தாய்ப்பால் பற்றிய கட்டுரை

தாய்ப்பால் கட்டுரை

இந்த பதிவில் “தாய்ப்பால் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தாய்ப்பால் ஊட்டுதல், குழந்தைகளை பராமரித்தல் போன்றவற்றில் இன்றைய காலத்து பெண்கள் அதிகம் தவறுகளை செய்கின்றனர்.

தாய்ப்பால் பற்றிய கட்டுரை

தாய்ப்பால் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தாய்ப்பாலின் அவசியம்
  • நன்மைகள்
  • உலக அங்கீகாரம்
  • முடிவுரை

முன்னுரை

உலகத்தில் மனிதனுக்கு கிடைத்த முதல் உணவு தாய்ப்பால் என வர்ணிக்கப்படுகிறது. அதற்கு ஈடான உணவு என்று எதுவும் இல்லை எனலாம்.

குழந்தையின் பசியை போக்குவது மட்டுமல்லாது தாய்மை எனும் மகத்தான வடிவத்தை உலகத்துக்கு வெளிப்படுத்தி காட்டுகின்றது.

உலகத்தின் ஒவ்வொரு குழந்தைகளும் தாய்ப்பால் மூலமே முதலில் போசிக்கப்படுகின்றன. இக்கட்டுரையின் வாயிலாக தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி காண்போம்.

தாய்ப்பாலின் அவசியம்

குழந்தைகள் பிறந்த நாள் முதல் தாய்ப்பால் குடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தாய்ப்பால் குடிப்பதனால் தான் குழந்தை ஆரோக்கியமாகவும் நோயெதிர்ப்பு சக்தியுடனும் வளர முடியும்.

பிறந்த குழந்தைகள் குறைந்தபட்சம் மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறையாவது தாய்ப்பால் குடிக்க வேண்டியது அவசியம். கிட்டத்தட்ட 03 வயது வரை தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தைகள் நோய்க்கிருமிகளில் இருந்து சிறப்பாக பாதுகாப்பு பெறுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிலர் தாய்ப்பாலுக்கு பதிலாக பசுப்பால் போன்றவற்றை கொடுப்பார்கள் ஆனால் அவற்றினை விடவும் தாய்ப்பாலே ஜீரணம் அடையக்கூடிய, போஷாக்கான, சிறந்த உணவாக விளங்குகின்றது.

தாய்ப்பால் இன்றி வளரும் குழந்தைகள் பல உடல் நல கேடுகளை பிற்காலத்தில் எதிர்கொள்ள கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நன்மைகள்

தாய்ப்பாலினை ஒரு குழந்தை குடிப்பதனால் பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. அவையாவன தாய்ப்பாலில் புரதம், விற்றமின், கனியுப்புக்கள் போன்ற குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளடங்கயிருப்பதனால் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

தாய்ப்பால் தான் குழந்தைக்கு புத்திகூர்மை, சுறுசுறுப்பு, மூளை செய்ல்திறன் போன்றவற்றை வழங்குகின்றது என்பதனை உலக சுகாதார ஸ்தாபனம் ஆதாரபூர்வமாக நிருபித்துள்ளது.

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மனஅழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புக்கள் குறைவாகவே ஏற்படும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உலக அங்கீகாரம்

உலகமெங்கும் தாய்மைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு பேணப்பட்டு வருவதனை அவதானிக்க முடியும். இதனால் தான் உலகமெங்கும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஏன்என்றால் உலகின் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்துக்கு உட்டபட்ட ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாகவும் விசேட கவனத்தை செலுத்துகின்றனர்.

அவர்களை பாதுகாக்க பல விசேட திட்டங்களையும் நடை முறைப்படுத்துகின்றனர். இதன் ஒரு வடிவமாகவே தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வுகளை உலகமெங்கும் ஏற்படுத்தியும் வருகின்றனர்.

எதிர்கால சந்ததியானது உடல் உள ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது மறைமுக நோக்கமாக உள்ளது.

முடிவுரை

இன்றைய நவீன வாழ்க்கை முறையானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பல நேரெதிரான தாக்கங்களை ஏற்படுத்தி வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனால் தாய்ப்பால் ஊட்டுதல், குழந்தைகளை பராமரித்தல் போன்றவற்றில் இன்றைய காலத்து பெண்கள் அதிகம் தவறுகளை செய்கின்றனர்.

இவற்றினால் எதிர்கால சமுதாயம் பல பாதிப்புக்களை எதிர்கொள்ளலாம் என்பதனால் இவை தொடர்பாக பெண்கள் இன்றே விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டியுள்ளது.

You May Also Like:
உலக தாய்ப்பால் தினம்
தாய் பற்றிய கட்டுரை