உலக இதய தினம் | செப்டம்பர் 29 |
World Heart Day | September 29 |
உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இதயம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான வாழ்வு வாழ இதய ஆரோக்கியம் இன்றியமையாதாகும். செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குவதிலும், கழிவுப் பொருட்களை அகற்றுவதிலும் இதயம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதயத்தின் முக்கியத்துவம் அறிந்து அதை பாதுகாத்தல் அவசியமாகும். ஆனால் உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கம் போன்றவற்றால் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் இறப்புகளின் காரணிகளில் இதயப் பிரச்சனைதான் முதலிடத்தில் உள்ளது.
உலக இதய தினத்தின் வரலாறு
உலக இதய கூட்டமைப்பு (WHF) மற்றும் உலக இதய அமைப்பு 1999 இல் உலக இதய தினத்தை நிறுவுவதாக அறிவித்தன.
இதற்கான பரிந்துரை உலக சுகாதார கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான அன்டோனி பேயஸ் டி லூனாவால் (Antoni Bayes de Luna) என்பவரால் முன்வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் செப்டம்பர் 24, 2000 அன்று உலக இதயக் கூட்டமைப்பு உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இந்த நாள் முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது.
இருப்பினும், 2011 முதல் உலக இதய தினம் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் ஆரோக்கியமான இதயங்களை ஊக்குவிக்க பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
உலக இதய தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
உடலின் இயக்கத்திற்கு இதயமே முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதாகவும்
உலக மக்கள் இருதய நோய்களுக்கு ஆளாகாமல் தடுப்பதையும், உலகளாவிய ரீதியில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவு, புகையிலை பழக்கம் மற்றும் உடற்பருமன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆபத்துக் காரணிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.
உலக இதய தினத்தின் முக்கியத்துவம்
நாம் உறங்கும் போதும் துடிக்கும் இதயத்திற்கான ஓர் நாள்தான் உலக இதய தினம். உலக இதய தினம் இதய நோயை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகின்றது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களால் பல மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.
இன்றைய காலத்தில் மக்கள் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீண்டகால மன அழுத்தம் இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே இதய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது முக்கியமானதாகும்.
உலக இதய நாள் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்க்கை முறை தேர்வுகளை நிறுத்தி மதிப்பீடு செய்வதற்கான ஒரு நினைவூட்டலாகும்.
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், பிறரையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு ஆபத்து ஏற்படும் போது மட்டும் உடல் நலத்தில் அக்கறை காட்டாமல் வருமுன் காப்பதே சிறந்தது. வலிமையான, ஆரோக்கியமான இதயத்தோடு வாழ்க்கையை மகிழ்ந்து வாழ்வோம்.
You May Also Like : |
---|
உலக புத்தக தினம் |
உலக மக்கள் தொகை தினம் |