உலக சுற்றுலா தினம் | செப்டம்பர் 27 |
World Tourism Day | September 27 |
மனிதன் பிறரது பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் பற்றி அறிய முற்பட்ட போதே சுற்றுலா தோன்றியது எனலாம். ஆனால் இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை மாறியுள்ளது.
இன்றைய மனிதன் இன்பம், இறைத்தேடல், பொழுதுபோக்கு, அறிவு வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமே சுற்றுலா எனலாம்.
கிணற்றுத் தவளையாக ஓரிடத்தில் வாழ்வது இன்பத்தைப் பெற்றுத் தராது. புதிய புதிய அனுபவங்களை பெற்றிடுவது தான் மனித பிறப்பின் மகத்துவம்.
புதிய இடங்களுக்குச் செல்லுதல், பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்தல் போன்றவை மனிதனுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்வைத் தரும்.
உலக சுற்றுலா தினம் உருவான வரலாறு
1979 இல் ஸ்பெயினில் நடந்த ஒரு அமர்வின் போது உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) உலக சுற்றுலா தினத்தை நிறுவ முடிவு செய்தது. முதல் உத்தியோகபூர்வ அனுசரிப்பு செப்டம்பர் 27, 1980 அன்று நடைபெற்றது.
இந்த தேதி 1970 இல் நடந்த ஒரு நிகழ்வான UNWTO சட்டங்களை ஏற்றுக்கொண்டதன் ஆண்டு நிறைவைப் பிரதிபலிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பொறுப்பான உலகளாவிய அமைப்பினது சட்டங்களை ஏற்றுக்கொண்ட நாளாக செப்டம்பர் 27 ஆம் தேதி காணப்படுகின்றது.
1980 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதியில் உலக நாடுகள் அனைத்தும் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி வருகின்றன.
சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் நமது சமூகத்தில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக கொண்டாடப்படுகின்றது.
மேலும் சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வை சர்வதேச சமூகத்தினரிடையே வளர்ப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சுற்றுலா தினம் முக்கியத்துவம்
சுற்றுலா மூலம் ஒரு நாடு பல்வேறு வழிகளில் பயன் பெறுகிறது. சுற்றுலா மூலம் நாட்டின் தேசிய வருவாய் அதிகரிக்கிறது. இதனால் நாடு பொருளாதார வளர்ச்சியடைந்து பல துறைகளில் முன்னேறுகிறது. தேசிய ஒருமைப்பாடு வளர்கிறது.
அன்றாடம் உழைத்து, உழைத்து அலுத்துப் போன தொழிலாளிக்கு சுற்றுலா இன்பம் தருகிறது. சுற்றுலா பன்னாட்டு ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவுகின்றது.
மனித வாழ்வுடன் இணைந்து, இன, சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்தையும், உலக மக்களிடையே நல்லெண்ணங்களை வளர்க்கிறது. சுற்றுலா செல்வது மனித வாழ்வினை மறுமலர்ச்சியடையச் செய்கின்றது.
எனவே வாய்ப்புக் கிடைக்கும் போது அல்லது நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு மனதிற்கு அமைதி தரும் சுற்றுலாப் பயணம் செல்வோம்.
நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு, வரலாறு அழியாமல் இருப்பதற்கு மட்டுமன்றி உலகின் வெவ்வேறு நாடுகளின் கலாசாரம், வரலாறு, பண்பாடு என்பவையும் அழியாமல் இருக்க நாமும் ஓர் முக்கிய பங்கு வகிப்போம்.
You May Also Like : |
---|
சுற்றுலா வளர்ச்சி கட்டுரை |
காடு பற்றிய கட்டுரை |