அறம் பற்றிய கட்டுரை

Aram Katturai In Tamil

இந்த பதிவில் நற்பண்புகளில் ஒன்றான “அறம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

அறத்தினைப் பின்டுபற்றினால் மதிப்பும் செல்வமும் வளரும். நல் வழியில் செல்வதற்கு அறம் துணை நிற்கின்றது.

அறம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறம் என்பது
  3. திருக்குறள் கூறும் அறக்கருத்துக்கள்
  4. சங்க இலக்கியங்களில் அறம்
  5. அறத்தின் நன்மை
  6. முடிவுரை

முன்னுரை

நம் முன்னோர்கள் அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்ந்தவர்கள். அனைவரும் வாழ்வில் நற்பண்புகளை கடைப்பிடித்து வாழ வேண்டும்.

ஒருவரின் நற்பண்புகளே மற்றவர்களிடத்தில் உங்களை மேன்மையுள்ளவராக அடையாளப்படுத்தும்.

வாழ்வில் எப்போதும் அறத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நம் முன்னோர்கள் எமக்கு வலியுறுத்தியுள்ளனர். அறம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அறம் என்பது

அறம் எனும் சொல்லுக்கு கடமை, கற்பு, புண்ணியம், தர்மம், கண்ணியம், நல்வினை என அகராதி பல பொருள் உரைக்கின்றது.

தமிழில் ‘அறம்’ என்ற சொல் தோன்றுவதற்கு முன்பு, பழமொழி, முதுமொழி, மூதுரை, வாயுறை வாழ்த்து, நன்று, நன்றி, நன்மை, நல்லது, முறை, முறைமை, நயம், நன்னெறி, நெறி, ஒழுக்கம், கடமை போன்ற சொற்கள் கையாளப்பட்டு வந்துள்ளன.

அறம் என்பது நல்லவை செய்தலும் அல்லவை கடிதலும் எனலாம். அந்த வகையில் மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியை அறம் எனக்கூறலாம்.

திருக்குறள் கூறும் அறக்கருத்துக்கள்

திருக்குறள் எல்லாக் காலத்திலும் மனித வாழ்வுக்கு ஏற்றவாறு அறக்கருத்துக்களை இரண்டு வரிகளில் பதிவு செய்திருக்கும் உயரிய நூலாகும்.

வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம், துறவறம் எனப் பகுத்து இல்லறத்துக்கு முதன்மை கொடுத்து இருவகையாருக்கும் தனித்தனியாகவும் பொதுவாகவும் அறங்கள் கூறியுள்ளர்.

இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்றல், பணிவான பேச்சு, நன்றியறிதல், தன்னடக்கம், பொறாமையின்மை, பயனில பேசாமை, தீயன செய்ய மனம் கூசுதல், உலக நடைமுறையறிந்து செயல்படல், தக்கார்க்கு தல், அதன்வழித் தகுதியான புகழ் பெறல், இவை இல்லறத்தாரின் பண்புகளாக அமைகின்றன.

“நன்னயம் செய்து விடல்” “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்ற குறட்பாக்கள் சமுதாயத்தில் மக்கள் கூடி வாழத் தேவையான அறத்தைக் கூறுகின்றன.

சங்க இலக்கியங்களில் அறம்

சங்க இலக்கியங்களில் ‘அறம்’ என்ற கருத்தாக்கம் பரவலாக இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகத்தையும், புறத்தையும் பாடினாலும் அவற்றோடு அறத்தை இணைத்தே பாடியுள்ளனர்.

“அறநெறி இதுவென தெளிதல் வேண்டும்” என்பதனை ஐங்குறுநூற்றில் அறநெறி இதுவெனத் தெளிந்த என தெளிவுபடுத்தப்படுகின்றது.

அகநானூறில் “அறங்கடைப்படா வாழ்க்கை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நற்றிணையில் “அறனுமன்றே ஆக்கமும் தேயும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அறத்தோடு வாழ வேண்டும் என்பதனை புலவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அறத்தின் நன்மை

இவ்வுலகில் ஒருவனுக்கு அறம் செய்வதை காட்டிலும் மிகுந்த செல்வம் இல்லை. அறமானது அறிவு வரும்போது காக்கும் அழியாத துணையாகும். அறம் மனிதனின் ஆயுள் காலத்தை கூட்டும்.

அறத்தினைப் பின்டுபற்றினால் மதிப்பும் செல்வமும் வளரும். நல் வழியில் செல்வதற்கு துணை நிற்கின்றது. அறத்தினால் வாழ்வுக்கு நன்மை விளையும். மனிதனுடைய மலர்ச்சிக்கு பயனை தரும் ஒழுக்கம் மிகவும் பயனுடையதாகும்.

முடிவுரை

மனிதன் தன் வாழ்வில் அறத்தினைக் கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும். ஒழுக்கமுள்ள வாழ்வினை வாழ்ந்து வாழ்வில் வளம்பெற அறப்பண்புகளை நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் முன்னோர்கள் கூறிய அறக்கருத்துக்களை அறநூல்களிலிருந்து கற்று வாழ்வில் நலம்பெறுவோமாக!

You May Also Like:
அன்புடைமை பற்றிய கட்டுரை
திருக்குறளின் சிறப்புகள் கட்டுரை