இந்த பதிவில் “கருணையுடன் முன்னேறுதல் கட்டுரை” பதிவை காணலாம்.
தூய சிந்தனைகள் நம்மை மென்மேலும் உயர்ந்து செல்ல உதவிகரமாக அமையும் என்பது தெட்ட தெளிவான உண்மையாகும்.
கருணையுடன் முன்னேறுதல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கருணையின் பரிசு
- கருணையின் உள்ளம்
- அன்னைதெரேசா
- சங்ககாலத்து கருணை வள்ளல்கள்
- முடிவுரை
முன்னுரை
“வாடிய பயிரை காணும்போதெல்லாம் வாடினேன்” என்கிறார் வள்ளலார். “என்கடன் பணி செய்து கிடப்பதுவே” என்கிறார் திருநாவுக்கரசர்.
இவ்வாறு நமது மொழியும் நமது இலக்கியங்களும் கருணையின் திறத்தையும் கருணை உடையவர்களது மேன்மை தன்மைகளையும் எடுத்து கூறி நிற்கின்றன.
கருணை எனும் உயர்ந்த இயல்பு தெய்வத்தின் பண்பாகும். அது மனிதனிற்கும் வாய்க்க பெறின் அதனால் உண்டாகும் மேன்மைக்கு ஈடு இணை என்பதே கிடையாது. இந்த கட்டுரையில் நாம் கருணையின் மேன்மை பற்றி காணலாம்.
கருணையின் பரிசு
“உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும்” என்று எம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நமக்கு போதனை செய்கின்றார்கள்.
அன்பினாலும் கருணையினாலும் நமக்கு கிடைக்கும் நன்மை யாதென சிந்திப்போமானால் “தர்மம் தலைகாக்கும்” என்பது போல
பிறரிடத்திலும் உயிர்கள் இடத்திலும் கருணை உடையவர்களாய் இருப்பவர்கள் மீது இறைவன் கருணை உடையவனாய் இருப்பான் என்பது நம்பிக்கையாகும். இதன் மூலம் அவர்களது வாழ்வும் அர்த்தம் உடையதாக மாறும் என்று கூறப்படுகின்றது.
கருணையின் உள்ளம்
“தன்னுயிர் போல மன்னுயிரையும் பாவித்தல்” என்பதற்கிணங்க கருணை நிறைந்த உள்ளத்தில் ஒளி உண்டாகும். பிறருடைய துன்பத்தில் உதவி செய்து காக்கின்ற மகத்தான சிந்தனைகள் தோன்றும்.
சக மனிதர்களையும் நேசிக்க துவங்குகையில் அவர்களுடைய வாழ்வும் உயர துவங்குகின்றது.
எண்ணம் போல் வாழ்க்கை என்பது போல மனிதம் என்ற உயரிய சிந்தனை உடைய உள்ளம் உடையவர்கள் ஒரு போதும் வாழ்வில் தோற்பதில்லை. இறைவன் அவர்களை நன்றாக வழிநடாத்தி செல்வான் என்பதில் ஐயமில்லை.
அன்னை தெரேசா
அன்பின் வழி நின்று உலகின் உன்னத நிலையினை அடைந்தவர்கள் பலர் நமது உலகில் தோன்றியிருக்கிறார்கள் அவற்றில் அன்னை தெரேசா அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை வகிக்கின்றார்.
ஏழை எழியவர்கள் மீதும் அநாதை குழந்தைகள் மீதும் கொண்டிருந்த அளவில்லாத கருணையால் இந்த உலகமே போற்றும் ஒரு உன்னத நிலையினை அடைந்தார்.
அன்பு, பணிவு, அடக்கம், கருணை ஒரு மனிதனை எவ்வாறு தெய்வநிலைக்கு இட்டு செல்லும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துகாட்டாக திகழ்கின்றார்.
சங்ககாலத்து கருணை வள்ளல்கள்
தமிழர்களுடைய வரலாற்று காலங்களில் இருந்தே பல ஆட்சியாளர்கள் கருணை வள்ளல்களாக இருந்தனர். ஏழை எழிய மக்களின் நலனுக்காக பல்வேறு உபகாரங்களை செய்து எல்லோராலும் போற்றப்பட்டனர்.
அந்தவகையில் தமிழின் முதற்காலமான சங்ககாலத்தில் “பாரி, காரி, ஓரி, ஆய், நள்ளி, எழினி, பேகன்” என கடையேழு வள்ளல்கள் ஆண்டு தம் மக்களையும் தமிழ் புலவர்களையும் கருணையுள்ளத்தோடு காத்து தமிழின் பெருமையை நிலை நாட்டினர் என்பது வரலாறு.
முடிவுரை
“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறோன்றும் அறியேன் பராபரமே” என்று தாயுமானவர் பாடலுக்கிணங்க நாம் எப்போதும் கருணை உள்ளம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
தூய சிந்தனைகள் நம்மை மென்மேலும் உயர்ந்து செல்ல உதவிகரமாக அமையும் என்பது தெட்ட தெளிவான உண்மையாகும்.
You May Also Like: |
---|
கருணை பற்றிய கட்டுரை |
மத நல்லிணக்கம் கட்டுரை |