தேர்தலின் முக்கியத்துவம் கட்டுரை

Therthalin Mukkiyathuvam Katturai

ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் “தேர்தலின் முக்கியத்துவம் கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

தேர்தலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பிரஜைகளும் உணர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.

தேர்தலின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. அறிமுகம்
  2. ஜனநாயகமும் தேர்தல்களும்
  3. தேர்தல்களின் முக்கியத்துவம்
  4. ஒரு விரல் புரட்சி
  5. வாக்குரிமை
  6. முடிவுரை

அறிமுகம்

மனித சமுதாயம் கடந்து வந்த அரசியல் அமைப்புகளில் ஆகச் சிறந்தது ஜனநாயகம் என்றால் அது மிகையல்ல. உலகின் பல நாடுகளும்⸴ உலக மக்களும் ஜனநாயக ஆட்சியையே விரும்புகின்றனர்.

இந்த ஜனநாயக நாடுகளின் தலை எழுத்தை தீர்மானிப்பது தேர்தலாகும். ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கும் செயன்முறையே தேர்தல் எனலாம்.

தேர்தல்களின் மூலம் சட்டசபை⸴ நிர்வாக அமைப்புகள்⸴ பகுதி சார்ந்த மற்றும் உள்ளூர் அரசு போன்ற அமைப்புகளில் உள்ள பதவிகள் நிரப்பப்படுகின்றன.

மக்கள் தங்களிடமுள்ள வாக்கு என்ற ஆயுதத்தை முறையாகப் பயன்படுத்தி இந்தியா என்னும் மாபெரும் ஜனநாயகத்தை கட்டமைக்க தேர்தல்கள் முக்கியம் பெறுகின்றன. அந்த வகையில் தேர்தலின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஜனநாயகமும் தேர்தல்களும்

இன்றைய உலக நாடுகளும் நாட்டு மக்களும் ஜனநாயகத்தினையே அதிகம் விரும்புகின்றனர். ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் அதில் தேர்தல்களுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு.

ஒரு ஜனநாயக சமூகம் என்பது அதன் தேர்தல் மூலமே வரையறுக்கப்படுவது என்ற ஆழமான ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வாக்காளர்களைக் கொண்ட நாடாக காணப்படுகின்றது. இந்திய அரசியலமைப்பின்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அந்த வகையில் தாம் விரும்பும் தலைவர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கும் அல்லது அவர்களுக்கு வாக்களிப்பதற்கும் ஒவ்வொரு இந்திய பிரதிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்திய பிரஜைகளின் உரிமைகள் மட்டுமன்றி கடமையுமாகும்.

தேர்தல்களின் முக்கியத்துவம்

ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு பின்னர் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் மாற்றி அமைக்கப்படுவது ஜனநாயக வழக்கமாகும். இதற்காகவே காலம் காலமாகத் தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன.

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல்கள் மிகமிக அவசியமானவையாகும். தேர்தல்கள் மூலம் சர்வாதிகாரம்⸴ குடும்ப ஆட்சி⸴ ஊழல் நிறைந்த ஆட்சி போன்றவற்றைத் தடுத்து புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியும். ஆதலால் முறையற்ற ஆட்சியைத் தடுக்க தேர்தல்களில் முக்கியம் பெறுகின்றன.

ஒரு விரல் புரட்சி

ஒரு புரட்சியின் பின்னே நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. உதாரணமாக விடுதலை அடைய நாம் செய்த மாபெரும் புரட்சியே சுதந்திர இந்தியாவை உருவாக்கக் காரணமாக இருந்தது.

இன்றைய காலத்தில் பல தவறான அதிகாரிகளால் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர். இந்நிலை மாற்றி தகுதியானவர்கள் ஆட்சிப்பீடம் பெறும்போதும் பதவிகளை வகிக்கும் போதும் தான் மக்கள் நலன் பாதிக்கப்படாது.

இத்தகைய மாற்றம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கும் போது மட்டுமே நிகழும். மக்களின் ஒரு விரல் புரட்சியிலேயே சிறந்த அரசாங்கம் உருவாக முடியும்.

வாக்குரிமை

நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உரிமைகள் வரையறுக்கப்பட்ட போதிலும் வாக்குரிமை தனித்துவம் வாய்ந்ததும் சிறப்பு வாய்ந்ததுமாகும்.

யார் நாட்டை ஆளவேண்டும்? யார் ஆளும் அதிகாரத்திற்குப் பொருத்தமானவர்கள் என்பதை தீர்மானிக்க மக்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை வாக்குரிமை ஆகும்.

சுயாதீனமாகவும்⸴ சுதந்திரமாகவும் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். பணத்திற்காகவும்⸴ பொருளுக்காகவும் எமது வாக்குரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுத்தல் கூடாது.

முடிவுரை

ஒரு நாட்டினுடைய தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் உண்மைத் தன்மையாகவும் திகழ வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஊழலற்ற நாட்டிற்கும் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுள்ள⸴ நாட்டின் பாதுகாப்பில்⸴ பொருளாதாரத்தில் அக்கறையுள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வரவேண்டும்.

இதனை சாத்தியமாக்குவது தேர்தல்களே. எனவே தேர்தல்களின் முக்கியத்துவத்தை அறிந்து சிறந்த முறையில் வாக்குரிமையைப் பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்வோமாக.

You May Also Like:

இளைஞர்கள் பற்றிய கட்டுரை
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு