இந்த பதிவில் “யோகா பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி மோட்சத்தை அடைவது வரை பல்வேறு வகைப்படும்.
யோகா பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாறு
- யோகாவின் குறிக்கோள்
- யோகாவின் பயன்கள்
- யோகா தினம்
- முடிவுரை
முன்னுரை
யோகா என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த அரிய கொடை எனலாம். யோகா என்ற சொல்லிற்கு பல பொருள்கள் வழங்கப்பட்டாலும் மேம்படுத்தல் என்ற பொருள் சற்றே பொருத்தமாக அமையும்.
மேலும் உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறியாகும்.
உடல், மனம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்யும் யோகா பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
வரலாறு
இக்கலை பதஞ்சலி முனிவரால் இந்தியாவில் தோன்றி வளர்ந்தது ஆகும். யோகாவின் தோற்ற காலம் 5000 வருடங்களுக்கு முன்னரானது என்ற கருத்து இருந்தாலும் விவாதத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது.
இது வேத காலத்திற்கு முற்பட்டதாக தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. சிந்து சமவெளி நாகரீகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் யோக அல்லது பொதுவான தியான நிலைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
யோகாவின் குறிக்கோள்
யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி மோட்சத்தை அடைவது வரை பல்வேறு வகைப்படும். ஒவ்வொரு சமயங்களும் ஒவ்வொரு விதமான குறிக்கோளுடன் யோகாவை பரிந்துரை செய்கின்றன.
சமணத்திலும் சைவத்திலும் யோகாவின் குறிக்கோள் உலகியல் துன்பங்களிலிருந்து பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல் ஆகும்.
பிரம்மத்தில் ஐக்கியம் இதன் குறிக்கோள் ஆகும். மஹாபாரதத்தில் இதன் குறிக்கோள் ஆத்மாவை உணர்தல் அல்லது பிரம்ம லோகத்தில் பிரம்மனாக நுழைதல் ஆகும்.
யோகாவின் பயன்கள்
முறையாக யோகா செய்வதனால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுலடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
மரணத்தை தள்ளிப் போடுகின்றது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றது.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது. மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாட்டையும் வளர்க்க உதவுகின்றது.
யோகா தினம்
யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ம் திகதி அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகின்றது.
முதல் முறையாக 2015 ஆம் ஆண்டு ஜுன் 21ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் ஆண்டின் ஒரு நாளை சர்வதேச யோகா நாளாக அறிவிக்க வேண்டும் என வலியுருத்தியதற்கு அமைவாகவே யோகா தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
முடிவுரை
சமீப காலமாக யோகாவின் முக்கியத்துவத்தை பல நாடுகளும் புரிந்து கொண்டு இந்த வாழ்க்கை முறையினை பற்றி தெரிந்து கொள்ள இந்தியாவின் உதவியினை நாடுகின்றன.
யோகா நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பயிற்சியாகும். குறைந்தது சில யோகாசனங்களையாவது நாம் அன்றாடம் செய்வது நமக்கு நீடித்த நலத்தினை அளிக்கும்.
You May Also Like : |
---|
உடல் நலமும் உள நலமும் கட்டுரை |
உடற்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை |