சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

Salai Pathukappu Katturai In Tamil

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அனைவருக்கும் அவசியமான “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை” பதிவை இதில் நோக்கலாம்.

நமது கவனயீனம் எமக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே அனைவரும் சாலையில் விழிப்புணர்வுடன் பயணிக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. சாலை பாதுகாப்பு
  3. சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்
  4. சாலை விதிமுறைகள்
  5. சாலை விபத்துக்கான காரணங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

சாலைகள் எமது வாழ்வோடு பெரிதும் ஒன்றிணைந்துள்ளன. பயணங்களை இலகுபடுத்துபவையாகச் சாலைகள் காணப்படுகின்றன.

சாலைகளில் அன்றாடம் பல விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் சாலைப் பாதுகாப்பு என்பது மக்களுக்கு மிக மிக அவசியமாகின்றது.

ஆனால் எல்லோரும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை. இந்தக் கட்டுரையில் சாலை பாதுகாப்பு பற்றி காண்போம்.

சாலைப் பாதுகாப்பு

விபத்துகளைக் குறைப்பதற்காகவும் சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வீதிகளின் கரையோரம் வீதிச் சமிஞ்ஞைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைப் பின்பற்றும் போது வாகன நெரிசல்கள், விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படுகின்றன. பாதசாரிகள் கடவைகள் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

மோட்டார் வாகனங்களில் பயணம் செய்யும் போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலையில் காயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சாலை விதிமுறைகளை மீறும் சந்தர்ப்பங்களில் அபராதம் விதிக்கப்படுகிறது. சில சமயங்களில் அபராதம் செலுத்த முடியாது போய்விடின் அவர்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவும் நேரிடலாம்.

இவ்வாறான பல சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சாலை விபத்துக்கள் குறைவதில்லை. காரணம் சாலைப் பாதுகாப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களுக்கு இன்மையே ஆகும்.

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்

அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக சாலைகளில் பயணம் செய்கின்றோம். சாலையில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தேவைக்காகச் சென்று கொண்டிருப்பார்கள்.

இவர்கள் பேருந்து, மோட்டார்வண்டி, துவிச்சக்கரவண்டி, மகிழுந்து போன்ற நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிப்பார்கள்.

இதனால் ஏதோ ஒரு வகையில் விபத்துக்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன் காரணமாக உயிர்ச்சேதம், காயங்கள் உண்டாவதுடன் சில சமயங்களில் உடல் உறுப்புகளை இழக்கவும் நேரிடலாம்.

எனவே இதிலிருந்து தப்பித்து பாதுகாப்பாக பயணம் செய்ய சாலைப் பாதுகாப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சாலை விதிமுறைகள்

சாலை பாதுகாப்புக்காக அரசாங்கம் பல விதிகளை விதித்துள்ளது. விதிகளை சரியான வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை கண்காணிப்பதற்காகப் போக்குவரத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

வாகன சாரதிகள் குறியீட்டுச் சமிக்ஞைகளைப் பார்த்து வாகனத்தை செலுத்தி செல்ல வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுடனும் குறிப்பிட்ட வேகத்தினைத் தாண்டாமலும் வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும். சாரதி அனுமதி அட்டையை கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும்.

பாதசாரிகள் மஞ்சள் கோட்டில் ஊடாகவே கடப்பது அவசியமாகும். பாதையில் பாதுகாப்பற்ற வளைவு வழிகளினூடாகக் கடப்பதனைத் தவிர்க்க வேண்டும். போன்ற பல்வேறுபட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகள் காணப்படுகின்றன.

சாலை விபத்துக்கான காரணங்கள்

அன்றாடம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டப் பல காரணங்கள் இருந்தாலும் வாகனச்சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனமான போக்கே முக்கிய காரணமாக விளங்குகின்றது.

அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டை இழக்கும் போதும் விபத்துக்கள் நிகழ்கின்றன.

சாலைகளில் காணப்படும் பிழைகள், தரமற்ற சாலைகள் காரணமாகவும் விபத்துக்கள் நிகழ்கின்றன.

பாதசாரிகள் வாகனங்கள் வீதிகளில் செல்வதனைப் பொருட்படுத்தாமல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே சாலையைக் கடப்பது அல்லது சாரதிகள் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்வது,

குடிபோதையில் வாகனத்தைச் செலுத்துவது போன்றனவும் சாலை விபத்துகளுக்குக் காரணங்களாக அமைகின்றன.

முடிவுரை

பாதுகாப்பாகவும் இலகுவாகவும் பயணங்களை மேற்கொள்வதற்காகவே சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் தனி மனிதர் ஒவ்வொருவரும் சாலை விதிமுறைகளைக் கடைபிடித்தல் அவசியமாகும்.

இது தனிமனிதனுக்கு மட்டுமன்றி சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

எவ்வளவு அவசரமான வேலை இருப்பினும் அதற்காக சாலை விதிகளை மீறிச் செயல்பட கூடாது. எனவே சாலை விதிகளைக் கவனத்தில் கொண்டு அதை மதித்து நடத்தல் அவசியமாகும்.

சாலை விதிகளை கடைபிடித்து நம் உயிரை மட்டும் அல்லாது சாலையில் பயணிக்கும் அனைவரது உயிரையும் காப்போமாக.

You May Also Like:

ஒலி மாசுபாடு கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை