விளம்பரம் பற்றிய கட்டுரை

Vilambaram Katturai In Tamil

இன்று மனித வாழ்வோடு இரண்டற கலந்த “விளம்பரம் பற்றிய கட்டுரை” பதிவை இந்த பதிவில் காணலாம்.

நல்ல விஷயங்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்களை ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால் தவறான விளம்பரங்களை ஒருபோதும் ஊக்குவித்தல் கூடாது.

விளம்பரம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விளம்பரத்தின் தொன்மை
  3. விளம்பரத்தின் முக்கியத்துவம்
  4. விளம்பரத்தின் நன்மைகள்
  5. விளம்பரத்தின் தீமைகள்
  6. முடிவுரை

முன்னுரை

வணிக நிறுவனங்கள் தங்களது புதிய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு நுட்பங்களை கையாளுகின்றன. இவ்வாறான நுட்பங்களில் விளம்பரப்படுத்தல் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இத்தகைய விளம்பரம் இன்றைய மனித வாழ்வியலோடு இரண்டறக் கலந்துவிட்டது. விளம்பரமில்லாமல் எந்தப்பொருளும் விற்கப்படுவதில்லை. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் விளம்பரங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

விளம்பரங்களின் ஊடாக நுகர்வோருக்கு பொருள் பற்றிய தகவல் வழங்கப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் விளம்பரங்களின் பங்களிப்பானது நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது.

சுவரொட்டியில் ஆரம்பித்து தொலைக்காட்சி, இணைய விளம்பரங்கள், அலைபேசி விளம்பரங்கள் என பரிணாமம் அடைந்து வரும் விளம்பரங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

விளம்பரத்தின் தொன்மை

விளம்பரமானது நேற்றோ அல்லது இன்றோ உருவாக்கப்பட்டதல்ல. அது மானுட வரலாறு தொடங்கிய காலத்திலேயே விளம்பரங்கள் தொடங்கிவிட்டதாகப் பல வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைக் கால ரோமானிய, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் தோன்றிய குகை ஓவியங்கள், சுவர் சித்திர ஓவியங்கள், பாறை-கோடு ஓவியங்களில் விளம்பரம் முதல் படிநிலை வளர்ச்சி கண்டது என்று பலர் குறிப்பிடுகின்றனர்.

தற்காலிக விளம்பரயுக்திகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தலைத் தூக்கின என்று பலர் குறிப்பிடுகின்றனர்.

விளம்பரத்தின் முக்கியத்துவம்

வணிகத்தில் விளம்பரத்தின் முக்கியத்துவமானது விளம்பரம் இல்லாத ஒரு பொருளை விற்பது மிகக்கடினம் என்றாகிவிட்டது.

அந்த அளவிற்கு வழங்கப்பட்ட தயாரிப்பு அல்லது சேவையிலிருந்து வருமானத்தை அதிகரிக்க, விளம்பரங்கள் முக்கியம் பெறுகின்றன. உற்பத்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரங்கள் துணைபுரிகின்றன.

புதிய தொழில்களைத் தொடங்கும் நபர்களுக்கும், மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கும் தங்களது தொழிலை விரிவுபடுத்தவும் வளர்ச்சியை எட்டவும் விளம்பரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

விளம்பரத்தின் நன்மைகள்

சிரிக்கவும், சிந்திக்கவைக்கவும், பொழுதுபோக்கவும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. மற்றும் வணிக நிறுவனங்களின் வெற்றிக்கு விளம்பரங்கள் உறுதுணையாக உள்ளன.

புதிய பொருட்களை அறிமுகம் செய்வதற்கும் அதனை விற்பனை செய்வதற்கும் விளம்பரங்கள் பயன்படுகின்றன. பாமர மக்களும் இலகுவில் அறிந்து கொள்ளத் தக்கதாக விளம்பரகள் சித்தரிக்கப்படுகின்றன.

விளம்பரங்கள் கிராமங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. நாட்டின் வருமானத்தை உயர்த்த உதவுகின்றன.

விளம்பரத்தின் தீமைகள்

விளம்பரங்களில் முதன்மைப்படுத்தப்படும் மது அருந்துதல், புகை பிடித்தல் காட்சிகளைப் பார்த்து மது அருந்துவோர், புகைபிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளம்பரங்கள் தரமற்ற பொருட்களை விற்பதற்கு ஊக்கமளிக்கின்றன.

விளம்பரங்களினால் தேவைக்கு அதிகமான பொருட்களின் குவிப்பையும், மேல்நாட்டுப் பொருட்களின் மீது மோகத்தையும், கவர்ச்சியையும் ஏற்படுத்தப்படுகின்றது. மக்களை உலகமயமாக்கும் தன்மையில் மிகுதியாக ஈடுபடச் செய்கின்றன.

முடிவுரை

நல்ல விஷயங்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்களை ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால் தவறான விளம்பரங்களை ஒருபோதும் ஊக்குவித்தல் கூடாது. எனவே விளம்பரங்கள் தொடர்பாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு இருத்தல் வேண்டும்.

விளம்பரங்கள் மூலம் மக்களிடம் பரவலாக நிறைந்து கிடக்கும் பணத்தை முதலாளியிடம் கொண்டு சேர்த்து உலகப் பணக்காரர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

எனவே எப்போதும் நுகர்வோர் விளம்பரங்கள் தொடர்பான விளிப்புணர்வுடன் செயற்படுதல் சிறந்ததாகும்.

You May Also Like:
அறிவியல் வளர்ச்சி கட்டுரை
உணவு கலப்படம் கட்டுரை