ஊட்டச்சத்து முக்கியத்துவம் கட்டுரை

ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை

இந்த பதிவில் “ஊட்டச்சத்து முக்கியத்துவம் கட்டுரை” பதிவை காணலாம்.

கல்வி திறன், உடல் உழைப்பு திறன் என்பனவும் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்படுகின்றன.

ஊட்டச்சத்து முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஊட்டச்சத்தின் வகைகள்
  • ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்
  • ஊட்டச்சத்தின்மையின் தீமைகள்
  • இன்றைய நிலை
  • முடிவுரை

முன்னுரை

ஊட்டச்சத்து என்பது மனித உடல் இயங்குவதற்கு தேவைப்படும் சக்தியினை வழங்கக்கூடிய பதார்த்தங்கள் ஆகும். ஆரோக்கியத்தில் மட்டுமல்லாமல் நோயிலும் ஊட்டச்சத்துக்களின் பங்கு முக்கியமானதாகும்.

உலக மக்களிடையே வாழ்க்கை முறைகள் மாற்றம் அடைந்து வருவதனால் எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தை கொண்டு செல்வது முக்கியமானதாகும். இக்கட்டுரையானது ஊட்டச்சத்து தொடர்பாக விளக்குவதாக அமைந்துள்ளது.

ஊட்டச்சத்தின் வகைகள்

ஊட்டச்சத்துக்களானவை புரதம், கொழுப்பு, மாச்சத்து, உயிர்ச்சத்துக்கள் (விட்டமின்கள்), கனியுப்புக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுள் புரதமானது பால், இறைச்சி, பாலாடைக் கட்டி, மீன், முட்டை போன்ற உணவுகளில் காணப்படுகின்றது. கொழுப்பானது எண்ணெய் வகைகள், நெய், வெண்ணெய் போன்ற உணவுகளிலும் மாச்சத்தானது தானிய வகைகளான கோதுமை, நெல் போன்றவற்றில் காணப்படுகின்றது.

வைட்டமின் சத்துக்களானவை பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள், உழுந்து போன்ற தானிய வகைகளில் அதிகளவில் காணப்படுகின்றன.

ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்

திசு வளர்ச்சியை உக்குவிக்கவும் பராமரிக்கவும் உடலின் செயற்பாடுகளை முறைப்படுத்தவும் தேவையான ஆற்றலை உணவினால் கிடைக்கப்பெறும் ஊட்டச்சத்துக்களே நமக்கு அளிக்கின்றது.

சத்துணவே ஆரோக்கியத்திற்கு மூலமாகும். நோய்களை எதிர்த்துப் போராட வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவது ஊட்டச்சத்துக்களே ஆகும்.

அத்துடன் நீரிழிவு, மாரடைப்பு, இதய குருதி குழாய் நோய்கள் ஆகியவற்றின் ஆபத்துக்களை குறைத்து ஆயட்காலத்தை அதிகரிக்க செய்வதும் ஊட்டச்சத்துக்களே ஆகும்.

ஊட்டச்சத்தின்மையின் தீமைகள்

இளங்குழந்தை மரணத்திற்கு காரணமாக இளங்குழந்தை பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்தின்மையே காரணமாக அமைகின்றது. இக்குழந்தைகள் மரணத்தில் இருந்து தப்பினாலும் கூட வளர்ச்சி குறைவாகவும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவானவர்களாகவும் காணப்படுகின்றனர்.

அதுமட்டுமன்றி கல்வி திறன், உடல் உழைப்பு திறன் என்பனவும் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்படுகின்றன.

இரும்புச் சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகின்றது, அயோடின் குறைபாடு காரணமாக கர்ப்பம் கலைதல், குழந்தை இறந்து பிறத்தல், மூளைக் கோளாறுகள் போன்றவை ஏற்படுவதோடு, விட்டமின் ஏ குறைவால் பார்வை இழப்பும் ஏற்படுகின்றது.

இன்றைய நிலை

உணவுப் பழக்கத்தில் மாறுதலும் குறைந்த உடல் செயற்பாடும் உலகெங்கும் வளர்ந்து வரும் ஒரு போக்காகும். அளவுக்கு மீறிய உப்பு சுவை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கம் பெருகி வருகின்றது.

அதிக எரிசக்தி, நிறைவுற்ற கொழுப்பு, கட்டுப்பாடற்ற சர்க்கரை அல்லது சோடியம் நிறைந்த உணவுகளை மக்கள் அதிகளவில் உண்கின்றனர்.

போதுமான அளவுக்கு பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள முழு தானியங்கள் ஆகியவற்றை உண்ணுவதில்லை இது உடல் ஆராக்கியமற்ற சமுதாயத்தை தற்போது உருவாக்கி வருகின்றது.

முடிவுரை

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் பெற உணவு முறையில் இருக்கும் கலாச்சார வேறுபாடுகள், சம்பாதிக்கும் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு எல்லா வயது பிரிவினரையும் ஒன்றினைக்கும் ஒரு அணுகுமுறை தேவைப்படுகின்றது.

இதனை உருவாக்கி செயற்படுத்தும் போது எம்மையும் எமது வருங்கால சந்ததியினரையும் சிறந்த சுக தேகம் உடையவர்களாக உருவாக்கி “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற ஆன்றோர் வாக்கினை நிருபிக்க முடியும்.

You May Also Like :
இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும்
மருந்தாகும் உணவுகள் கட்டுரை