இந்த பதிவில் எனது மனதை மிகவும் கவர்ந்த “எனக்கு பிடித்த கதை கட்டுரை” பதிவை காணலாம்.
தேவையற்ற விடயங்களில் நேரத்தை செலவிடாமல் சிறந்த புத்தகங்களை வாசித்து அவற்றை கடைப்பிடித்து சிறந்து விளங்குவோமாக.
எனக்கு பிடித்த கதை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கதைகளை வாசிப்பதன் பயன்
- எனக்கு பிடித்த கதை
- கதையின் சாரம்சம்
- கதை கூறும் நற்கருத்துக்கள்
- முடிவுரை
முன்னுரை
கதைகளை கற்பது ஒவ்வொரு மாணவனுக்கும் பல்வேறு நற்பண்புகளை பெற்றுத் தருகின்றது. நான் சிறுவயதிலிருந்தே கதைகள் மீது மிகுந்த ஆர்வம் உடையவனாக விளங்கினேன்.
எனது சிறுவயதில் எனது பாட்டி மற்றும் அம்மா கதைப் புத்தகங்களை எனக்கு வாசித்துக் காட்டுவது மட்டுமின்றி இரவு நித்திரைக்கு செல்லும் முன் கதை கூறும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
அப்பா கதைப் புத்தகங்களை அதிகளவில் அன்பளிப்பாக வழங்கினார். அதுவே நான் வளர வளர கதைகளை படிப்பதில் நாட்டத்தை உருவாக்கியது.
கதைகளை வாசிப்பதன் பயன்கள்
சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை கதைகளை வாசிப்பதனால் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்கின்றார்கள். சிறுவர்கள் கதைகளை வாசிக்கும் போது அவர்களிடையே வாசிப்பு பழக்கம் ஏற்படுவதோடு மொழியாற்றலும் அதிகரிக்கின்றது.
ஆழ்ந்து வாசிக்கும்போது கதைகளில் காணப்படும் நற்கருத்துக்கள் இலகுவாக மனதில் படிந்து விடுகின்றன. அத்துடன் கதை சொல்லும் ஆற்றலையும் கற்பனை வளத்தையும் அதிகரிக்கின்றன.
எனக்கு பிடித்த கதை
பற்பல கதைகளை கேட்டு வாசித்து வளர்ந்திருந்தாலும் நன்நெறிக்கதைகளே எனக்கு பிடித்தவையாக விளங்குகின்றன. அவற்றுள் பீர்பால் நன்நெறிக்கதைகளை விரும்பி வாசிப்பேன்.
பீர்பால் இந்திய மன்னரான அக்பரின் அரச சபையில் ஆலோசகராக பணிபுரிந்தவர். அக்பர் மக்களிற்கு நீதியான ஆட்சியை வழங்குமிடத்து பீர்பால் பல்வேறு பிரச்சினைகளை நீதிகரமாகத் தீர்த்து வைத்தார்.
அவைகளே பிற்காலத்தில் கதைகளாக வெளிவந்தன. அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த கதை “ஏமாற்றாதே ஏமாறாதே” எனும் தலைப்புடைய கதையாகும்.
கதையின் சாரம்சம்
ஓர் ஊரில் சிறப்பு வாய்ந்த ஓவியன் ஒருவன் இருந்தான். அனைவரையும் தத்ரூபமாக வரையும் ஆற்றல் பெற்றிருந்தான். அதே ஊரில் வாழ்ந்த கருமி எனும் ஒருவன் ஓவியனை ஏமாற்ற நினைத்தான்.
ஓவியன் வரையும் ஓவியம் தன்னைப்போல் இல்லையேல் பணம் தரமாட்டேன் என்று கூறினான். கருமியின் உள்நோக்கத்தை அறியாத ஒவியன் அவரை ஓவியமாக வரைந்தான்.
அதைப்பார்த்த கருமி தன்னைப்போல் இல்லையென பல தடவைகள் மாற்றங்கள் செய்யக் கூறி ஓவியனை ஏமாற்றினான். ஓவியன் பீர்பாலிடம் சென்று முறையிட்டபோது பீர்பால் கருமியின் ஏமாற்றும் குணத்தைக் கண்டுகொண்டார்.
முகம் பார்க்கும் கண்ணாடியை திரைச்சீலை போட்டு மூடிய பீர்பால் கருமியை அழைத்து “திரைச்சீலையை திறந்து பார்த்து அதில் தெரியும் தங்கள் ஓவியத்தில் ஏதேனும் குறைகள் இல்லையேல் இருமடங்கு பணம் தர” உத்தரவிட்டார்.
திறந்து பார்த்த கருமி தன்னுடைய திருட்டுத்தனத்தை பீர்பால் கண்டுபிடித்து விட்டதை எண்ணி வெட்கிக் தலைகுனிந்தார்.
கதைகூறும் நற்கருத்துக்கள்
இந்தக்கதை கூறும் நற்கருத்து யாதெனில் யாரையும் ஏமாற்றக் கூடாது என்பதாகும். ஏமாற்றாமல் வாழ்வது சுயஒழுக்கத்தின் முக்கியமான அம்சமாகும். ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டால் மற்றவர்கள் உங்கள் மேல் கொண்டிருக்கும் நற்பெயரை இழக்க நேரிரும்.
நாம் ஒருவரை ஏமாற்றும் போது அவர்கள் மிகுந்த மன உளைச்சலையும் மன வேதனையையும் அடைகின்றார்கள். இக்கதையை படிக்கும் போதெல்லாம் யாரையும் ஏமாற்றாமல் வாழ வேண்டும் என்ற உணர்வு என்னுள் ஏற்படும்.
முடிவுரை
நீதிக்கதைகளை வாசித்து அதிலுள்ள நற்பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது நம் அனைவருக்கும் அவசியமான தொன்றாகும்.
தேவையற்ற விடயங்களில் நேரத்தை செலவிடாமல் இவ்வாறான நீதிக்கதைப் புத்தகங்களை வாசித்து அவற்றை கடைப்பிடித்து சிறந்து விளங்குவோமாக.
You May Also Like : |
---|
ஒரு ஆசிரியராக எனது இலக்கு கட்டுரை |
சிறுவர் உரிமைகள் கட்டுரை |