இந்த பதிவில் “தூய்மை சென்னை கட்டுரை” பதிவை காணலாம்.
நகர தூய்மையினை மேம்படுத்த உருவாக்கப்படுகின்ற இவ்வகையான திட்டங்களில் நாமும் பங்கெடுத்து நகரத் தூய்மையினை பேண முன் வர வேண்டும்.
தூய்மை சென்னை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நோக்கம்
- செயற்பாடுகள்
- அவசியம்
- பயன்கள்
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழும் சூழலானது காட்சியளிக்கும் விதமே நம் உடல் உள ஆரோக்கியத்தின் வெளிப்பாடாக அமையும். எனவே சூழலை சுத்தமாக பேணுவது அவசியமாக காணப்படுகின்றது.
இத்தகைய பின்னணியில் மக்களிடம் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான எண்ணத்தினை அவர்கள் போக்கிலேயே ஏற்படுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்ததன் விளைவாக உருவாக்கப்பட்டதே இந்த தூய்மை சென்னை என்ற திட்டமாகும்.
நோக்கம்
பொதுமக்களுக்கு குறிப்பாக நகரவாசிகளிடம் சென்னை நகரை தூய்மையானதாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றது.
சென்னையின் நலனில் அக்கறை கொண்டு தங்களது பங்களிப்பை தரத் தயாராக உள்ள தனி நபர்கள் மற்றும் அமைப்புக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
செயற்பாடுகள்
தேவையற்ற திடக்கழிவுகளை திறம்படக் கையாள்வதும் வீடுகளிலேயே குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பது எப்படி? என்பவற்றை மக்களிடம் நெருங்கிச் சென்று புரிய வைத்து அவர்களையும் அதில் ஈடுபட வைப்பதற்கான முயற்சிகள் இத்திட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக முதல் கட்டமாக தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வினை நகர வாசிகளிடையே ஏற்படுத்துவதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தின் ஊடாக நகரின் பல்வேறு மக்களை ஒருங்கிணைத்து தெருக்களை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றது.
அவசியம்
பொதுவாகவே மனித உயிர் வாழ்க்கைக்கும் மற்றும் ஏனைய ஜீவராசிகளின் உயிர் வாழ்க்கைக்கும் நிலம், நீர், வளி என்பவற்றை உள்ளடக்கிய இயற்கை ஆதாரமாக விளங்குகின்றது.
இத்தைகைய இயற்கையின் பாதுகாப்பிற்கு சுற்றுப்புறத் தூய்மை முக்கியம் பெறுகின்றது. நோய்கள் அண்டாமல் இருப்பதற்கு தூய்மையாக இருப்பது அவசியமாகும்.
இவ்வாறு நகரங்கள் தூய்மையாக இருந்தால் தான் நாடு தூய்மையாக இருக்கும். மனதிற்கு அமைதியை ஏற்படுத்துவதற்கும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தவும் சுற்றுச்சூழல் தூய்மையாக இருப்பது அவசியமாகின்றது.
பயன்கள்
சூழலை சுத்தமாக பேணும் போது சூழல் மாசாக்கமானது குறைக்கப்படுகின்றது, உயிர்ச் சூழல் சமநிலையானது பேணப்படுகின்றது. அழிவடைந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க உதவுகின்றது.
இயற்கை வளங்களை பாதுகாக்க உதவுகின்றது. நாம் வாழும் வீடு முதல் வேலை செய்யும் இடங்கள் என்பன நமது வாழ்க்கை முறையின் வெளிப்படாக அமைகின்றது.
இவற்றில் தூய்மை பேணுகின்ற போது உடல் உள சுகாதாரம் மேம்படுத்தப்படுவதோடு தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் போன்றவற்றிலிருந்தும் நம்மையும் நமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
முடிவுரை
எனவே நமது நகர தூய்மையினை மேம்படுத்த உருவாக்கப்படுகின்ற இவ்வகையான திட்டங்களில் நாமும் பங்கெடுத்து நகரத் தூய்மையினை பேண முன் வர வேண்டும்.
இந்தியாவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் 50 நகரங்களுக்குள் சென்னை உள்வாங்கப்பட்டிருப்பினும் இதனை முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என நாம் அனைவரும் உறுதி எடுத்து நமது நகர தூய்மையினை பேணி நமது உடல் உள சுகாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
You May Also Like: |
---|
தூய்மை இந்தியா கட்டுரை |
சுற்றுப்புற தூய்மை கட்டுரை |