இந்த பதிவில் “காடு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
காடுகள் பாதுகாக்கப்படும் போதுதான் மனித குலமே பாதுகாக்கப்படும் என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும்.
காடு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காடுகளின் முக்கியத்துவம்
- மரங்களின் பயன்கள்
- காடழிப்பு
- காடுகளைக் காப்போம்
- முடிவுரை
முன்னுரை
காடுகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை. காடுகளின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்ததால் தான் திருவள்ளுவர் “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” எனக் கூறியுள்ளார்.
காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும். எனினும் இன்று காடுகள் அழிப்பு என்பது உலகம் முழுவதிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி. ஆனால், அது ஏட்டளவில் தொடர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையில் காடுகள் பற்றி நோக்கலாம்.
காடுகளின் முக்கியத்துவம்
மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன. காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும்.
பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு காடுகள் முக்கியமானவையாகும். வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகின்றது.
காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர்த் தேவை குறையாமல் இருக்கும்.
மரங்களின் பயன்கள்
சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல உயிரினங்கள் வாழுமிடமாகவும் திகழ்கிறது. மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும் ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.
மரங்கள் நமக்கு நிழலைக் கொடுக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, இப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்திற்கும் தேவையானது மரமாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றது. மழை பெறுவதற்கு மரம் இன்றியமையாததாகும். மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகின்றது.
காடழிப்பு
நகரமயமாக்கல், வளர்ச்சிப் பணிகள், மனிதப் பேராசை உள்ளிட்ட காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப் பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமான நிலையங்களை அமைத்தல், ரயில் இரும்புப் பாதைகள் அமைத்தல், அணைகள் – பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல்,
கல்வி நிறுவனங்களை அமைத்தல் சுற்றுலா விடுதிகள் – குடியிருப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன.
காடுகளைக் காப்போம்
காடுகள் நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளை அளிக்கின்றன. அப்படிப்பட்ட காடுகளை அழிப்பது நம்மை நாமே அழிப்பதற்கு சமம் ஆகின்றது.
காடுகளின் பயனை அறிந்தே நம் அரசு ‘வனத்துறை பாதுகாப்பு’ என்ற ஒரு அமைச்சகத்தையே நியமித்துள்ளது.
ஒரு மரத்தை வெட்டினால் இரு மரங்களை நட வேண்டும். சட்டவிரோதமாக காட்டு மரங்கள் அழிக்கப்படுவதற்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். காடுகள் பாதுகாக்கப்படும் போதுதான் மனித குலமே பாதுகாக்கப்படும் என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும்.
முடிவுரை
இன்று காடுகள் இல்லையென்றால் ஏதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. பெருமளவில் காடுகளை அழிப்பதால் நமது நாட்டின் இயற்கை வளம் அழிந்து வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காடுகளை பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே வனங்களைக் காத்து வளமான வாழ்வினை வாழ்வோம்.
You May Also Like : |
---|
உலக காடுகள் தினம் |
காடுகளின் பயன்கள் கட்டுரை |