இந்த பதிவில் வெற்றியின் அடிப்படையான “முயற்சி திருவினையாக்கும் கட்டுரை” பதிவை காணலாம்.
நாம் எந்தளவு கடின உழைப்பினை மேற்கொள்கின்றோமோ அதே அளவுக்கு நிச்சயம் வெற்றி உண்டு.
முயற்சி திருவினையாக்கும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விடாமுயற்சி
- கடின உழைப்பு
- வெற்றியின் ரகசியம்
- கனவு மெய்ப்படும்
- முடிவுரை
முன்னுரை
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்ˮ எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தொடர் முயற்சியின் பயன் வெற்றியே. வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் முயற்சியைக் கைவிடக் கூடாது.
நாம் வாழ்வில் வெற்றியைச் சந்திக்கின்றோமே அல்லது தோல்வியைச் சந்திக்கின்றோமே எதுவாக இருந்தாலும் முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது. முயற்சியின் தேவை பற்றி கட்டுரையில் காண்போம்.
விடாமுயற்சி
“தூங்கும்போது காண்பது கனவல்ல கண்ணை தூங்கவிடாமல் செய்வதுதான் கனவுˮ என்கின்றார் அப்துல்கலாம். கனவு என்பது நம் ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துவிட வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும்.
முயற்சியின் பயனாக இன்று எத்தனையோ பேர் உயர்ந்த இடத்தில் உள்ளனர். ஆபிரகாம் லிங்கனின் கடின உழைப்பே அவரை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது.
ஆயிரம் தோல்விகளைச் சந்தித்த பின்னரே எடிசன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார். எனவே முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது சாத்தியமாகும்.
கடின உழைப்பு
நாம் எந்தளவு கடின உழைப்பினை மேற்கொள்கின்றோமோ அதே அளவுக்கு நிச்சயம் வெற்றியுண்டு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் என தனித்திறமை உண்டு. அதனை இனம் கண்டு வாழ்க்கையில் கடினமாக உழைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும்.
வெற்றி அடைந்த அனைவரும் அந்த வெற்றியினை சாதாரணமாக அடைந்திருக்கமாட்டார்கள். நிச்சயம் வெற்றியின் பின் கடின உழைப்பு இருக்கும்.
தேனீக்கள் தேன் சேகரிப்பதும்⸴ எறும்பு தானியங்கள் சுமப்பதும்⸴ சிலந்தி எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதும் இயற்கை நமக்கு கற்றுத்தந்த கடின உழைப்புக்கான பாடங்கள் ஆகும்.
வெற்றியின் ரகசியம்
“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்ˮ என்கின்றார் கவிஞர் தாராபாரதி. வாழ்வில் வெற்றி பெறுவதற்குச் சிறந்த முதலீடு விடாமுயற்சி ஆகும்.
நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி எப்போதும் நம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். பயிற்சியுடன் கூடிய முயற்சி நம்மை உயர்த்திடும். எனவே வெற்றியின் ரகசியம் விடாமுயற்சி ஆகும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ஆகும்.
கனவு மெய்ப்படும்
வாழ்வில் எப்போதும் நமக்கு ஓர் இலட்சியம் இருக்கவேண்டும். லட்சியம் பற்றிய கனவு வேண்டும். அதனை நனவாக்க எப்போதும் முயற்சி வேண்டும். அப்போதுதான் கனவு மெய்ப்படும்.
கனவுக்காகத் தினம் தினம் உழைக்க வேண்டும். ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்ததும்⸴ சார்லஸ் பாபேஜ் கணினியைக் கண்டுபிடித்தது விடாமுயற்சியினால் தான்.
முடிவுரை
மனிதனது பெரும் முயற்சியினால் நிலவில் கால் எடுத்து வைத்து விட்டான். விண்ணிலும்⸴ மண்ணிலும்⸴ நீரிலும் பல சாதனைகளைப் படைத்து வருகின்றான்.
எவ்வளவு திறமை இருந்தாலும் சரியான முயற்சி இல்லாவிடின் வாழ்வு வீணாகிவிடும். எனவே வாழ்வில் முயற்சியினை எப்போதும் கைவிடாது செயற்படவேண்டும்.
அப்போது தான் சாதனைகள் படைக்க முடியும். எனவே முயற்சி செய்வோம் வாழ்வில் முன்னேறுவோம்.
You May Also Like: |
---|
உழைப்பே உயர்வு கட்டுரை |
அறிவியல் வளர்ச்சி கட்டுரை |