணிக்கும் என்பதனை நினைவு கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கங்களை வளர்க்க வேண்டும்.

வாசிப்பதற்காக ஒரு இலக்கை தீர்மானித்தல் வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பக்கமோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகமே என்று ஒரு இலக்கை நிர்ணயித்து வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

அமைதியான சூழலை தேர்ந்தெடுத்தல் வேண்டும். தினமும் வாசிப்பதற்கு என நேரத்தை ஒதுக்குவது அவசியம்.

பயன் தரும் நூல்களைத் தெரிவு செய்து நமது வருமானத்தின் ஒரு பகுதியை நூலுக்காகச் செலவிட வேண்டும். வாசித்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வாசிப்பும் இளைய சமுதாயமும்

இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் வாசிப்பில் ஈடுபாடு காட்டாத நிலையையே நாம் அதிகம் காண்கின்றோம். நூல்களைக் கையில் எடுத்தாலே தூக்கம், சோம்பல், ஆர்வமின்மை போன்ற எதிர்மறை எண்ணங்களே அவர்களிடம் தோன்றுகின்றது.

இத்தகைய தலைமுறை நாட்டிற்கு பாதகத்தினையே ஏற்படுத்தும். தொழில்நுட்ப சாதனங்களின் மீதுள்ள மோகம் இளைய சமுதாயத்தில் வாசிப்புப் பழக்கத்தை அரிதாக்கி வருகின்றது.

பல்வேறு தினசரிப் பத்திரிகைகள், நூல்கள் வெளிவருகின்ற போதிலும் அதுபற்றி அறியாதவர்களாகவேயுள்ளனர். எனவே வாசிப்பின் மீதான ஆர்வத்தினை அவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம்.

முடிவுரை

வாழ்க்கையென்பது இடர்கள் நிறைந்தது. அதை நோக்கியப் பாதை தெளிவாகவுள்ள போதுதான் வாழ்க்கை சிறப்பாகும். பிரகாசமான வாழ்க்கையை ஏற்படுத்துவதில் நூல்கள் மீதான வாசிப்பு பெரும் பங்காற்றி வருகின்றது.

வாசிப்பு நம் முன்னோர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்றது. அதனால் தான் அவர்களால் அதிக நூல்களை அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்ல முடிந்தது.

எனவே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு எதிர்காலத் தலைமுறையினருக்கு நாமும் நன்மை செய்வோம். வாசிப்புக் கலாச்சாரம் கொண்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்