நெகிழி பற்றிய கட்டுரை

Negili Katturai In Tamil

இந்த பூமி மாசடைய முக்கிய பங்கு வகிக்கும் பொருள்களில் ஒன்றாக இருக்கும் நெகிழி பற்றிய கட்டுரை பதிவை இக்கட்டுரையில் காணலாம்.

இது அதிகம் பயன்படுகின்ற போதிலும் இதன் பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கின்றது. இவை நிலம், நீர், வளி என அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

நெகிழி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நெகிழி
  3. நெகிழி பயன்பாடு
  4. நெகிழியின் தீமைகள்
  5. அகற்றும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் பல்வேறுபட்ட கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்துள்ளான். இன்றுவரை கண்டுபிடித்தும் வருகின்றான். இத்தகைய கண்டுபிடிப்புகளில் நெகிழியும் ஒன்றாகும். இதனையே பிளாஸ்டிக்கென பொதுவாக அழைக்கின்றனர்.

சுற்றுச்சூழல் மாசடைவதில் முதன்மை வகிக்கின்றது. அதனாலேயே தான் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென அரசினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

நெகிழி மனிதனுக்குப் பயன்படுகின்ற போதிலும் அதிக பாதிப்பை உலகிற்கு தருகின்றது. இந்த கட்டுரையில் நெகிழி பற்றிக் காண்போம்.

நெகிழி

நெகிழியென்பது ஒரு பொருள் ஏதாவதொரு நிலையில் இளகிய நிலையிலிருந்து பின்னர் இறுகிய நிலையை அடைவதைக் குறிக்கும் சொல்லாகும். “வார்க்கத் தக்க ஒரு பொருள்ˮ எனும் பொருள் தரும்.

பிளாஸ்டிக்கோஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்து போகாமலும் பிசைவு கொள்ளும் ஒரு பொருளாகும்.

இதன் தோற்றம் 1862ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுகோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் பாக்ஸ்டைன் என்று பெயரிட்டார்.

1933இல் பார்செட் மற்றும் கிப்ரான் ஆகியவர்கள் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலின் இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிகவும் அதிகம் பயன்படுத்தும் பொருளாகவும்⸴ சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகின்றது.

நெகிழி பயன்பாடு

நெகிழி பயன்பாடு நம் அன்றாட வாழ்வில் பெரிதும் கலந்துள்ளது. அன்று சாப்பிடுவதற்கு வாழை இலை⸴ தையல் இலை போன்றவற்றைப் பயன்படுத்தினோம். ஆனால் இன்று கண்களைக் கவரும் பல நிறமுள்ள வடிவங்களில் வீட்டில் நெகிழித் தட்டுக்களை பயன்படுத்துகின்றோம்.

நெகிழிப் பயன்பாடுடைய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா⸴ சீனா⸴ இந்தியா ஆகிய நாடுகள் முதலிடம் பிடிக்கின்றன. உடையாமல் இருப்பதாலும் இடையின்றி லேசாக இருப்பதாலும் மக்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கடனட்டைகள்⸴ அலங்காரப் பொருட்கள்⸴ செயற்கைப் பல்⸴ சமையல் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் நெகிழியால் உருவாக்கப்பட்டுள்ளன.

நெகிழியின் தீமைகள்

நாம் பயன்படுத்தும் பொலித்தீன் பைகள் நகர வீதிகளிலே குவிந்து சூழலை மாசடையச் செய்கின்றன. ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் டன் நெகிழி கடலுடன் கலந்து கடல் வாழ் உயிரினங்களின் அழிவிற்கு வழிவகுக்கின்றன.

நெகிழிக் கழிவுகள் நிலத்தைப் பாதிக்கின்றன. தொழிற்சாலைகளில் மறுசுழற்சி செய்யும் போதும் உருக்கும் போதும் வெளியேறும் வாயுக்களால் ஊழியர்கள்⸴ அருகில் வசிக்கும் மக்கள் போன்றோர் பாதிப்படைகின்றனர்.

கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர்வழி அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்படுகின்றது. தோல் நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகின்றது.

அகற்றும் வழிமுறைகள்

நெகிழிப் பொருட்களில் 10% பொருட்களை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. 90% ஆன பொருட்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. நெகிழிப் பொருட்களை கண்ட இடங்களில் கொட்டுவதை தவிர்த்து சேகரித்து மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் சூழலில் வீசக் கூடாது.

சிலிக்கன் சேர்மத்தைப் பயன்படுத்தலாம் இது பெருமளவில் தீய விளைவு இல்லாதது. காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம்.

முடிவுரை

மாசுவை நீக்க நாம் ஒவ்வொருவரும் நம்மாலானவற்றைச் செய்திட வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும். நெகிழி ஒழிப்பில் நாமும் பங்கெடுப்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கமைய நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். செயற்கையை ஒழித்து இயற்கையுடன் வாழ்வோம்.

You May Also Like:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

இயற்கை பாதுகாப்பு கட்டுரை