இந்த பதிவில் “போதை இல்லா உலகம் கட்டுரை” பதிவை காணலாம்.
போதையற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக இவ்வுலகிலுள்ள அனைவருமே இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
போதை இல்லா உலகம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- போதைப் பொருள் பாவனை
- போதைப் பயன்பாட்டின் தீமைகள்
- போதைப் பாவனையை ஒழித்தல்
- போதை பழக்கத்திலிருந்து மீளெழுதல்
- முடிவுரை
முன்னுரை
உலகை ஆக்கிரமிக்கும் பிரச்சனைகளுள் மிக முக்கியமானது போதைப் பொருள் பாவனை. உலகின் பெரும்பாலான நாடுகள் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் அதனை ஒழிப்பது இயலாத விடயமாகவே காணப்படுகின்றது.
போதைப்பொருட்களின் பயன்பாடுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்துச் செல்வதனை காணலாம்.
இதனை தடுப்பதற்கு போதைப்பொருட்கள் பற்றியும் அவற்றினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் கிடைக்கும் கடுமையான தண்டனைகள் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.
போதைப் பொருள் பாவனை
போதைப்பொருட்களானவை பொழுது போக்கிற்காகவும் உடம்பில் போதையேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பலதரப்பட்ட போதைவஸ்துக்கள் உலககெங்கிலும் மலிந்து காணப்படுகின்றன.
அவற்றிற்கு உதாரணமாக மதுபானங்கள், புகையிலை, ஹெரோயின், அபின், கஞ்சா என கூறிக்கொண்டே போகலாம். இவற்றுள் மதுபானங்கள் மற்றும் புகையிலை போன்றவை வீடுகளிலும் வேறு இடங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுபவை.
மதுபானங்களினால் ஏற்படும் தீமையை மக்கள் அறிந்திருந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அசமந்தப் போக்கிற்கு தம்மைப் பழக்கப்படுத்தி விட்டனர்.
வயதானவர்களை விட பாடசாலை செல்லும் சிறுவர்களிடம் தற்போது போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
போதைப் பயன்பாட்டின் தீமைகள்
போதைப் பொருட்களை பயன்படுத்துவதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. உதாரணமாக அதிகரித்த மதுப்பயன்பாட்டால் மனித மூளைப் பகுதியும் நரம்புமண்டலப் பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன.
தொடர்ச்சியான மதுப்பாவனையால் கல்லீரல் புற்றுநோயும், புகையிலைப் பயன்பாட்டால் வாய், தொண்டைப் புற்றுநோயும் உருவாகின்றன. மற்றும் ஹெரோயின் கஞ்சா போன்றவற்றைப் பயன்படுத்தும் போது காலப்போக்கில் உடலுறுப்புகள் பழுதடைந்து மரணம் ஏற்படுகின்றது.
போதைப் பொருட்களை நுகரும் போது தனிமனிதனுக்கு மட்டுமின்றி சமுக ரீதியிலான பிரச்சனைகளையும் இவை உருவாக்குகின்றன.
சமுக விரோதச் செயற்பாடுகளான கொலை, கொள்ளை மற்றும் கலாசார சீர்கேடுகள் போன்றன போதைப்பொருள் பாவனையின் வெளிப்பாடே ஆகும்.
போதைப் பாவனையை ஒழித்தல்
போதைப் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முதலில் அதன் கிடைப்பனவை தடுப்பதே ஆரம்ப வழியாகும். போதைப்பொருட்களை வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காகவே போதைப்பொருள் தடுப்புச்சட்டம் மற்றும் அதற்கமைவாக போதைப்பொருள் கண்காணிப்பு பிரிவு ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கூடும் இடங்களில் மது மற்றும் புகையிலை போன்றவற்றை பயன்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதோடு, அதனை மீறி செயற்படுபவர்களிற்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
பாடசாலை செல்லும் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருப்தோடு, அவர்கள் யார் யாருடன் நட்பு கொள்கின்றார்கள் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இது சிறுவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதைதவிர்க்க உதவும்.
போதை பழக்கத்திலிருந்து மீளெழுதல்
போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிய நபரொருவர் அதிலிருந்து மீளெழுவதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. தற்போது போதை மறுவாழ்வு மையங்கள் நாடெங்கிலும் உருவக்கப்பட்டுள்ளன.
போதைக்கு அடிமையாகிய நபர்களை இந்த இடங்களில் இணைப்பதன் மூலம் அவர்களிற்கு புதுவாழ்க்கையை பெற்றுத்தரலாம்.
யோகா, தியானம், தகுந்த ஓய்வு, ஆரோக்கியமான உணவுகளை பெற்றுத்தருவதன் மூலம் அவர்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்லலாம்.
முடிவுரை
போதையற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக இவ்வுலகிலுள்ள அனைவருமே இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இதற்காகவே உலகமெங்கும் போதைத் தடுப்பு நாளாக ஜூன் 26 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிய நபர் அதிலிருந்து மீளெழ உதவி புரிவதோடு, அக்கொடிய பழக்கத்திலிருந்து விடுபட்ட ஒரு நபரை சமூகத்தோடு இணைத்து செயற்பட வைப்பது நம் ஒவ்வொருவரிலுமே தங்கியுள்ளது
You May Also Like : |
---|
உடற்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை |
தொழிற்சாலை பாதுகாப்பு கட்டுரை |