இந்த பதிவில் “ஆசிரியர் பணியே அறப்பணி கட்டுரை” பதிவை காணலாம்.
தமது நலன்களை பாராது மாணவர்களின் எதிர்காலத்துக்காக சேவையாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.
ஆசிரியர் பணியே அறப்பணி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- முக்கியத்துவம்
- ஆசிரிய மாணவ பந்தம்
- சவால்கள்
- சமூக வளர்ச்சியில் பங்கு
- முடிவுரை
முன்னுரை
மாதா, பிதா, குரு தெய்வம் என்று கூறுவார்கள் அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் ஆசிரியர்களினுடைய பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அறியாமை இருளில் மூழ்கி கிடக்கும் மனிதனுக்கு அறிவை வழங்கும் புனிதமான காரியத்தை செய்பவர்களே ஆசிரியர்கள் ஆவர்.
இவ்வுலகத்தில் பிறந்த அனைவரும் கல்வியினை சிறந்த செல்வமாகவே கருதுகின்றனர் எனவே இதனை வழங்கும் ஆசிரியர்கள் இந்த சமூகத்தில் சிறந்த அந்தஸ்த்தை பெறுகின்றனர். இக்கட்டுரையில் ஆசிரியப்பணியின் சிறப்புகள் பற்றி காண்போம்.
முக்கியத்துவம்
“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்பது ஒளவையாரின் வாக்கு அத்தகைய கல்வியினை நமக்கு போதிப்பவர்கள் ஆசிரியர்கள் ஆவர். அவர்கள் இந்தப்பணியை ஆற்றாவிட்டால் இங்கே மனிதர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. இதனால் தான் “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று கூறுகிறார்கள்.
ஆசிரியர்கள் தம்மை தேடி வருகின்ற மாணவர்களுக்கு சிறந்த கல்வியினையும் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களையும் கற்று கொடுத்து அவர்களின் வாழ்வினை சிறக்க செய்கின்றனர்.
இதனால் தாய் தந்தையர்களுக்கு அடுத்த படியாக இவர்கள் முக்கியமானவர்களாக நமது சமூகத்தால் பார்க்கப்படுகின்றனர்.
ஆசிரிய மாணவ பந்தம்
“குரு இல்லாத வித்தை பாழ்” என்று கூறுவார்கள் வரலாற்று காலங்களில் இருந்தே ஒரு சிறந்த ஆசிரியருக்கும் அவரிடம் பணிவன்புடன் கல்வி கற்கும் சீடர்களுக்கும் இடையே ஒரு மானசீகமான பிணைப்பானது காணப்படுகின்றது.
முன்பு மாணவர்கள் குருவினுடைய இல்லத்தில் தங்கியிருந்து கல்விகளையும் வித்தைகளையும் பயிலும் குருகுல கல்விமுறையானது காணப்பட்டது.
இதனால் மாணவர்கள் ஆசிரியரின் மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்டிருப்பார்கள் அது போல குருவும் தனது மாணவர்களை தமது குழந்தைகளாக கருதி நல்ல கல்வியை வழங்குவார் என்பது மரபு.
சவால்கள்
கற்பித்தல் பணியானது இன்றைய காலத்தில் சற்று சவால் நிறைந்த ஒன்றாகவே மாறியுள்ளது.
இன்றைய காலத்து மாணவர்கள் தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தாலும் சினிமா மற்றும் இணையத்தின் தாக்கத்தால் கல்வி ஒழுக்கங்களில் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்.
இன்றைய காலத்து குழந்தைகளிடம் ஆசிரியர்கள் கண்டிப்பாக இருக்க முடியாமையால் அவர்களது சுய ஒழுக்கம் மற்றும் கல்வி என்பன குறைவடைந்து வருகின்றன.
இதனால் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியாத சூழ்நிலையானது ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.
சமூக வளர்ச்சியில் பங்கு
“விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்பது போல இன்றைய குழந்தைகள் தான் வளர்ந்து நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப போகிறார்கள்.
ஒவ்வொரு தலைசிறந்த ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவர்களும் தான் நாளைக்கு இந்த சமூகத்தை மாற்ற போகும் சிறந்த சிந்தனையாளர்களாகவும் துறைசார் வல்லுனர்களாகவும் வரப்போகின்றனர்.
எனவே அவர்களது ஆக்கபூர்வமான கல்வி மற்றும் சிந்தனை நமது சமூகத்தை நல்வழிக்கு கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
முடிவுரை
ஒரு ஆசிரியரின் வாழ்வானது தியாகங்களால் நிறைந்தது. தன்னை நம்பி வரும் மாணவர்களை உயர்த்தி விடக்கூடிய ஒரு ஏணியாக அவர்கள் திகழ்கிறார்கள்.
தமது நலன்களை பாராது மாணவர்களின் எதிர்காலத்துக்காக சேவையாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.
மாணவர்கள் வெறுமனே ஏட்டு கல்வியினை மட்டும் பெற்று கொள்வதோடு நில்லாமல் சமூக பொறுப்புள்ள ஒரு வாழ்க்கையினை நோக்கி முன்னேறுவது மாணவர்களுடைய தலையாய கடமையாக உள்ளது.
You May Also Like : |
---|
ஆசிரியர் பற்றிய கட்டுரை |
ஆசிரியர் பணி கட்டுரை |