ஒரு நாடானது முன்னேற்றத்தினை நோக்கி செல்வதற்கான பிரதான காரணங்களில் ஒன்றே கல்வியாகும். கல்வியோடு ஒன்றிணைந்த ஒன்றாக ஒழுக்கமானது காணப்படுகின்றது.
நாம் கற்கும் கல்வியானது ஒழுக்கத்தை கற்றுத் தருகின்ற கல்வியாக காணப்படுகின்ற போதே அது எம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்.
கல்வியும் ஒழுக்கமும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கல்வி மற்றும் ஒழுக்கத்துக்கிடையேயான தொடர்பு
- கல்வியின் முக்கியத்துவம்
- ஒழுக்கத்தின் மகத்துவம்
- இன்றைய கல்விமுறையில் ஒழுக்கம்
- முடிவுரை
முன்னுரை
திருவள்ளுவரானவர் தனது குறளில் ஒழுக்கநெறியை பின்பற்றி சமூகத்தோடு பொருந்தி வாழாதோர் தான் எவ்வளவு தான் கற்றிருந்தாலும் அவர்கள் அறிவில்லாதவர்களே என்று குறிப்பிடுவதானது கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் இடையேயான தொடர்பினையே தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இக்கட்டுரையில் கல்வியும் ஒழுக்கமும் பற்றி காணலாம்.
கல்வி மற்றும் ஒழுக்கத்துக்கிடையேயான தொடர்பு
கல்வியின் முதல் நோக்கமே ஒழுக்கத்தை பேணுவதாகும். அந்தவகையில்
“மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்”
என்ற குறளானது ஒழுக்கத்தையே வலியுறுத்துகின்றது. மேலும் நேமண்ட் எனும் ஆசிரியரானவர் கல்வி பற்றி கூறுகையில் கல்வியின் இறுதிநோக்கம் பிரிவின்மையையும் தூய ஒழுக்கத்தையும் கட்டியெழுப்புவதே ஆகும் என்கின்றார்.
அதேபோன்று சுவாமி விபுலனந்தர் அவர்கள் மனிதனை தூயவனாக உருவாக்குவதே கல்வியின் நோக்கமாகும் என்று குறிப்பிடுவதானது கல்வி மற்றும் ஒழுக்கத்தின் தொடர்பினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
கல்வியின் முக்கியத்துவம்
இன்று மனிதனானவன் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கான ஒரு முக்கியமான காரணம் கல்வியாகும். அதாவது அரும்பரிசு ஆயிரம் கொடுத்தாலும் பிள்ளைக்கு பெரும் பரிசு கல்வி என்ற கூற்றானது கல்வியின் முக்கியத்துவத்தினையே வெளிப்படுத்துகின்றது.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்ற குறளானது பிறப்பு முதல் இறப்பு வரை தனக்கு துணையாக வருவது நாம் கற்ற கல்வியே என்பதனையே சுட்டிநிற்கின்றது.
எமது எதிர்கால வாழ்வானது சிறப்புற்று விளங்க முக்கியத்துவமிக்கதொன்றாக திகழ்வது கல்வியாகும்.
ஒழுக்கத்தின் மகத்துவம்
மனிதனானவன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டுமாயின் ஒழுக்கத்தை பேணுவது அவசியமாகும்.
“ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்” என்பதினூடாக ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விடவும் முக்கியமானதொன்றாகவே காணப்படுகின்றது.
மேலும் ஒழுக்கமுடைய ஒருவனே வாழ்வில் நல்வழியில் செல்லக்கூடியவனாவான். அதாவது பிறருக்கு தீங்கு விளைவிக்காமை, பிறரை மதித்து நடத்தல், அறவழியில் நடத்தல், முதியோரை மதித்தல் என பல்வேறு ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிப்பதன் மூலமே எமது வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும்.
ஒவ்வொரு தனிமனிதனும் தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதொரு முக்கியமான பண்பே ஒழுக்கமாகும்.
இன்றைய கல்விமுறையில் ஒழுக்கம்
ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை நாம் கற்கும் கல்வியில் முதன்மையானதொன்றாகவே ஒழுக்கமானது காணப்படுகின்றது.
இன்று பாடசாலைகளில் பிரதானமான கல்வியாக ஒழுக்கமே திகழ்கின்றது என்றவகையில் ஆசிரியர்களுடனான ஒழுக்கம், பணிவான நடத்தை, சக மாணவர்களுடனான உறவு என அனைத்திலும் ஒழுக்கத்தை கற்றுத் தரக்கூடியதாகவே கல்விமுறைகள் காணப்படுகின்றன.
மேலும் ஒழுக்கத்தை கற்று தரும் கல்வி முறையானது சிறந்த முடிவுகளை எடுப்பதற்கும், எப்படி பிறரை மதித்து நடக்க வேண்டும் என்பதனையும் மாணவர்களுக்கு எடுத்தியம்பக்கூடியதாகவே திகழ்கின்றது.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதனை முன்னிறுத்தி ஒழுக்கம் சார்ந்த கல்வியை புகட்டுவதன் மூலமே மாணவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.
முடிவுரை
இன்றைய சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் இடம்பெறுவதனை தடுப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையே ஒழுக்கத்தை பேணுவதாகும் என்றவகையில் கல்வியையும் ஒழுக்கத்தையும் அனைவரும் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் கல்வி முறைகளில் ஒழுக்க கல்வியை போதிப்பதனூடாகவே எம்மால் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும்.
You May Also Like: