இந்த பதிவில் இன்றைய உலகிற்கு தேவையான “ஒற்றுமையே பலம் கட்டுரை” பதிவை காணலாம்.
ஒற்றுமையானது மனிதர்களிடத்தில் நல்லிணக்கம்⸴ சமாதானம் போன்றவற்றை ஏற்படுத்தவல்லது.
ஒற்றுமையே பலம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஒற்றுமை பற்றிய சான்றோர் பொன்மொழிகள்
- ஒற்றுமையின் மகத்துவம்
- வேற்றுமையின் இழிவு
- வேற்றுமையின்மையின் தீமைகள்
- ஒற்றுமைக்கான வழிகள்
- முடிவுரை
முன்னுரை
ஒற்றுமை என்பது எவ்விதமான பாகுபாடுமின்றி ஒன்றாக மகிழ்வாக வாழ்வது. இன்றைய மனிதகுலத்திற்குத் தேவையான ஒன்றாக ஒற்றுமை காணப்படுகின்றது. ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே தான் சிறுவயதிலிருந்தே நீதிக் கதைகள்⸴ சிறு கதைகள் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது.
ஒற்றுமையாக வாழும் போது தான் பலம் கூடும். தனியாக ஒரு செயலைச் செய்து முடிப்பதற்குப் பதிலாக ஒற்றுமையாக செய்கின்ற போது பலம் கூடியதாக உணரப்படும்.
இதனால் தான் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மைˮ என்று ஒற்றுமையாக வாழ்தலின் பலம் கூறப்படுகின்றது. இவ்வகையில் ஒற்றுமையே பலம் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஒற்றுமை பற்றிய சான்றோர் பொன்மொழிகள்
ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல சான்றோர்கள் பொன்மொழிகள் மூலமாக உலகிற்கு உணர்த்தியுள்ளனர். அவ்வகையில் திருமூலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்ˮ எனக் கூறுகின்றார்.
ஒற்றுமையின் பலத்தை அறிந்த வள்ளுவர் ஒப்புரவு அறிதல் என்னும் அதிகாரத்தின் மூலம் ஒற்றுமையின் பலம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
“புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒலப்புரவின் நல் பிறˮ
என்பதன் மூலம் ஒற்றுமை போல் வேறென்றை தேவருலகம் சென்றாலும் பெற முடியாது என்கின்றார்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வுˮ என்று பாரதியார் பாடியுள்ளார்.
ஒற்றுமையின் மகத்துவம்
இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் இனம்⸴ மதம்⸴ மொழி ரீதியில் பாகுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் மதிக்காமலும் புற சமூகத்தின் விழுமியங்கள்⸴ கருத்துக்களை மதிக்காமலும் செயற்படும் தன்மையையே அதிகம் காணமுடிகின்றது.
இதனால் இன⸴ மத கலவரங்கள்⸴ வன்முறைகள் சமூகத்தில் தோன்றுகின்றன. மனித இனம் அழிவை சந்திக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்கு ஒற்றுமை மிகமிக அவசியமாகின்றது.
ஒற்றுமையுடன் வாழும் போது மன நிம்மதி கிடைக்கின்றது. ஒற்றுமை மூலம் புதிய புதிய உறவுகள் வாழ்வில் தோன்றுகின்றன. ஆதிமனிதன் ஒற்றுமையாக கூட்டாகவே வாழ்ந்தான்.
இதனால் அவனால் ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்க முடிந்தது. ஒற்றுமையின் மகத்துவம் தவறுகளை மன்னிக்கவும் புரிந்து கொள்ளவும் வழியை ஏற்படுத்துகின்றது.
வேற்றுமையின் இழிவு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து மன்னர்களாலும் சாதி⸴ சமயம் போன்றவற்றாலும் வேறுபாட்டாலும் சண்டையிட்டுக் கொண்ட நம் மக்கள் ஆங்கிலேயரால் அடிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் பல ஆண்டுகள் துன்பத்தில் வாழ வேண்டி நேர்ந்தது. இத்தகைய நிலைமைக்கு வேற்றுமையே காரணமாகும்.
இன்றும் பல சமூகங்கள் சாதி அடிப்படையில் வேற்றுமையில் சண்டையிட்டு வருகின்றன. இதனால் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
வேற்றுமையின்மையின் தீமைகள்
ஒற்றுமையானது மனிதர்களிடத்தில் நல்லிணக்கம்⸴ சமாதானம் போன்றவற்றை ஏற்படுத்தவல்லது. ஆனால் மனிதனிடையே ஏற்படும் வேற்றுமை சமூகத்தை பாதிக்கும்.
சமூக வேற்றுமை நாட்டை பாதிக்கின்றது. நாடுகளுக்கிடையிலான வேற்றுமை நாடுகளுக்கிடையிலான யுத்தத்தை முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது.
வேற்றுமையை மனதில் வளர்த்தால் மன நின்மதியற்று வாழவேண்டும். ஒருவருக்கொருவர் உதவியின்றி தனித்து வாழ வேண்டிய நிலையேற்படும்.
முடிவுரை
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ˮ என்பதையும் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்ˮ என்பதையும் என்றும் மறவாமல் இருத்தல் வேண்டும். அனைவரிடத்திலும் ஏற்றத்தாழ்வு இன்றிப் பழகவேண்டும்.
சக மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். சிறுவயதில் உள்ள பிள்ளைகள் மனதில் வேற்றுமையை வளர்க்காமல் நற்பழக்கவழக்கங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
“இமயச் சாரலில் ஒருவன் இருமினான் குமரி வாழ்பவன் மருந்து கொண்டோடினான்ˮ என்ற பாரதிதாசனின் கனவு நனவாகட்டும் அனைவர் மனதிலும் ஒற்றுமையின் எண்ணம் மேலோங்கட்டும்.
ஒற்றுமையின் பலத்தால் உலகையே வென்றிடுவோம். ஒற்றுமையின் பலம் மிகுந்த நாடாய் நம்நாடு விளங்கட்டும்.
You May Also Like: |
---|
முயற்சி திருவினையாக்கும் கட்டுரை |
ஒழுக்கம் பற்றிய கட்டுரை |