இந்த பதிவில் “சமூக வலைத்தளங்கள் கட்டுரை” பதிவை காணலாம்.
நாணயத்தில் இரு பக்கங்கள் உள்ளது போல் இங்கும் நன்மை, தீமை என இரண்டும் கலந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமூக வலைத்தளம் – விளக்கம்
- பயன்கள்
- வலைத்தளங்களால் ஏற்படும் பாதிப்புக்கள்
- பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் வலைத்தளங்களின் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது.
இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்விலும் ஒரு அங்கமாக மாறிவிட்டன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. சமூக வலைத்தளங்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சமூக வலைத்தளம் – விளக்கம்
சமூக வலைத்தளம் என்பது ஓர் இணையச் சேவை, தளம், அல்லது வலைத்தளம் ஆகும். அதாவது, ஒத்தக் கருத்துடையோர் அல்லது செயற்பாடு கொண்டோரின் சமூகத்தை வளர்க்கவும், சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்தவும் வழிசெய்கின்றது.
சமூக வலைத்தளங்களாகப் பல செயற்படுகின்றன. அவற்றுள முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிவிட்டர், ஆர்க்குட்(Orkut), லிங்டின் மற்றும் கூகுள் போன்றவற்றைக் கூறலாம்.
பயன்கள்
சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பது இன்று ஒவ்வொருவரினதும் அத்தியாவசிய தேவையாக மாற்றம் பெற்றுள்ளது. தொழில் புரிவோர் மற்றும் அலுவல்களில் உள்ளோர்க்கு, தங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களை தொடர்பு கொண்டு, தகவல் பரிமாற்றங்களைச் செய்துகொள்வதற்குப் பயன்படுகின்றது.
மற்றும் காணொளி சந்திப்புகள் மூலம் தங்களின் குறைவான நேரத்தில் அதிக உற்பத்தி திறனை ஏற்படுத்திக்கொள்ள பயன்படுகின்றது. சமூக ஆர்வளர்கள் தங்கள் கருத்துக்களை, செய்திகளை மக்களிடம் சென்று சேர்க்க பயனுள்ளதாக இருக்கின்றது.
உலகில் எங்கோ ஒரு பகுதியில் வசிப்பவர் உலகெங்கும் தொடர்பு கொள்ள சமூகவலைத்தளங்கள் பயன்படுகின்றன. புதிய உறவுகளையும், நட்புக்களையும் ஏற்படுத்திக் கொள்ள பயன்படுகின்றன.
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ளவும், இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து உரிய பாதுகாப்புப் பெறவும் உதவுகின்றன.
சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களைத் மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக வலைத்தளங்கள் முக்கிய ஊடகங்களாகப் பயன்படுகின்றன.
வலைத்தளங்களால் ஏற்படும் பாதிப்புக்கள்
மாணவர்கள் வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிடுவதனால் எதிர்காலம் பாதிப்பதோடு அவர்களது முழு வாழ்வையும் சீரழித்து விடுகிறது.
கணவன்-மனைவி இருவருமே தமது பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால் அவர்களுக்குள்ளே புரிந்துணர்வை பெறவோ, கருத்துப்பரிமாற்றம் அன்பான உரையாடல் போன்றவற்றிற்கு நேரம் கிடைப்பதில்லை.
இன்று பெருகிவரும் மணவிலக்குகளுக்கு சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணமாகின்றன என்பது வேதனைக்குரியதாகும்.
ரகசியமாகப் பேணவேண்டிய பல தகவல்களைப் பொது வெளியில் கொண்டுவரப்படுவதற்குக் காரணமாகின்றது.
மாணவர்கள் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகம் செலவிடுகின்றனர். அதனால் கல்வியியில் நாட்டம் கொள்ளாது வழிதவறிப் போகின்ற நிலையும் ஏற்படுகின்றது. இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிப்படைகின்றது.
பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இவற்றில் இருந்து விடுபடும் வழிகளை நாமே கண்டறிய வேண்டும். ஓய்வு நேரங்களைப் பிரயோசனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் வாசிக்கலாம், கவிதைகள் கட்டுரைகள் போன்றவற்றை எழுதலாம், விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும்.
எனவே ஓய்வு நேரங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடலாம். எப்போதும் சமூக வலைத்தளங்களுக்கு நாம் அடிமையாகி விடாமல் சமூக வலைத்தளங்களை நமக்கு அடிமையாகி கொள்ளுதல் வேண்டும்.
முடிவுரை
நாணயத்தில் இரு பக்கங்கள் உள்ளது போல் இங்கும் நன்மை, தீமை என இரண்டும் கலந்துள்ளது. எனவே இதில் நன்மைகளை நாம் தேர்வு செய்து கால ஓட்டத்திற்கேற்ப நாமும் உலகோடு ஒட்டி வாழவேண்டும்.
சமூக வலைத்தளங்களினால் கிடைக்கும் நன்மைகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தீமைகளைப் புறக்கணித்து பயனடைவது தான் சாலச் சிறந்ததாகும்.
You May Also Like : |
---|
சுற்றுப்புற தூய்மை கட்டுரை |
ஊழல் பற்றிய கட்டுரை |