இந்த பதிவில் “மக்காத குப்பை கட்டுரை” பதிவை காணலாம்.
தற்காலத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிக மோசமான சவால்களில் மக்காத குப்பைகளும் ஒன்றாகும்.
மக்காத குப்பை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மக்காத குப்பை
- உருவாக்க காரணிகள்
- விளைவுகள்
- தீர்வுகள்
- முடிவுரை
முன்னுரை
தற்காலத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிக மோசமான சவால்களில் மக்காத குப்பைகளும் ஒன்றாகும். ஏனெனில் இவை பௌதீக மற்றும் மானிட சூழலுக்கு அதிக ஆபத்துக்களை விளைவிக்க கூடியவையாக உள்ளன.
இன்றைய நாட்களில் சர்வதே ரீதியிலும் தேசிய ரீதியிலும் மக்காத குப்பைகள் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இன்று பல ஆய்வுகள் மக்காத குப்பை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களை இழிவளவாக்குவதை நோக்காக கொண்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இக்கட்டுரையில் மக்காத குப்பை பற்றி நோக்கலாம்.
மக்காத குப்பை
புவி மேற்பரப்பில் உயர்க்கோள சமநிலையை பேணுவதில் நுண்ணங்கிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இயற்கையாவோ அல்லது மனித செயற்பாடுகனினாலோ எஞ்சுகின்ற கழிவுகளை பிரிகையாக்கம் செய்து அவற்றை அழிப்பதே நுண்ணங்கிகளின் தொழிற்பாடாகும்.
இவ்வாறு நுண்ணங்கிகளால் பிரிகையாக்கம் செய்து அழிக்க முடியாத கழிவுகளையே நாம் மக்காத குப்பைகள் என்கின்றோம்.
இவ்வாறான மக்காத குப்பைகள் ஒரு போதும் இயற்கை சூழலினால் வெளியிடப்படுவதில்லை முற்றுமுழுதாக மனித செயற்பாடுகளினாலேயே வெளிவிடப்படுகின்றன.
உருவாக்க காரணிகள்
மக்காத குப்பைகளை அதிகளவில் வெளிவிடும் செயற்பாடுகளாக பின்வருவனவற்றை கூறலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொலித்தீன் பைகள், போத்தல்கள், பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்கள் போன்றவை மக்காத குப்பைகளாகும்.
மேலும் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், இன்று விரிவாக்கம் பெற்றுள்ள இலத்திரனியல் கைத்தொழிலின் விளைவான இலத்திரனியல் பொருட்களும் பயன்பாட்டு காலம் முடிவடைந்த பின்னர் மக்காத குப்பைகளாகவே சூழலுக்கு வெளிவிடப்படுகின்றன. இவற்றில் சில கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.
விளைவுகள்
மக்காத குப்பைகள் இயற்கை சூழல் சமநிலையை குழப்புவதாக அமைகின்றன. நிலம், நீர், வளி ஆகியவற்றை பாதிப்படைய செய்கின்றன. மக்காத குப்பைகளை மண்ணில் சேர்த்து வைப்பதனால் அவை மழை நீர் ஊடுவடிதலை குறைத்து தரைகீழ் நீர்வளம் மற்றும் அதன் தரத்தினையும் குறைவடையச் செய்கின்றன.
இவற்றை நீர் நிலைகள் மற்றும் கடலில் போடுவதன் மூலம் நீர் மாசடைவு ஏற்படுவதோடு நீர்வாழ் உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாகின்றன. இவற்றை எரிக்கின்ற போது வளி மாசடைவு ஏற்படுவதோடு சுவாசம் சார்ந்த நோய்களுக்கும் காரணியாகின்றது.
தீர்வுகள்
மக்காத குப்பைகளினால் ஏற்படும் விளைவுகளை குறைத்துக் கொள்ள அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதும் அதன் வெற்றியை தீர்மானிப்பது ஒவ்வொரு தனிமனிதரினதும் கையிலேயே உள்ளது.
முதலில் பிளாஸ்ரிக் பொருட்களினுடைய பாவனையை நாம் குறைக்க வேண்டும். ஒருநாள் பயன்பாட்டிற்கு மாத்திரம் உபயோகப்படும் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீட்டான பொருட்களை பயன்படுத்தவேண்டும்.
குப்பைகளை அகற்றும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என்றவாறு வகைப்படுத்த வேண்டும். மற்றும் மீள்சுழற்சி பாவனைக்கு உட்படுத்த வேண்டும்.
முடிவுரை
மக்காத குப்பை என்ற இந்த சவாலினை முறியடிக்கும் திட்டத்தினை நமது வீடுகளிலிருந்து முதலில் ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் இப்பிரச்சினை தொடர்பாக விழிப்புணர்வினை சமூக மட்டத்தில் கொண்டு வந்து அவற்றை நடைமுறையிலும் செயற்படுத்த வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலமாகவே நாம் வாழ்வதற்கு நலமான சூழலினை உருவாக்கிக் கொள்ள முடியும். அத்துடன் வளமான ஒரு நாட்டினை எதிர்கால சந்ததியினருக்கும் வழங்க முடியும்.
You May Also Like : |
---|
மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை |
குப்பை பற்றிய கட்டுரை |