விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுரை

விஞ்ஞான வளர்ச்சி கட்டுரை

இந்த பதிவில் “விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது நன்மை, தீமை இரண்டையும் கலந்தாகவே உள்ளது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விஞ்ஞானத்தின் தோற்றம்
  3. விஞ்ஞான வளர்ச்சியின் பயன்கள்
  4. விஞ்ஞான வளர்ச்சியின் பாதகங்கள்
  5. தமிழர் வாழ்வியலும் அறிவியல் வளர்ச்சியும்
  6. முடிவுரை

முன்னுரை

நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் தாக்கம் மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும், எல்லா அம்சங்களிலும் வந்து விட்டது. விஞ்ஞான சிந்தனை வளர்ச்சி என்பது கடந்த 300 ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்த ஒரு மனித சிந்தனையின் முதிர்ச்சி என்று கூறலாம்.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்று மனிதன் எண்ணிலடங்கா பயன்களை அனுபவித்து வருகின்றான்.

மனித வாழ்வும் விஞ்ஞானமும் இரண்டறக் கலந்தே இன்றைய நவீன உலகம் இயங்கி வருகின்றது என்றால் அது மிகையல்ல. விஞ்ஞானத்தின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விஞ்ஞானத்தின் தோற்றம்

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே விஞ்ஞானமும் தோன்றியது. குறிப்பாக மனிதன் கல்லையும் கல்லையும் உரசியதில் இருந்தே விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஆரம்பமானது எனலாம்.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவிகளே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும்.

ஆரம்பத்தில் கல்லாலான ஆயுதங்களையும், எலும்பு கொம்புகளினாலான ஆயுதங்களையும் கண்டுபிடித்ததில் இருந்து தோன்றிய விஞ்ஞானமானது இன்று அபரிவிதமான, வியக்கத்தக்க வகையிலான பல ஆயிரக் கணக்கிலான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றது.

விஞ்ஞான வளர்ச்சியின் பயன்கள்

விஞ்ஞான வளர்ச்சியானது இன்று எல்லாத் துறைகளிலும் சென்றடைந்து மனிதனுக்குப் பெரும் நன்மையைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டு பிடிப்பதற்கும், கண்டுபிடித்த பின்பு நோய்களை குணப்படுத்துவதற்கும் விஞ்ஞான உபகரணங்கள் பெரிதும் உதவுகின்றன.

நவீன கண்டுபிடிப்புகளால் மனித வாழ்க்கை இலகுபடுத்தப்பட்டுள்ளது. உடனுக்குடன் தகவல்களை அறிந்துகொள்ளவும் நினைத்த இடங்களுக்கு பயணம் செய்யவும் முடிகின்றது.

விஞ்ஞான வளர்ச்சியின் பாதகங்கள்

விஞ்ஞான வளர்ச்சியானது மனிதனுக்கு பல வகையில் பயன்பட்டாலும் அவை தீமைகளை விளைவிப்பதிலிருந்தும் தவறவில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அணுவாயுதங்கள், அழிவைத் தரும் இராணுவத் தளபாடங்கள் போன்றன மனித உயிர்களை பலி எடுப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

சூழல் மாசடைவதற்கும், அதிகளவிலான விபத்துக்கள் நிகழ்வதற்கும் போக்குவரத்து சாதனங்களின் கண்டுபிடிப்பே காரணமாகின்றது.

தமிழர் வாழ்வியலும் அறிவியல் வளர்ச்சியும்

தமிழர் வாழ்வியலோடு அறிவியலும் இரண்டறக் கலந்து உள்ளது. பழந்தமிழர்கள் சுகவாழ்வுக்காக அறிவியல் ரீதியான சில வழக்கங்களை ஏற்படுத்தினார்கள். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் எனக் கண்டவர்கள் பழந்தமிழர்கள்.

சங்ககாலத் தமிழர் காலத்தில் உதித்த இலக்கியங்கள் வெறும் ரசனைக்கு மட்டுமல்லாது அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்புகளாக உள்ளன.

புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும் அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி நீரின் மேல் புவியும், புவியின் மேல் மலைகளும், நிலப்பரப்பும் இவை அனைத்தும் நெருப்பின் மேல் நிலைத்திருக்கும் படி இயற்கை வகுத்துள்ளது என்ற புவியியல் அறிவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வள்ளலார் வெளிபடுத்தியுள்ளார்.

முடிவுரை

மனிதன் கருவில் தோன்றிய காலம் முதல் அவனது வாழ்வு முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி தொடர்வதை காண்கிறோம். விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது நன்மை, தீமை இரண்டையும் கலந்தாகவே உள்ளது. எனினும் விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

விஞ்ஞானத்தின் சரியான பாவனை அல்லது சரியான திசையை நோக்கிய நகர்வு உலகின் தொடர்ச்சியான நிலவுகைக்கு துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.

You May Also Like :
ஊடகம் பற்றிய கட்டுரை
அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள்