விவசாயம் பற்றிய கட்டுரை

Vivasayam Katturai In Tamil

இந்த பதிவில் தொழில்களில் மேன்மையான தொழிலான “விவசாயம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதனின் அடிப்படை தேவையான உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றையும் விவசாயம் பூர்த்தி செய்கின்றது எனலாம்.

விவசாயம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விவசாயத்தின் முக்கியத்துவம்
  3. முன்னோர்களும் விவசாயமும்
  4. விவசாயத்தின் நன்மைகள்
  5. தொன்மைக்கால விவசாயம்
  6. முடிவுரை

முன்னுரை

உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும். “தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையிலேயே பெறப்படுகின்றது.

மனிதனின் உயிர் மூச்சாக இருப்பது விவசாயம் என்றால் அது மிகையல்ல. விவசாயம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

மனிதனை வாழ வைப்பதற்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது. வாழ்க்கை சூழலைக் காப்பதற்கான நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் விவசாயம் அவசியமாகும்.

விவசாயிகளின் பொருளாதாரத் தேவைகளுக்கு விவசாயமே இன்றியமையாததாக உள்ளது. அதுமட்டுமன்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பேணவும் விவசாயம் முக்கிய பங்கை வகிக்கின்றது.

முன்னோர்களும் விவசாயமும்

“உழுவோர் உழைத்தால்தான் உலகோர் பிழைப்பர்” என நம் முன்னோர்கள் கூறுவார்கள். நம் முன்னோர்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

அத்தோடு நம் முன்னைய தலைமுறையினர் விவசாயத்தோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்துவந்தனர். அரச வேலைகளை விட விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

‘அணில்தாவா ஆயிரம் தென்னை உடையோன் ஐந்து மன்னனுக்குச் சமம்’ என்பர் அதாவது, ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் சொத்து, ஐந்து மன்னர்கள் வைத்திருக்கும் சொத்திற்கு சமமானது.

முன்னோர்கள் இஷ்டப்பட்டு விவசாயம் செய்தனர். இதனால் வளமையான வாழ்க்கையை வாழ்ந்தனர்.

விவசாயத்தின் நன்மைகள்

பல உயிரினங்களுக்கு வாழ்விடத்தையும் உணவையும் வழங்குகின்றன. இயற்கை விவசாய முறைகள் மூலம் மண் வளத்தை உருவாக்க உதவுகின்றது.

விவசாயமானது உணவு உற்பத்திக்கான நிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. விவசாயம் வளரும் நாடுகளில் மக்களை வறுமையில் இருந்து மீட்க வாய்ப்புகளை உருவாக்குகின்றது.

தொன்மைக்கால விவசாயம்

தொன்மைக்கால விவசாயமானது இயற்கையானதாகவும் நேர்த்தியானதாகவும் காணப்பட்டது. உரிய பருவ காலத்தில் சரியான பயிர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை முழுமையாக பயன்படுத்தினர்.

பெரும்பாலான வேளாண்மைக்கு மனித உழைப்பு மிகுதியாக இருந்தது மாடுகளில் உழைப்பும் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு உயிரினங்கள் விவசாயத்திற்கு உதவி செய்கின்றன என்பதனை தொன்மைக்கால விவசாயிகள் நன்கு அறிந்திருந்தனர்.

உதாரணமாக மண்புழுவைக் கூறலாம். இது ஆண்டுதோறும் மண்ணைத் துளையிட்டு கொண்டிருக்கும். இது பயிர் வளர்ச்சிக்கு உதவியதுடன் நல்ல உரமாகும் விளங்கியது. இதனால்தான் மண்புழுவை விவசாயிகளின் நண்பன் என அழைத்தனர்.

முடிவுரை

விவசாயம் செழிக்கும் போது, பட்டினி கிடப்பவர்கள் குறைவு. உலகின் பெரும்பாலான உணவுகள் மற்றும் துணிகளை உற்பத்தி செய்வதற்கு விவசாயமே பொறுப்பாகும்.

மனிதனின் அடிப்படை தேவையான உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றையும் விவசாயம் பூர்த்தி செய்கின்றது எனலாம்.

அதாவது உணவுக்கான பயிர்கள், துணிக்கு பட்டு, தங்குமிடத்திற்கான மரம் போன்ற மூலப்பொருட்கள் அனைத்தும் விவசாயத்தில் இருந்து வருகின்றன. எனவே விவசாயத்தை போற்றுவோம். விவசாயிகளை கடவுளாக மதிப்போம்.

You May Also Like:
விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை
நாட்டின் முதுகெலும்பு விவசாயம்