சங்க இலக்கியத்தில் அறம் கட்டுரை

sanga ilakkiyathil aram katturai in tamil

இந்த பதிவில் “சங்க இலக்கியத்தில் அறம் கட்டுரை” பதிவை காணலாம்.

அன்றைய காலத்து மக்களின் வாழ்வியலும் இன்றைய காலத்து மக்கள் வாழ்வியலும் வெகுவாக மாறி விட்டது.

சங்க இலக்கியத்தில் அறம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அறமும் வாழ்வியலும்
  • சங்க இலக்கியங்களில் அறம்
  • அறத்தின் பெருமை
  • அன்றும் இன்றும்
  • முடிவுரை

முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் காலமாகிய சங்ககாலம் தமிழர்கள் வாழ்வியலிற்கு அடிநாதமாக விளங்கியது எனலாம்.

அக்காலத்து மன்னர்கள் அறம் வழுவாது ஆட்சி நடாத்தினார்கள் சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்தார்கள். மக்களும் அறத்தை பின்பற்றியே வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கு சான்றாக சங்ககாலத்து இலக்கியங்கள் காணப்படுகின்றன. தமிழர்களின் தொன்மையான தனித்துவமான கலாச்சார விழுமியங்களை நாம் இதன் மூலமாக உலகுக்கு வெளிப்படுத்த முடியும்.

அறமும் வாழ்வியலும்

“ஈயென் இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனிலும் இழிந்தன்று” என்கிறார் சங்கப் புலவர் கழைதின் யானையார் அவர்கள் இதன் மூலமாக ஈதலின் சிறப்பை விளக்குகின்றார்.

இவ்வாறு தமிழர்களின் வாழ்வியலோடு அறம் செம்புலப் பெயல்நீர் போல இரண்டற கலந்த ஒன்றாகும்.

அக்கால மக்கள் அறம் தவறி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணி வாழ்ந்தார்கள் இத்தகைய ஈகை பண்புகள் நிறைந்த மக்கள் பற்றி சங்க இலக்கியங்கள் அழகாக வெளிப்படுத்துகின்றன.

உலக வரலாற்றில் ஒழுக்கமும் அறமும் உயர்ந்தோங்கி விளங்கிய ஒரே கலாச்சாரம் தமிழ் என்பது என்றும் பெருமைக்குரியதாகும்.

சங்க இலக்கியங்களில் அறம்

சங்க காலத்து புலவர்கள் அறக்கருத்துக்களை பாடல்கள் வழியாக மக்களுக்கு எடுத்து கூறியிருந்தார்கள் மன்னனுக்கும் மக்களுக்கும் அவை வழிகாட்டுபவையாக இருந்தன.

தமிழ் மூதாட்டி ஒளவையார் “கொடையும் தலையும் பிறவிக்குணம்” என்று பாடுகிறார். சங்கப் பாடல்களில் நெல்லிக்கனி ஈந்த அதியமானின் தமிழ் பற்றும் கொடைத்திறனும் உலகம் அறிந்ததே.

அவ்வாறு அக்காலத்து மன்னர்களில் “பாரி, காரி, ஓரி, ஆய், நள்ளி, பேகன்” எனும் தலை சிறந்த வள்ளல்கள் வாழ்ந்த வரலாறுகள் பற்றி அறியலாம். இவர்கள் அறம் தவறாது நல்லவழியில் தமது மக்களை ஆண்டனர் என்பது வரலாறு.

அறத்தின் பெருமை

அறத்தினால் விளைவது தான் உண்மையான இன்பம் என்பதை அக்கால மக்களின் வாழ்வியல் விளக்கி நிற்கின்றது.

அக்கால மக்கள் தானமும் தவமும் இயற்றி தரணியில் தமிழை போற்றி உண்மை பேசி பொய்மை ஒழித்து வீரத்துடன் விளங்கினார்கள் மனதில் உரம் நிறைந்த உன்னத வாழ்வினை வாழ்ந்தார்கள்.

இதற்கு சான்றாக முல்லைக்கு தேர்கொடுத்த பாரியும் ஈதலே இன்பம் என வாழ்ந்த இளையான் குடிமாறநாயனார் போன்றவர்கள் வரலாறு சான்றாகும்.

அன்றும் இன்றும்

அன்றைய காலத்து மக்களின் வாழ்வியலும் இன்றைய காலத்து மக்கள் வாழ்வியலும் வெகுவாக மாறி விட்டது. காலமாற்றம் மக்களை அறத்தில் இருந்து வெகுவாக விலக செய்து விட்டது.

பொய்மையை போற்றி வாழும் போலியான வாழ்வினை இன்றுள்ள மனிதர்கள் வாழ்வது நமது பெருமை மிக்க தமிழ் குடிக்கு நாம் செய்யும் அவதூறாகும்.

முடிவுரை

நமது முன்னோர்கள் உலகுக்கு முன்னுதாரணமாக அறவழியில் நடந்து காட்டினார்கள். நாமும் அவ்வழியை பின்பற்றி அறத்தின் வழி நடந்து “யாதுமூரே யாவரும் கேளீர்” என்று இந்த உலகின் மூத்த குடிகளாக வாழ்ந்து பிறரையும் வாழ்வித்து வாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோமாக.

You May Also Like:
அறம் பற்றிய கட்டுரை
அறம் செய்ய விரும்பு கட்டுரை