மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு

alagumuthu kone history in tamil

இந்தியரின் வெள்ளையருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல்வேறு சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களுக்கு அடிப்படை வித்திட்ட மகா வீரனாக அழகுமுத்துக்கோன் காணப்படுகிறார்.

இவரது வீர மரணத்தின் பின்னரே தமிழகத்தில் சுதந்திரத்திற்கான புரட்சியானது பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், பெரிய மருது, சின்ன மருது ஆகியோரால் ஆரம்பமாகியது.

1959 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த இயக்குனர் “பந்தலு” இயற்றிய “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுக்கும் எட்டப்பன் தவறான கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இதனால் எட்டயபுரமும் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட அக்காலத்தில் வாழ்ந்த எட்டயபுர சமஸ்தான மன்னர் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களை அழைத்து இத்தகைய இழிவை சரி செய்யும் முகமாக, எட்டயபுர வரலாற்றை எழுதுமாறும் கூறினார்.

இதன் விளைவாக, எட்டயபுர புத்தக சாலை கவிஞர்களின் ஆய்வுக்காக திறந்து விடப்பட்டது. எட்டயபுர புத்தகசாலை ஆய்வின் பிரகாரமே அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிவந்தது.

பிறப்பு1710
கட்டாலங்குளம், தூத்துக்குடி,
தமிழ்நாடு
தாய்அழகு முத்தம்மாள்
தந்தைஅழகுமுத்துக்கோன்
சிறப்பு பெயர்சேர்வைகாரர்
பணி விடுதலைப் போராட்ட வீரர்
இறப்பு 1759
நடுக்காட்டூர், தூத்துக்குடி,
தமிழ்நாடு

இளமை பருவம்

கட்டாலங்குளத்தில் மன்னனான அழகுமுத்துக்கோனின் மகனே, ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சியின் ஆரம்ப கர்த்தாவான அழகுமுத்துக்கோன் ஆவார். இவர் பெரிய அழகுமுத்துக்கோன் எனவும் அழைக்கப்பட்டார். அழகு முத்துக்கோன் என்பது இவர்களது குடும்பப் பெயராக காணப்பட்டது.

பெரிய அழகுமுத்துக்கோனின் தந்தையும், எட்டயபுரம் மன்னனுமான ஜெகவீரரும் சிறந்த நண்பர்களாக காணப்பட்டனர். பெரிய அழகுமுத்துக்கோன் எட்டயபுர படைத்தளபதிகளில் ஒருவராகவும் காணப்பட்டார்.

இவர் காளை அடக்குதல், மல்யுத்தம், வாள் வீச்சு என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று அனைத்திலும் சிறந்த முறைகள் வெற்றியீட்டியமையால் “சேர்வை” எனும் சிறப்பு பதம் அவருடைய பெயருடன் இணைக்கப்பட்டு அழகு முத்துக்கோன் சேர்வை எனவும் அழைக்கப்பட்டார்.

பெரிய அழகுமுத்துக்கோன் எட்டயபுரத்தின் படைத்தளபதியாக இருந்த வேளை, எட்டயபுர மன்னனை ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கினார்.

எட்டயபுர மன்னர் கப்பம் செலுத்தாது விட்டார். இதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர் எட்டயபுரத்தின் மீது போர் தொடுத்தனர். எட்டயபுர மன்னர் கட்டாலங்குள மன்னரான அழகுமுத்துகோனிடம் (பெரிய அழகுமுத்துக்கோனின் தந்தை) தஞ்சம் புகுந்தார்.

சிறிது காலம் கழித்து ஆங்கிலேய படை எட்டயபுரத்தை விட்டு சென்றதும் ஜெகவீரர் மீண்டும் எட்டயபுரம் மன்னராக ஆட்சி பீடம் ஏறி ஆட்சி செய்தார். இதற்கு பெரிய அழகுமுத்துக்கோன் பெரும் துணையாக இருந்தார்.

அரசனாக பதவியேற்றமை

பெரிய அழகுமுத்துகோனின் தந்தை 1750 ஆம் ஆண்டு அனுமந்த எனும் இடத்தில் நடைபெற்ற போரில் உயிர் துறந்தார். இதனால் பெரிய அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளத்தின் மன்னராக முடி சூடிக்கொண்டார்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரும் அவரது மரணமும்

பெரிய அழகுமுத்துக்கோனும் ஆங்கிலேயருக்கு வரி செலுத்துவதை தவிர்த்தார். இதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர் கான்சாகிப் என்பவரின் தலைமையில் ஒரு படையை கட்டாலக்குளத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பெரிய அழகுமுத்துக்கோனும் பாரிய படையினை பெத்தநாயக்கனூர் எனும் இடத்தில் கூட்டி இருந்தார். போர் செய்வதற்கு முதல் நாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பெரிய அழகுமுத்துகோனின் படையினர் மீது நள்ளிரவில் கான்சாகிப் தலைமையிலான படையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி தாக்குதல் நடத்தினர்.

இரு படையினருக்கும் பயங்கரமான போர் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி ஈட்டி பெரிய அழகுமுத்துக்கோன் படையையும் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர் கைது செய்த 248 வீரர்களையும், பெரிய முத்துக்கோன் உட்பட 7 படைத்தளபதிகளது கைகளையும் கட்டி பீரங்கியின் முன் நிறுத்தி வைத்திருந்தனர்.

அச்சமயம் ஆங்கிலேயருக்கு சார்பாக வரி வசூலிக்கும் பணியை ஏற்றுருந்த ஜோசப்கான் அழகுமுத்துக்கோனை பார்த்து ஆங்கிலேயருக்கு வரி செலுத்த முடியுமா? முடியாதா? என கேள்வி கேட்க , அழகுமுத்துக்கோன் இயலாது என மறுத்துவிட்டார்.

இதனால் கோபமுற்ற ஜோசப்கான் 248 வீரர்களினது கைகளை துண்டிக்க போவதாக மிரட்டினார். அப்போதும் வரி செலுத்த அழகுமுத்துக்கோன் உடன்படாததால், ஆங்கிலேயப் படைவீரர்கள் 248 வீரர்களின் கைகளை துண்டித்து அவர்களை கொலை செய்தனர்.

அதன் பின்பு ஜோசப்கான் மீண்டும் அழகுமுத்துக்கோனிடம் இப்போதாவது வரி செலுத்த முடியுமா? முடியாதா? என கேள்வி கேட்டபோது சற்றும் தயக்கமில்லாமல் வரி செலுத்த முடியாது என்று கூறினார்.

இதனால் கடும்கோபம் கொண்ட ஜோசப்கான் பீரங்கியின் மூலம் அழகு முத்துக்கோன் உட்பட 7 படைத்தளபதிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்தனர்.

அரச ஆதரவு

1996 ஆம் ஆண்டு அமைச்சர் இராஜப்பன் அவர்களது முயற்சியால் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட வீரர் அழகுமுத்துகோனின் சிலையை அக்காலத்தில் முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.

அத்துடன் அழகுமுத்துக்கோனுக்கு ஒரு மணிமண்டபம் இவரால் கட்டப்பட்டது.

You May Also Like:
உ.வே.சாமிநாதய்யர் வரலாறு
வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை வரலாறு