இந்த பதிவில் இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னனால் கட்டப்பட்ட “மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வரலாறு
அறிமுகம்
தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமான கோவில் என்ற சிறப்பினை மாமல்லபுரம் கடற்கரை கோவில் கொண்டுள்ளது. இதன் அழகிய அமைப்பானது கட்டடக்கலையின் அற்புதம் எனலாம்.
இக்கோவில் இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னனால் கட்டப்பட்டதாகும்.
1984இல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. 440 பிரதான சின்னங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னிதிகள் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன.
வரலாறு
பல்லவர் காலத்தில் இங்கு முக்கிய துறைமுகமாக மாமல்லபுரம் கடற்கரை செயற்பட்டு வந்துள்ளது. மார்கோபோலோ மற்றும் அவருடன் வந்த ஐரோப்பிய வணிகர்கள் தற்போதுள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலில் உள்ள இடத்தினை ஏழு அடுக்குகள் என அழைத்தனர்.
அன்றைய காலத்தில் அவர்களின் கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கு போல் ஒருவேளை செய்யப்பட்டு இருக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது. அதுமட்டுமல்லாது கடற்கரையில் ஏழு கோவில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலுமிகள் குறிப்பிடுகின்றனர்.
ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் நரசிம்மவர்ம மன்னன் அவர்கள் குகைக் கோவில்கள் மற்றும்⸴ ரதங்கள் உள்ளிட்ட பல படைப்புக்களை தொடக்கிவைத்தார்.
இதன் உச்ச நிலையே மாமல்லபுரம் கடற்கரை கோவில் ஆகும். கடலில் மூழ்கிப்போன கோவில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோவில் இக்கோயிலென ஊகிக்கப்படுகின்றது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி இக்கோயில் மற்றும்⸴ சுற்றியிருந்த தோட்டம் முதலானவற்றை தாக்கிய போதும் கோவிலானது பெருமளவில் சேதமடையவில்லை.
நீர்மட்டம் சிறிது நேரத்திலேயே சாதாரண நிலைக்குத் திரும்பியது. கடினமான கருங் கற்களால் கோவில் வடிவமைக்கப்பட்டதால் சுனாமியால் உருவான அலைகளில் பெரிய அளவில் சேதம் அடையாமல் தாக்குப்பிடித்து.
கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கள் அமைப்பு பாதுகாப்பிற்கு உறுதுணையாக அமைந்தன. இக்கோவிலின் நேர்த்தியான கட்டமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு மன்னர் நரசிம்மர் என அழைக்கப்பட்ட பல்லவ அரசவையின் “இரண்டாம் நரசிம்மவர்மன்” மன்னனையே சாரும்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் சிறப்புகள்
இக்கோவில் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்த போதிலும் தனக்கேயான கம்பீரத்துடன் நிலைத்து நிற்கின்றது.
கோயிலானது இரண்டு விமானங்கள் கொண்டுள்ளது. ஒன்று சத்திரிய சிம்மேஸ்வரம் மற்றையது ராஜசிம்மேஸ்வரமாகும்.
கிழக்கு நோக்கி இருக்கும் கோயில் ஐந்து அடுக்குகளைக் கொண்ட விமானத்தையும்⸴ மேற்கே அமைந்துள்ள கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட விமானத்தையும் கொண்டுள்ளது.
சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னிதியும் இக்கோவிலில் இடம்பெற்றுள்ளமை சைவம்⸴ வைணவம் போன்ற அனைத்து மரபுகளும் ஒன்றாக இணைத்து சிறப்பிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது.
இக்கோவிலிலுள்ள கற்களானது புகார்⸴ உறையூர்⸴ மாங்குடி⸴ அரிக்கமேடு என்ற சங்ககால இடங்களில் பயன்படுத்தப்பட்ட கற்கள் போன்று காணப்படுகின்றன.
கோவிலைச் சுற்றியுள்ள நந்திகள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இதைப் பார்க்கும் போது கோயிலை நந்திகள் பாதுகாப்பது போன்ற தோற்றத்தினை அளிக்கின்றது. பல்வேறு கற்களை வெட்டி எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி செய்யப்பட்டுள்ளன.
சிற்பங்களின் வடிவமைப்பு
பல்லவர்களிடமிருந்து மாமல்லபுரத்தை ஆக்கிரமித்த சோழர்கள் பிற்காலத்தில் இக்கோவிலின் கூடுதல் பகுதிகளை கட்டினார்கள். சுவரில் கலைநயம் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மகாபலிபுரத்தை காண வருபவர்கள் முதன்முதலில் பார்ப்பவை பெரும் மதிலையும் அதில் வடிவமைக்கப்பட்டுள்ள அமரர் சிலைகளையுமே ஆகும்.
இந்த சிற்பத்தை அர்ஜுனன் சிற்பங்கள் என்கின்றனர். 9 அடி நீளமும் 30 அடி உயரமுள்ள இந்தப் பாறையின் மதிலில் 150 சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. தெய்வங்கள்⸴ தேவர்கள்⸴ கந்தர்வர்கள்⸴ மனிதர்கள்⸴ நாகராஐர்கள்⸴ நாககன்னிகை முதலானவற்றையும்⸴ யானை⸴ சிங்கம்⸴ சிறுத்தை⸴ குரங்கு⸴ பூனை⸴ பறவைகள் இவற்றையும் உயிர் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
இப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று உள்ளது. இது இரண்டு பாகமாகப் பாறையை பிரிக்கின்றது.
வடக்கு பாகத்தில் சிவபிரானையும் தவக்கோலத்தில் நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும்⸴ கீழே ஒரு சிறு விஷ்ணு கோவில் இருப்பதையும் காணலாம்.
இடது பாகத்தில் உயிர் உள்ளவைகள் போன்று தேவர்களும்⸴ தேவிகளும் சிலை உருவில் பொறிக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.
மான் ஒன்று தன் பின்னங்காலினால் முகத்தை சொறிந்து கொள்ளும் காட்சி⸴ துறவி மார்பெலும்பு தெரிய தவம் செய்யும் கோலம்⸴ வேறு சில பிராணிகளின் அழகான தோற்றம் போன்றனவும் பார்ப்பவர்களின் மனங்கவரும் சிற்பங்களாக உள்ளன.
பசு மண்டபம் எனப்படும் கிருஷ்ண மண்டபமானது இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்து ஆயர்பாடியில் இருப்பவர்களுக்கு தொல்லை தருகிறார். அதைத் தடுக்க கிருஷ்ணபிரான் கோவர்த்தன கிரியையை குடையாய் பிடித்த காட்சியை இதன் சுவரில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
இதனடியில் கோபாலர்கள் தங்கள் வேலைகளை அமைதியாக கவனித்து வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளமை மேலும் சிறப்பினை ஏற்படுத்துகின்றது.
பாண்டவ ரதங்கள் எனும் ஐற்து ரதங்கள் உள்ளன. இவற்றை நெருங்கும் போதே சீறி நிற்பது போன்ற கல் சிங்கம் சிலையும் அதன் பின்னால் யானை ஒன்றின் சிலையும் பார்ப்பவர்கள் கண்ணைக் கவரும். இவ் ஐந்து ரதக் கோவில்களும் ஒரே பாறையில் செதுக்கியவையாகும்.
தெற்குக் கோடியில் 40 அடி உயரமுள்ள கோவில் தர்மராஐ ரதமாகும். இது மூன்று அடுக்குக் கொண்டது. கீழ்ப் பகுதியில் கற்பகிரகம் செதுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு மேல் ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு கற்ப கிரகங்களும்⸴ சுற்றிலும் பிரகாரங்களும் 42 அழகிய சிற்பங்களும் இருப்பதைக் காணலாம்.
You May Also Like: |
---|
வைகாசி விசாகம் வரலாறு |
திருவண்ணாமலை கோவில் வரலாறு |