நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

neerin mukkiyathuvam katturai in tamil

இந்த பதிவில் “நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு நாட்டில் நீர் வளம் இல்லையேல் அந்த நாடு மிகப் பெரிய வறட்சியையும் பஞ்சத்தையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நீரின் சிறப்பு
  • நீரின் முக்கியத்துவம்
  • நீர் மாசடைதல்
  • நீர்ப் பாதுகாப்பு
  • முடிவுரை

முன்னுரை

இப்பூமியின் நிலைத்தன்மைக்கு நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகிய ஐம்பூதங்களே காரணமாக அமைகின்றன. அவற்றில் நீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வாக்கிற்கமைய நீரானது இந்த உலகின் இயக்கத்திற்கு இன்றயமையாத ஒன்றாகும்.

நீரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பது நீர்வளத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு அளிக்க மிகவும் உதவியாக இருக்கும். இக்கட்டுரையில் நீரின் முக்கியத்துவம் பற்றி நோக்கலாம்.

நீரின் சிறப்பு

நீரின் சிறப்பு யாதனெனில் அது தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் சம அளவில் முக்கியத்துவமாக விளங்குவதாகும். மனித உடலில் கிட்டத்தட்ட எழுபது வீதம் தண்ணீர் காணப்படுகின்றது.

அதிகமாக நீரை நுகரும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலின் இயக்கசக்தி அதிகரிக்கின்றது.

தாவரங்களை பொறுத்தவரை உணவு தயாரிப்புச் செய்முறைக்கு நீரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். மனிதர்களைப் போன்றே விலங்குகளும் நீர் அருந்தாவிடின் அவற்றிலுள்ள நீர்சக்தியை இழந்து இறந்துவிடும்.

நீரின் முக்கியத்துவம்

நீரானது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாக அமைகின்றது. ஒரு நாட்டில் நீர் வளம் இல்லையேல் அந்த நாடு மிகப் பெரிய வறட்சியையும் பஞ்சத்தையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

தாவரங்களின் நிலைத்திருத்தலிற்கு மிகவும் அவசியமானது நீர். நீரில்லையேல் விவசாயம் மற்றும் ஏனைய பயிர் செய்கையையும் மேற்கொள்ள இயலாது போகும்.

மழை வீழ்ச்சி குறைவடைந்தால் பயிர் நிலங்கள் அனைத்தும் வறண்டு போய் தரிசு நிலங்களாக காட்சி தரும். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு மனித இனம் அழிந்து போகக் கூடிய அபாயத்தை நீர்தட்டுப்பாடு ஏற்படுத்தும்.

நீர் மாசடைதல்

நீரானது பல்வேறு வகையில் மாசடைதலிற்கு உட்படுகின்றது. கைத்தொழில் மயமாக்கலின் விளைவினால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆறுகள் மற்றும் நீர் நிலைகளை அண்டிய இடங்களில் தொழிற்சாலைக் கழிவுகளை கொட்டுவதனாலேயே நீர் அதிகளவில் மாசடைகின்றது.

நிலத்தடி நீரை உறிஞ்சுதல் இன்று உலகை அச்சுறுத்தும் மிகப் பெரிய விடயமாக மாறியுள்ளது. குளிர்பான தொழிற்சாலைகளில் குளிர்பான தயாரிப்பிற்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ள அதிகளவான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுகின்றது.

இதனைத் தவிர உலகையே அச்சுறுத்துகின்ற அணுகுண்டு போன்ற ஆபத்தான பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும் நீர்வளம் பாதிக்கப்படுகின்றது.

நீர் பாதுகாப்பு

உயிரினங்களின் நிலைத்திருத்தலை பாதுகாப்பதற்கு நீர்வளத்தை பாதுகாப்பது அவசியமாகும். மக்கள் சமூகப் பொறுப்போடு செயற்பட்டு நீரை மாசுபடுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் போது நீர் வளம் பாதுகாக்கப்படும்.

நீரை பாதுகாப்பதற்கு சிறந்த வழி மழை நீரை சேமித்தலும், மழை நீர் கிடைப்பனவை அதிகரித்தலுமாகும். மழைவீழ்ச்சியை அதிகப்படுத்துவதற்கு காடுகளை பாதுகாத்தலும் மரங்களை நாட்டுதலும் அவசியமாகும்.

மழை நீரை சேகரிப்பதற்கு குளங்களை தூர்வாருதலும், மழை நீர் சேமிப்புக் கூடங்களை அமைப்பதும் கட்டாயமாகும்.

மேலும் பூச்சி கொல்லிகளை பயிர்களிற்கு விசுறும் போதும் அவற்றிடையே பாய்ந்து செல்லும் ஆறுகள் மற்றும் நீரோடைகள் மாசடைகின்றன. கழிவு எண்ணைகளை கடலில் கொட்டுவதால் கடலிலுள்ள இலட்சக் கணக்கணக்கான மீனினங்கள் அழிகின்றன.

முடிவுரை

நீர் வளத்தை பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும். இனிவரும் ஐம்பது ஆண்டுகளில் நீர்வளம் அரைவாசியாக குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே விலைமதிப்பில்லாத நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கும் அதன் கிடைப்பனவை உறுதிப்படுத்துவோமாக.

You May Also Like :
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
மழை நீர் உயிர் நீர் கட்டுரை