இந்த பதிவில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய துணிச்சல் மிகுந்த வீரரான “வீரபாண்டிய கட்டபொம்மன் பேச்சு போட்டி” பதிவை காணலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பேச்சு போட்டி
இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய துணிச்சல் மிகுந்த வீரராக வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் இடம் பிடிக்கின்றார். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சி உரிமையை ஏற்க மறுத்து தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால் எதிர்த்த மாவீரன் ஆவார்.
“பொம்மு” மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சா வழியில் வந்த ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக இவர் 1763 ஆம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் “வீரபாண்டியன்” என்பதாகும்.
கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவளியை குறிக்கும் அடைமொழியாகும். தந்தைக்கு பிறகு அரசு பொறுப்பை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன். நாட்டை நல்வழியில் ஆட்சி செய்தார். இந்த காலகட்டத்தில் தான் பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பனியின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்தது.
அரசுகளிடம் வரி வசூலிக்க ஆங்கிலேயர்கள் அதிகாரிகளை நியமித்தனர். இதற்கு கட்டபொம்மன் போன்ற மன்னர்கள் ஒத்துழைக்கவில்லை ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். இதனால் இவர்களை ஒழிக்க வேண்டும் என ஆங்கிலேயர்கள் முற்பட்டனர்.
ஆங்கிலேயர்கள் தமது பிரித்தாழும் சூழ்ச்சியினை கை கொண்டனர். தமக்கு சாதகமாக செயல்படுபவர்களுக்கு சலுகைகளை தாரளமாக வழங்கினார்கள். தம்மை எதிர்ப்பவர்களை சதி செய்து கொன்றனர்.
வரி கேட்க வந்த ஆங்கிலேயரான ஜாக்சன் துரையோடு வாக்குவாதம் செய்த கட்டபொம்மன் வரி செலுத்த முடியாது என தைரியமாக கூறிவிட்டார். இவரது வீரம் அயல் தேச மன்னர்களையும் தைரியமாக ஆங்கிலேயர்களை எதிர்க்க செய்தது.
தம்மை எதிர்த்த மன்னர்களை ஆங்கிலேயர்கள் ஒவ்வொருவராக அழிக்க முற்பட்டனர். இவற்றை கண்டு சிறிதும் அஞ்சாது ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இவர் விளங்கினார். ஜாக்சன் துரைக்கு பின்னர் “லோசிங்டன்” என்பவர் பாஞ்சால குறிச்சிக்கு பொறுப்பாக பதவியேற்றார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த மைசூர் மன்னரான “திப்பு சுல்தானை” பீரங்கிகளுக்கு இரையாக்கிய ஆங்கிலேயர்களின் அடுத்த இலக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பக்கம் திரும்பியது.
1797 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்ட ஆலன் துரையை இவர் தோற்கடித்தார். 1799 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
பலரது துரோகங்களால் தோல்வி அடைந்த பின் புதுக்கோட்டை தொண்டைமான்களால் காட்டிக் கொடுக்கப்பட்டார். இந்த துரோக செயலால் ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மனை கைது செய்தனர்.
ஆங்கிலேய தளபதி “பானர்மேன்” உத்தரவின் பெயரில் ஒக்டோபர் 19 ம் திகதி 1799 ஆம் ஆண்டில் தூக்கில் இடப்பட்டார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கட்டபொம்மன் மறுக்கவில்லை உயிர்பிச்சை கேட்டகவும் இல்லை கம்பீரத்தோடு எனது தாய் மண்ணை காப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களை திரட்டினேன் போர் நடத்தினேன் என்று முழங்கியவாறு தூக்குமேடை ஏறினார்.
இவர் தூக்குமேடை ஏறும்போது இவர் பேச்சில் வீரமும் தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரையும் மெய் சிலிர்க்க செய்தது. இவ்வாறு அந்நியர்களை எதிர்த்து எமது தேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீரம் போற்றுதலுக்குரியது.
மிகச்சிறந்த மாவீரனாக வரலாற்றில் இடம் பெறும் இவர் தமிழக வரலாற்றில் தன் தேசப்பற்றாலும் வீரத்தாலும் தனியிடம் பெறுகிறார்.
You May Also Like: